Friday, April 26, 2024
Home » இஸ்ரேலின் முக்கிய இலக்காக்க ஹமாஸ் அமைப்பின் இருவர்

இஸ்ரேலின் முக்கிய இலக்காக்க ஹமாஸ் அமைப்பின் இருவர்

by Rizwan Segu Mohideen
October 22, 2023 3:42 pm 0 comment

காசா மீதான தரைவழி தாக்குதலின்போது ஹமாஸ் படையின் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்படுவார்கள் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதில் ஹமாஸ் ஆயுதப் பிரிவைச் சேர்ந்த முஹமது தெயிப் மற்றும் அரசியல் பிரிவு தலைவர் யெஹ்யா சின்வார் ஆகியோர் பிரதான இலக்குகளாக இஸ்ரேல் கருதுகிறது.

“ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இரண்டு தேர்வே உள்ளன. ஒன்று சரணடைவது அல்லது கொல்லப்படுவதாகும். இதில் மூன்றாவது தேர்வில்லை” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் எச்சரித்துள்ளார்.

எனினும் இந்த எச்சரிக்கைகளுக்கு பலஸ்தீன போராளிகள் பயப்படப்போவதில்லை என்று ஹமாஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தெயிப் மற்றும் சின்வார் இருவரும் ஹமாஸ் போராளிகளால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வலையமைப்பில் பதுங்கி இருப்பதாக காசாவுக்கு வெளியில் இருக்கும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்து தமது நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர்.

1987 இல் ஹமாஸின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் சின்வார் அந்த அமைப்புக்குள் பல நிலைகளில் இருந்து முன்னேறி வந்தவராவார். காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் 23 ஆண்டுகள் இஸ்ரேலிய சிறையில் இருந்தபோது ஹீப்ரு மொழியை கற்றார்.

இரண்டு இஸ்ரேலியர்களை கொன்றதற்காக நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்ட சின்வார் பிரெஞ்ச் இஸ்ரேல் வீரரான கிளாட் ஷலிட்டுக்கு பகரமாக 2011 ஆம் ஆண்டு 1,100 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டபோது மூத்த உறுப்பினராக விடுதலை பெற்றார்.

காசாவில் உள்ள கான் யூனிஸ் அகதி முகாமில் பிறந்தவர்களான சின்வார் மற்றும் தெயிப் இருவரும் அமெரிக்காவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளனர். ஹமாஸ் அமைப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் முதல் எதிரியாகப் பார்க்கப்படும் தெயிப் தொடர்பில் பெரிய அளவில் வெளியுலகுக்கு தெரியவில்லை. ஹமாஸின் அரசியல் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான அவரின் முழு முகத்தையும் காண்பிக்கும் ஒரே ஒரு புகைப்படமே காணப்படுகிறது. அந்த புகைப்படம் குறைந்தது 20 ஆண்டுகள் பழமையானதாகும். மற்றப் புகைப்படங்களில் அவர் முகமூடி அணிந்து அல்லது அடையாளம் காண முடியாத அளவுக்கு நிழல் படும் வகையில் நின்றபடியே காணப்படுகின்றன.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய அன்று தெயிபின் ஓடியோ செய்தியை ஹமாஸின் ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்தது. “எமது மக்களினதும் தேசத்தினதும் கோபம் வெடித்துவிட்டது” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

1965 ஆம் ஆண்டு பிறந்த தெயிபின் மனைவி மற்றும் ஒரு குழந்தை 2014 காசா போரின்போது இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டனர். தெயிப் தனது ஒரு கண்ணை இழந்திருப்பதாகவும் உடல் பாதிப்புக்கு உள்ளான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டபோதும் அவர் செல்வாக்கு மிக்கவராக தொடந்து இருந்து வருகிறார்.

2000 ஆம் ஆண்டு இரண்டாவது இன்திபாதா போராட்டத்தின்போது தெயிப் கைது செய்யப்பட்டபோதும் சிறையில் இருந்து தப்பித்துள்ளார். 2002இல் அவர் ஹமாஸ் ஆயுதப் பிரிவின் தலைவரானார்.

ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து மரண எச்சரிக்கை விடுத்து வருகிறது. “ஹமாஸின் ஒவ்வொரு உறுப்பினர்களும் கொல்லப்படுவார்கள்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT