Friday, April 26, 2024
Home » நகரிலுள்ள வர்த்தகர்களை வலுவூட்டும் விசேட கருத்தரங்கு
குருநாகல் இஸ்லாமிய வர்த்தக சங்க ஏற்பாட்டில்

நகரிலுள்ள வர்த்தகர்களை வலுவூட்டும் விசேட கருத்தரங்கு

பெரும் எண்ணிக்கையிலான வர்த்தகர்கள் பங்கேற்பு

by damith
October 23, 2023 11:19 am 0 comment

தருநாகல் நகரிலுள்ள வர்த்தகர்களை வலுவூட்டும் விசேட கருத்தரங்கொன்று அண்மையில் குருநாகல் கூட்டுறவு நிலைய கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் எம். வை. எம். கியாஸ் (ஜே. பி) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம வளவாளராக பாசிர் மொஹிடீன் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் தொழிலதிபர் டி. எஸ். எம். நவாஸ் உள்ளிட்ட வர்த்தகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது முன்னாள் குருநாகல் இஸ்லாமிய வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.எம்.எஸ்.எம்.எம். ராயிஸ் கருத்துரையினையும் செயலாளர் எம். எல். எம். மித்லாஜ் நன்றி உரையினையும் தொகுப்பினை குருநாகல் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ஏ. எம். இர்பான் ஆகியோர் நிகழ்த்தினர்.

இதில் குருநாகல் இஸ்லாமிய வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் குருநாகல் நகர் வர்த்தகப் பிரமுகர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து சிறப்பித்தனர்.

இதில் பிரதான வளவாளராகக் கலந்து கொண்ட பாசிர் முஹிடீன் இந்நிகழ்வில் உரையாற்றும் போது; ஒரு வியாபாரம் வெற்றியடைய வேண்டுமென்றால் முதலாவது தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தன்னை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதான் தனது வியாபாரத்தை முறையாக செய்து கொண்டு போகலாம். பெரும்பாலும் எல்லோரும் தான் வியாபாரத்தில் காட்டுகின்ற கரிசனையை தன்னை வளர்த்துக் கொள்ளுகின்ற விடயத்தில் கரிசனை காட்ட மாட்டார்கள். குறிப்பாக எந்த வியாபாரமாக இருந்தாலும் அவை தொடர்பான விடயங்களைத் தேடிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் உண்மையான நியதி.

இந்த உலகம் ஒரு மனிதனுக்கு சாதனைக் களமாக அமைய வேண்டுமா அல்லது வியாபாரம் சாதனைக் களமாக அல்லது சந்தோசகமாக அமைய வேண்டுமாயின் முதலாவது எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் எந்தளவு எம்மை தயார்ப்படுத்திக் கொள்கின்றோமோ வியாபாரம் மிக இலகுவானதாக அமையும். வியாபாரத்தை வளர்ப்பதற்கு இலகுவானதாக இருக்கும். இந்த உலகம் சந்தோசமாகவும் சிறப்பாகவும் மாறுவதற்குக் காரணமாக அமையும்.

வியாபாரத்தில் சாதிக்கத்துடிப்பவனுக்கு பெரியதொரு கனவு இருக்க வேண்டும். அந்தக் கனவு அவர்களை விடப் பெரியதாக இருக்க வேண்டும். அந்தக் கனவை யாரெல்லாம் காண்கின்றாரோ அவை அவனை துரத்த ஆரம்பிக்கும். அடைய வேண்டிய இலக்கை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும். அதற்காக இரவு பகல் உழைக்க வேண்டும். யாரெல்லாம் பெரிய கனவுகளைக் கண்டார்களோ அவர்கள் தான் உலகில் பெரும் சாதனையாளர்களாக மாறியுள்ளார்கள்.

இந்த விடயம் பற்றி இஸ்லாமிய மார்க்கம் தெளிவாகச் சொல்லுகிறது. சொர்க்கத்தை அடைய வேண்டும். உயர்வான சொர்க்கத்தை அடைவதற்கு அதற்கான வழிகாட்டல்களையும் தந்துள்ளான். அதற்காக முயற்சிகளை சரியான முறையில் செய்தால் தான் அந்த உயர்ந்த சுவர்க்கத்தை அடைய முடியும்.

எவ்வளவுக்கு உச்சத்தைத் தொட முடியுமோ அந்தளவுக்குத் தேவையான மனிதனாகத்தான் இறைவன் ஒவ்வொரு மனிதனையும் திறமையாளனாகப் படைத்துள்ளான். எல்லா ஆற்றலும் ஒவ்வொரு மனிதனுக்கு இருக்கிறது. அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளத் தெரிய வேண்டும்.

பாரதியார் பாடும் போது; பெரிதிலும் பெரிதுகேள் என்று பாடியுள்ளார். அவர் இருப்பதிலும் பெரியவற்றைக் கேள் என்று பாடியுள்ளார். திருவள்ளுவர் இது பற்றி 5000 வருடங்களுக்கு முன்னர் ‘வெள்ளத்து அணையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்து அணையது உயர்வு’ என்று கூறியுள்ளார். குளத்தில் எந்தளவு நீர் இருக்கின்றதோ தாமரை வளரும் போது அதன் காம்பு உயரமாக வளரும். அதே மாதிரி ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் உயர்ச்சி அவர்களுடைய சிந்தனை எந்தளவு இருக்குமோ அந்தளவு தான் அவர்களால் வளர முடியும். அவர்களுடைய சிந்தனைகளுக்கப்பால் அவர்களால் வளர முடியாது. எப்பொழுது நீங்கள் உங்கள் கனவுகளைப் பெரிதாக காண முற்படுகின்றீர்களோ அப்பொழுது உங்களுடைய வெளிப்பாடுகள் தோற்றம் பெறும். இறைவன் நமக்குள் இவ்வளவு திறமைகளை வைத்திருந்துள்ளான் என்று அப்பொழுது தான் நமக்குத் தெரிய வரும்.

சாதாரண மனிதனில் இருந்து மெல்ல மெல்ல சாதனைக்குரிய மனிதனாக வளரத் தொடங்குவோம். எனவே இறைவனிடம் கையேந்திக் கேட்கும் போது எவர்களும் கஞ்சத்தனம் பட வேண்டியதில்லை. நிறைய கேட்டால் நிறையப் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த இலக்கை நோக்கி நாம் வாழும் சம நிலையான கால கட்டம் நமக்கு பல்வேறு சவால்கள் வந்தாலும் அவற்றைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள மாட்டோம். உலகத்தை ரசித்துக் கொண்டு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது எவ்வாறான தடைகள் இருந்தாலும் அவற்றை கண்டுகொள்ளாமல் பயணம் செய்யலாம். கடையில் நுகர்வோர் ஒருவர் ஏதோ விமர்சனம் செய்தால் அதைத் துடித்துக் கொண்டு கையாண்டு சமாளித்து விடும் ஆற்றல் தானாகவே வந்து விடும். காரணம்; நீண்ட பயணம் ஓர் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டி இருக்கிறது.

ஒரு மனிதன் வர்த்தகத் துறையில் தடுமாறுகிறான் எனில்; அந்த மனிதன் தன் வியாபாரத்தை எந்த மாதிரி பார்க்கிறார் என்றுதான் அங்கு புலப்படும். நமது இலக்கை நோக்கி எப்படிப் பயணம் செய்ய வேண்டும் என்று யோசிப்பார். இதற்கு எவ்வாறான வழிகளை வகுத்துக் கொள்ள வேண்டும். எப்படி திட்டத்தை அமுல் படுத்துவது என்று யோசிப்பார். அதாவது நுகர்வோர்களுடைய உறவை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும். ஊழியர்களை வைத்து எவ்வாறு நிறுவனத்தை வழிநடத்த வேண்டும். அவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் நாம் எங்கு போக வேண்டுமோ அங்குதான் போக வேண்டும். இடையில் பல்வேறு தடைகள் வரலாம். ஆதலால் நாம் வந்த வழியான கீழ் நோக்கிப் பார்க்காமல் மேல் நோக்கிப் பார்த்துச்செல்ல வேண்டும். எவ்வாறான சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளித்து தடை தாண்டிப் போவதுதான் முயற்சியாகவும் வெற்றியாகவும் அமையும்.

திட்டமிடாமல் தினசரி கடைக்கு நேரம் காலம் பாராது உழைத்துக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. காசோலைக்கு பணம் வைப்பிட வேண்டும் என்பதற்காக காலையில் எழுந்து ஓடுவதிலும் கடையைத் திறந்து வியாபாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று செயற்படுவதிலும் வேலையில்லை.

ஒரு மனிதனுடைய சிந்தனை பெரியதாக இருந்தால் நடப்பது எல்லாம் சரியான முறையில் நடந்து கொண்டிருக்கும். நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்று யோசித்துச் செயற்படும் போது அடுக்கடுக்காக வரும் எந்தவொரு சோதனையும் பெரியதாகத் தெரியாது.

ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஐந்து வருடத்தில் நாம் ஓர் இலக்கைத் தொட வேண்டும் என்ற ஒரு திட்டம் இருக்க வேண்டும். நான் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தை 50 பிள்ளைகளுடன் வாடகை இடத்தில் ஆரம்பித்தேன். நாங்கள் அப்பொழுது எங்கே போகப் போகின்றோம் என்று தெளிவாக கூறினோம். இன்று அதன் விளைவு 2400 பிள்ளைகள் உள்ளன. 12 ஆசிரியர் குழாம் இருந்தனர். இன்று 200 பேர் இருக்கிறார்கள். சொந்த இடங்களில் இயங்குகின்றன. ஒரு பாடசாலை இரு பாடசாலையாக மாறின. நீங்கள் ஐந்து விடயங்களை ஐந்து வருடத்தில் அடைய வேண்டும் என்ற திட்டத்தை எழுத்து வடிவில் வைத்து செயற்படுங்கள். நிச்சயமாக நினைப்பதெல்லாம் நடக்கும். இதைச் செய்யலாமா என்ற சந்தேகம் வர வேண்டும் என்ற அடிப்படையில் அந்த திட்டத்தை வகுக்க வேண்டும். அந்தத் திட்டங்கள் எழுத்து வடிவில் வர வேண்டும். அதனைப் பிரதி எடுத்து அச்சில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தினசரி எடுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு பார்க்கும் போது தான் என்ன செய்து கொண்டிருக்கின்றோம். நேரம் செலவு செய்யப்படுவது அநியாயம் என்று எமது சிந்தனை எம்மை தூண்டிக் கொண்டே இருக்கும்.

தூக்கம் அதிகம் என்றால் அதனைக் குறைத்துக் கொள்ளச் செய்யும். தேவையில்லாமல் கைபோனில் அதிகம் செலவு செய்து கொண்டிருந்தால் இவை எல்லாம் அவசியமற்றவை என்று தோன்றும். ஏனென்றால் நாம் அடைய வேண்டிய பெரிய பெரிய விடயங்கள் நிறைய இருக்கின்றன.

தலைக்கனம் இருக்கக் கூடாது. தலைக்கனத்திற்கும் தன் நம்பிக்கைக்கும் வித்தியாசம் நூலளவாகும். என்னால் முடியும் என்று சொன்னால் அதற்குப் பெயர் தன்நம்பிக்கை. என்னால் மட்டும்தான் செய்யலாம் என்று சொல்வது தலைக்கனம் ஆகும்.

சாந்தியடைந்த உள்ளங்கள்தான் சுவர்க்கம் செல்லும் என்பார்கள். வலிகளைச் சுமந்த உள்ளங்கள் சுவர்க்கம் செல்ல முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. சமூகத்திற்கு பங்காற்றியவர்கள் ஒரு போதும் மரணம் எய்வதில்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நாம் இந்த உலகத்திற்கு வந்தமையால் நூறு விகிதம் பயன்பெற்றுள்ளோம். நம்மால் நல்லதொரு வேலை நடந்திருக்கிறது. தம்னுடைய வாழ்க்கையால் இந்த உலகம் அழகு பெற்று இருக்கிறது.என்று அவர் ஓர் விரிவான உரையினை நிகழ்த்தினார்.

குருநாகல் இஸ்லாமிய வர்த்தக சங்கத் தலைவர் எம்.வை.எம். கியாஸ் (ஜே.பி); உரையாற்றுகையில்;

குருநாகல் இஸ்லாமிய வர்த்தக சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 11 வருடங்கள் ஆன போதிலும் இப்படியான வர்த்தகர்களுக்கான வலுவூட்டல் கருத்தரங்கு நடைபெறுகின்றமை இதுவே முதற் தடவையாகும். இதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் குருநாகல் நகரில் கடைகளில் தொழில் புரியும் ஊழியர்களுக்கான வலுவூட்டல் கருத்தரங்குகள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

குருநாகல் நகரில் முஸ்லிம் வர்த்தக சங்கம் என்ற வகையில் அமைப்பு ரீதியாக செயற்படுவதன் காரணமாக இந்நகரில் உள்ள சகல அரசாங்க நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம். அங்கு நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களுக்கும் எமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. வட மேல் மாகாண ஆளுநர் அலுவலகம், பொலிஸ் மாஅதிபர் அலுவலகம், குருநாகல் மாவட்ட செயலகம், குருநாகல் மாநகர சபை மற்றும் ஏனைய சமூகங்களிலிருந்து அழைப்புக்கள் விடுக்கப்படும். எவ்வளவுதான் எங்களுக்கு சோலிகள் இந்த போதிலும் அவைகளை நாங்கள் மதித்து எமது சங்கத்தினர் தவறாமல் பங்கேற்று சிறப்பித்து வருகின்றோம்.

உண்மையிலே நாங்கள் எல்லோரும் கடின உழைப்போடு தான் இந்த சங்கத்தை வழிநடத்திச் செல்லுகின்றோம். தொடர்ந்து வர்த்தகப் பிரமுகர்களுடைய ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்க வேண்டும் எதிர்பார்க்கின்றோம். நிறைய வர்த்தகம் தொடர்பிலான பல்வேறு வேலைத் திட்டங்களை நாங்கள் செய்யவுள்ளோம் என்றார்.

தொழிலதிபர் டி.எஸ்.எம். நவாஸ் ஹாஜியார் கருத்து தெரிவிக்கையில்;

எனக்கு ஆண் பிள்ளைகள் மூன்று. இருவர் பெரிய தொழில் பேட்டைகளை நடத்தி வருகிறார்கள். மூன்றாவது மகன் மலேசியாவில் தொழில் நுட்பரீதியில் தொழில் பேட்டைகளை விருத்தி செய்வது தொடர்பில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் படிப்புக்குப் பொருத்தமான பெரிய தொழில் பேட்டை நிலையமொன்றை மாவத்தகமயில் ஆரம்பிக்கவுள்ளோம்.

இந்த தொழில் பேட்டை நிலையம் ஹேமாஸ், வெலோனா ஆடைத் தொழிற்சாலை போன்ற மூன்று நான்கு இடங்களில்தான் உள்ளன. இவர்களுடன் போட்டிபோட இயலுமா என்ற கேள்வி இருக்கிறது. இயலும் என்ற இலட்சிய நோக்கோடு ஆரம்பிக்கவுள்ளோம். நான் தற்போது பத்து கம்பனிகள் செய்து வருகின்றேன். ஒன்றுமே பின்நோக்கிச் செல்ல வில்லை. மகன் வருகையுடன் இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளோம். எதற்கும் கடுமையான முயற்சிகள் வேண்டும்.

ஆனாலும் க. பொ.த சாதாரண தரத்தில் நான் சித்தியடையவில்லை. கணிதம் உட்பட முக்கிய பாடங்களில் நான் சித்தியடையவில்லை. ஆனால் தொழில் உற்பத்தியாக்கத்துறையில் வெற்றி பெற்றுள்ளேன்.

பொதுவாக நான் தந்தையின் தொழிலைச் செய்யவும் இல்லை. ஒரு கடையில் கூட சம்பளத்திற்கு இருந்ததுமில்லை. நூற்றுக்கு தொண்ணூறு விகிதமானவர்கள் தந்தையின் தொழிலைச் செய்து முன் வந்திருப்பார்கள் அல்லது வேறு ஏதாவது கடையில் இருந்து தொழிலைக் கற்றுக் கொண்டு முன் வந்திருப்பார்கள். நான் ஆரம்பத்திலிருந்தே வளர்ந்து வந்தவன். யாராக இருந்தாலும் கடின உழைப்பு முயற்சி செய்தால் யாரும் பின்நோக்கிச் செல்ல மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் ஆசையும் ஆர்வமும் இருத்தல் வேண்டும்.

வர்த்தகத் துறையில் ஈடுபடும் ஒருவர் ஒரு ரூபாய் நாணயத்தை 1000 பெறுமதியெனக் கொள்ள வேண்டும். சில வேளை ரூபா 1000 பணத்தை ஒரு ரூபாய் நாணயமாகவும் பார்க்க வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் மிக இலகுவாக அடையலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் குருநாகல் இஸ்லாமிய வர்த்தக சங்கத்தின் தலைவர் எம். எம். எஸ்.எம். எம். ராயிஸ் ஹாஜியார் உரையாற்றுகையில்;

முஸ்லிம் வர்த்தகம் சங்கம் உருவாக்கம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். எமது சமூகம் சார்ந்த விடயங்களையும் வர்த்தகர்களுக்கிடையிலான ஒற்றுமையினையும் வர்த்தக ரீதியிலான அறிவினையும் வலுப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளன.

இந்த வர்த்தக துறையில் உள்ளவர்கள் கல்வித் துறையிலும் நாட்டம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். சமூகத்தின் முன்னேற்றம் அதில்தான் தங்கியிருக்கிறது. இதற்காக நாம் இயன்றளவு பங்களிப்புச் செய்ய வேண்டும். இன்றைக்கு கல்விதான் எமது சமூகத்தின் ஆயுதம். கல்விக்கு முதலீடு செய்யும் சமூகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும். எனவே வர்த்தகர்களாகிய நாம் எமது வர்த்தகத் துறையில் ஆர்வம் காட்டி நிற்பதைப் போன்று எமது சமூகத்தினுடைய சமூக பொருளாதார, கலாசார ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

கண் வெள்ளை படர்தலால் பார்வை குன்றிய 500 பேர்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான முயற்சி முன்னெடுப்புக்களை குருநாகல் போதனா வைத்தியசாலையுடன் மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இத்தகைய முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டும். இவை போன்று பொது விடயங்களுக்காக உங்களால் இயன்ற முயற்சிகளை செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அனைத்து அங்கத்தவர்களும் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து செயற்படுதல் வேண்டும். இதன் மூலம் நிறைய பலன்களை அடைந்து கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT