Friday, April 19, 2024
Home » மஹீஷ் தீக்ஷனவுக்கும் உபாதை

மஹீஷ் தீக்ஷனவுக்கும் உபாதை

by damith
October 23, 2023 6:00 am 0 comment

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன பின்தொடை பகுதியில் உபாதையால் அவதிப்பட்டு வருவதை இலங்கை அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் பியல் விஜேதுங்க உறுதி செய்துள்ளார்.

நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய லக்னோவில் நேற்று முன்தினம் (21) நடைபெற்ற போட்டியின்போதே அவர் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். தீக்ஷன இந்தப் போட்டியில் 10 ஓவர்களையும் வீசி இருந்தார். 44 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த அவர் நெதர்லாந்து அணித் தலைவர் ஸ்கொட் எட்வட்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார்.

எனினும் அவர் கடந்த சில வாரங்களாக அவதிப் பட்டு வரும் வலது பின்தொடை பகுதி காயத்தால் மீண்டும் வலியை உயர்ந்துள்ளார். இதனால் போட்டியின்போது அதனை சரிசெய்ய முயல்வதை காண முடிந்தது.

“அவர் எம்.ஆர்.ஐ. சோதனைக்கு அனுப்பப்பட்டு காயத்தின் தீவிரம் தொடர்பில் கண்டறியப்படும்” என்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விஜேதுங்க தெரிவித்தார்.

தீக்ஷனவின் பின்தொடைப் பகுதியில் உணரப்படும் காயமானது ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போதே முதல் முறை ஏற்பட்டது. இதனால் அவர் அந்தத் தொடரில் இறுதிப் போட்டியில் ஆடவில்லை. உலகக் கிண்ணத்தில் அவர் பங்கேற்பதிலும் சந்தேகம் இருந்து வந்தது. எனினும் இந்தியா சென்ற அவர் இலங்கை அணி ஆடிய முதலாவது உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கவில்லை.

அவர் தொடர்ந்து இலங்கை அணிக்கு திரும்பியபோதும் வழக்கமான திறமையை வெளிப்படுத்தத் தவறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை ஆடிய மூன்று உலகக் கிண்ண போட்டிகளிலும் 152 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையே வீழ்த்தினார். இந்நிலையில் மறுத்துவ சோதனைக்கு பின்னரே உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி ஆடும் அடுத்த போட்டியில் அவர் பங்கேற்பது உறுதி செய்யப்படவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி தொடர்ந்து உபாதைகளை எதிர்கொண்டு வருகிறது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர ஆகியோர் காயத்தால் உலகக் கிண்ணத்தில் இடம்பெறவில்லை. அணித் தலைவர் தசுன் ஷானக்க காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் மேலதிக வீரராகச் சென்ற சாமிக்க கருணாரத்ன அணியில் சேர்க்கப்பட்டார்.

இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீச பதிரணவின் பந்துவீசும் கையின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பத்து நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தசுன் ஷானக்க மேலதிக வீரராக இந்தியாவில் இலங்கை அணியுடன் நீடிப்பதோடு உடல் தகுதியை உறுதி செய்திருக்கும் துஷ்மன்த சமீரவுடன் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸும் மேலதிக வீரர்களாக இலங்கை அணியுடன் இணைந்துள்ளனர்.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி தனது ஐந்தாவது லீக் போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை (26) பெங்களுரில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT