கொழும்பு குப்பையை புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு | தினகரன்

கொழும்பு குப்பையை புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காடு பிரதேசத்தில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் மூவின மக்களும் ஒன்று சேர்ந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். புத்தளம் கரைத்தீவு மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசல், சேரக்குளி சென் பீட்டர்ஸ் தேவாலயம், எரிக்கலம்வில்லு விகாரை ஆகியன ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

நேற்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்று௯டிய கரைத்தீவு முஸ்லிம் மக்கள் கொழும்பிலிருந்து குப்பைகளை புகையிரதம் ஊடாக புத்தளம் அருவக்காடு பிரதேசத்தில் கொட்டும் திட்டத்திற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

அத்துடன், '' விஜயன் கால் பதித்த வரலாற்று பூமியில் குப்பை கொட்டுவதா'', ''எமது கடல் வளங்களை அழிக்கும் நச்சுப் பதார்த்தங்கள் கலந்த கொழும்பு குப்பைகளை எமது மண்ணில் கொட்டுவதா” '' பொன் விளையும் எமது பூமியை குப்பை மேடாக்குவதா'' எனும் பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிக் கொண்டு சேரக்குளி சென் பீட்டர்ஸ் தேவாலயம் வரை ஊர்வலமாகவும் சென்றனர். இதனையடுத்து, கரைத்தீவு, சேரக்குழி மற்றும் எரிக்கலம்வில்லு ஆகிய பகுதியிலுள்ள முஸ்லிம், பௌத்த மற்றும் கிறிஸ்தவ மக்கள் சேரக்குளி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு முன்னால் ஒன்று ௯டி இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் உள்ள பாரிய குழிகளில் கொட்டும் அரசின் திட்டத்தினால் அறுவக்காடு பிரதேசத்திற்கு மிக பக்கத்திலுள்ள கிராமமான கரைத்தீவு கிராம மக்களே பாதிப்புக்களை எதிர்நோக்கவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மதத் தலைவர்கள் இங்கு உரையாற்றும் போது குறிப்பிட்டனர்.

எனவே, இந்த திட்டத்தினால் கடற்தொழிலாளிகள், விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், முழுச் சூழலுக்கும் அச்சுறுத்தலாகவும் அமையும் என்பதாலும் இந்த திட்டத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமாறும் மூவின மதத் தலைவர்களும் ஜனாதிபதி பிரதமர் மற்றும் சுற்றாடல் வள அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...