Friday, March 29, 2024
Home » காசாவில் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் உக்கிரம்: உயிரிழப்பு வேகமாக அதிகரிப்பு
தரைவழி தாக்குதலுக்கு தயாராக

காசாவில் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் உக்கிரம்: உயிரிழப்பு வேகமாக அதிகரிப்பு

by damith
October 23, 2023 6:00 am 0 comment

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வரும் இஸ்ரேல் எச்சரிக்கைக்குப் பின்னர் காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் முழு முற்றுகையில் உள்ள காசாவில் இடம்பெற்ற புதிய வான் தாக்குதல்களில் 50க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. இதன்படி அங்கு கொல்லப்பட்டுள்ள பலஸ்தீனர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உட்பட 4600ஐ தாண்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்திருப்பதோடு 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

தரைவழி தாக்குதல் ஒன்றை ஆரம்பிக்கும்போது துருப்புகளுக்கான ஆபத்தை குறைக்கும் வகையில் வான் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் அட்மிரல் டானியல் ஹகரி தெரிவித்துள்ளார்.

காசாவின் வடக்கில் இருக்கும் மக்கள் தெற்கை நோக்கி வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்து வரும் நிலையில் காசா மக்கள் தொகையில் பாதிப் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் வெளியேறுவதற்கு விருப்பம் இன்றியும் வெளியேற முடியாத நிலையிலும் தொடர்ந்து நூற்றுக் கணக்கானோர் வடக்கில் காசா நகரைச் சூழ இருந்து வருகின்றனர்.

காசா எல்லை பகுதியில் அயிரக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் டாங்கிகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த முன்னரங்கு பகுதிகளுக்கு இஸ்ரேலிய இராணுவ தளபதிகள் விஜயம் மேற்கொண்டு தரைவழி தாக்குதல் ஒன்றுக்காக படைகளை அணிதிரட்டி வருகின்றனர்.

‘காசா சனநெரிசல் மிக்க பகுதி, அங்கு எதிரிகள் பல விடயங்களுக்கு தயாராக இருக்கக்கூடும். ஆனால் அவர்களுக்கு எதிரான தயாராக இருக்க வேண்டும்’ என்று தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி இராணுவத்தினரிடம் கடந்த சனிக்கிழமை (21) குறிப்பிட்டார்.

தரைவழி தாக்குதல் ஒன்றில் இஸ்ரேலிய துருப்புகள் ஹமாஸ் போராளிகள் பொறிகள் வைத்தும் சுரங்கப் பாதைகளை பயன்படுத்தியும் நடத்தும் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தல் இருப்பதோடு போராளிகளால் பிடித்துச் செல்லப்பட்டிருக்கும் பணயக்கைதிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.

கட்டாரின் மத்தியஸ்தத்தை அடுத்து இரு அமெரிக்கப் பணயக் கைதிகள் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டதோடு மேலும் பலர் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் காசா மக்களுக்கான உதவிகளை ஏற்றிய முதல் லொறி வண்டி நேற்று முன்தினம் காசாவுக்கு அனுப்பப்பட்டது. எனினும் இவ்வாறான 20 லொறிகள் செல்வதற்கே அனுமதி கிடைத்துள்ளது. இது மனிதாபிமான பேரழிவு ஒன்றை சந்தித்திருக்கும் சாவில் ‘சமுத்திரத்தில் வீசப்பட்டது’ போன்றது என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்திலேயே இந்த உதவி லொறிகள் காசா செல்ல அனுமதி கிடைத்தது. இதன்படி உணவு, நீர் மற்றும் மருந்து பொருட்கள் காசாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டபோதும் எரிபொருட்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

எனினும் காசாவுக்கான தேவை மிக அதிகமான இருப்பதாக ஐ.நா அமைப்புகள் எச்சரித்துள்ளன. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத காசாவுக்கான ஒரே வாயிலான எகிப்தி ரபா எல்லைக் கடவைக்கு அப்பால் எகிப்துப் பக்கமாக உதவிப் பொருட்களுடன் தொடர்ந்தும் 100க்கும் அதிகமான லொறிகள் காத்திருக்கின்றன.

காசாவுக்குள் நுழைந்திருக்கும் பொருட்கள் தாக்குதலுக்கு முன்னர் காசாவுக்கு தினசரி வந்த இறக்குமதிகளில் 4 வீதம் மாத்திரமாகும் என்று ஐ.நா மனிதாபிமான அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பெரும்பாலான மக்கள் மனிதாபிமான உதவிகளை நம்பி இருப்பதாகவும் அது வலியுறுத்தியுள்ளது.

காசா மற்றும் இஸ்ரேல் போர் தொடர்பில் கடந்த சனிக்கிழமை எகிப்தில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் பேசிய ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரஸ், இந்த பயங்கரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார்.

எனினும் மாநாட்டில் பங்கேற்ற மேற்குலக அதிகாரிகள் ஹமாஸை கண்டிக்க வலியுறுத்தியதோடு, அரபு தரப்பினர் உலகத் தலைவர்களை விமர்சித்த நிலையில் எந்த கூட்டு அறிக்கையும் இன்றி இந்த மாநாடு முடிவுக்கு வந்தது.

காசாவில் குண்டு மழையால் அதிர்ச்சி அடைந்திருக்கும் மக்கள் எங்கே போவது அல்லது எப்படி தமது குடும்பத்தை பாதுகாப்பது என்று தெரியாதிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். “எனது பயங்கர கனவுகளில் கூட இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று அங்குள்ள நிலைமை பற்றி மத்திய காசாவைச் சேர்ந்த ரமி அபூ வஸ்னா தெரிவித்துள்ளார்.

குண்டு வீச்சின் தீவிரம் காரணமாக அங்குள்ள அடிப்படை அமைப்புகள் கூட இயங்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. குளிர் சேமிப்பகங்கள் இயங்காத நிலையில் காசா நகரில் பல டஜன் அடையாளம் காணப்படாத உடல்கள் பாரிய புதைகுழியில் புதைக்கப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேலின் லெபனான எல்லையில் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. லெபனானை போருக்கு தள்ள வேண்டாம் என்று ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது.

‘ஹிஸ்புல்லா மிக மிக பயங்கரமான ஆட்டத்தை ஆடி வருகிறது. அவர்கள் நிலைமையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் தாக்குதல்களை நாம் பார்த்து வருகிறோம்’ என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ஜொனதன் கொன்ரிகஸ் தெரிவித்துள்ளார்.

மோதலில் தலையிட வேண்டாம் என்று மேற்குல தலைவர்கள் ஹிஸ்புல்லாவை எச்சரித்தபோதும் போரில் பங்கேற்க தயாராக இருப்பதாக அந்த அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் குறிப்பிட்டுள்ளார். ‘எங்களின் தலையீட்டுக்கான அழைப்பு வந்தால் நாம் அதனைச் செய்வோம்’ என்று நயீம் கஸ்ஸாம் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் வடக்கில் லெபனானுக்கு அருகில் இருக்கும் மேலும் பலரை வெளியேற்றி இருப்பதோடு இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் இருக்கும் சுமார் 4000 லெபனானியர்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT