லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை | தினகரன்

லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை

 
சில் துணி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.
 
சில் துணி வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட குறித்த இருவர் சார்பிலும் அவர்களது வழக்கறிஞர்களால், அத்தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கி, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்களை விடுவிக்குமாறு கோரி, கடந்த திங்கட்கிழமை (11) மேன்முறையீட்டு நீதிமன்றில் 2 மேன்முறையீடுகள் மேற்கொள்ளப்பட்டது.
 
பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பில் ஆட்சேபணை இருப்பின் இன்றைய தினம் (20) முன்வைக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
 
இதனை அடுத்து, குறித்த வழக்கு இன்றைய தினம் (20) உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர்களது மேன்முறையீட்டை கருத்திற்கொண்டு அவர்களுக்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
 
தலா ரூபா ஒரு இலட்சம் ரொக்கம், தலா ரூபா 10 இலட்சம் கொண்ட மூன்று சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதோடு, அவர்களில் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் மற்றையவர் அரசாங்க ஊழியராக இருக்க வேண்டும் எனவும் நீதவான் நிபந்தனை விதித்தார்.
 
அத்துடன், அவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், அவர்களது கடவுச்சீட்டுகளை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் எனவும், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டார்.
 
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின்போது ரூபா 600 மில்லியன் நிதியில் நாட்டின் பல்வேறு பௌத்த விகாரைகளிலுள்ள பக்தர்களுக்கு 'சில்' துணிகள் விநியோகிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதையடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRC) முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகிய இருவரும் கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
குறித்த வழக்கு கடந்த செப்டெம்பர் 07 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதாக அறிவிக்கப்பட்டது.
 
அதனடிப்படையில் இருவருக்கும் மூன்று வருட கடூழிய சிறை, தலா ரூ 20 இலட்சம் அபராதம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தலா ரூபா 50 மில்லியன் நஷ்டஈட்டினையும் செலுத்துமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...