ஐ.நாவின் புதிய அணு ஆயுத தடை ஒப்பந்தம்: 51 நாடுகள் கைச்சாத்து | தினகரன்

ஐ.நாவின் புதிய அணு ஆயுத தடை ஒப்பந்தம்: 51 நாடுகள் கைச்சாத்து

வட கொரியாவின் அணு ஆயுத பிரச்சினை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அணு ஆயுதத்தை முற்றாக தடை செய்யும் புதிய உடன்படிக்கை ஒன்றில் 51 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. எனினும் அமெரிக்கா உட்பட ஏனைய அணு வல்லரசு நாடுகள் இந்த உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளன.

ஆஸ்திரியா, பிரேஸில், மெக்சிகோ, தென்னாபிரிக்கா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் தலைமையில் கடந்த ஜுலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து கொண்டுவரப்பட்ட இந்த உடன்படிக்கையை ஐக்கிய நாடுகளின் 122 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன. அணு ஆயுதம் வைத்திருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா ஆகிய எட்டு நாடுகளுடன் இஸ்ரேலும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை.

இந்த உடன்படிக்கைக்கு கண்டனம் வெளியிட்டிருக்கும் நேட்டோ, இது பிளவுகளை உருவாக்குவதன் மூலம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா பொதுச் சபை கூட்டத்துக்கு வேறான ஒரு நிகழ்வாகவே உலக தலைவர்கள் நேற்று முன்தினம் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இதனை வரவேற்றிருக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரஸ், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலான காலத்தில் பல நாடுகளுக்கு இடையில் கைச்சாத்தாகும் முதல் ஆயுத தடுப்பு உடன்படிக்கை என கூறியுள்ளார்.

உலகில் 15,000 அணு குண்டுகள் கையிருப்பில் உள்ள நிலையில் அவைகளை அகற்றுவதற்கு பாரிய பணிகள் தேவைப்படுவதாக குடெரஸ் கூறினார்.

அணு ஆயுதம் பாதுகாப்பிற்கு தவிர்க்க முடியாதது என்ற கருத்தை நேட்டோ அங்கத்துவம் பெறாத ஒருசில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவின் வெளியுறவு அமைச்சர் செபஸ்டியன் குர்ஸ் நிராகரித்தார். “உலகின் தற்போதைய சவால்களை பார்க்கும்போது இந்த கருத்து பொய்யானது மட்டுமல்ல ஆபத்தானதாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் உலகில் அணு ஆயுத தாக்குதலுக்கு முகம்கொடுத்த ஒரே நாடான ஜப்பான் இந்த உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது. எனினும் அண்டை நாடான வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் ஜப்பானின் பிரதான இலக்காக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தம்மிடம் உள்ள அணு ஆயுத கையிருப்பு அணு ஆயுத தாக்குதல் ஒன்றை தடுப்பதாக வாதிடும் அணு வல்லரசு நாடுகள் அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதாக வலியுறுத்துகின்றன.

1970 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கை அணு ஆயுத பரவலை தடுப்பதாகும். இதில் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கிறது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...