மஹிந்த ராஜபக்ஷ மீது வழக்கு தொடரும் சாத்தியம் | தினகரன்

மஹிந்த ராஜபக்ஷ மீது வழக்கு தொடரும் சாத்தியம்

சில் துணி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக இரு வகைகளில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சில் துணி விநியோகிக்க தானே உத்தரவிட்டதாக அவர் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், நீதி மன்றத்தை அவமதித்தது தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என்றார்.

வழக்கு முடியும் வரை காத்திருந்தே வீரரைப்போன்று மஹிந்த இன்று பேசுவதாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளருக்கு சார்பாக பொருட்கள் விநியோகிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் பல தடவைகள் எச்சரித்த நிலையிலேயே ஜனாதிபதியின் செயலாளர் இதில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்தார்.

சில் துணி மோசடியில் ஜனாதிபதியின் செயலாளரும் தொலை தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிடவும் தண்டிக்கப்பட்ட போதும் அதற்கு உத்தரவு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி தப்பியிருப்பது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இரண்டு அடிப்படைகளில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக வழக்கு தொடர முடியும். சில் துணியுடன் மஹிந்தவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சுவர்க்கடிகாரம் மற்றும் மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறு கோரும் துண்டுப்பிரசுரம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

சில் துணி விநியோகிப்பது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் 2015 செப்டம்பர் 11 ஆம் திகதி சுதந்திரக் கட்சிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். விகாரைகளில் அரசியல் நோக்கில் சில் துணி விநியோகிப்பதை நிறுத்துமாறும் இது தொடர்பில் யாராவது வழக்கு தொடர்ந்தால் தனக்கு ஆதாரங்களை வழங்க நேரிடும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.

தேர்தலில் வெற்றியீட்டினாலும் ஆசனத்தை இழக்க நேரிடும் எனவும் ஆணையாளர் எச்சரித்திருந்தார்.2015 நவம்பர் 22 ஆம் திகதி அவர் சகல கட்சிகளுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பியிருந்தார்.அமைச்சு செயலாளர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்படுவது இலஞ்சம் வழங்கிய தவறாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

லலித் வீரதுங்க இது தொடர்பில் அறிந்தே இவ்வாறு நடந்துள்ளார். அவர்தான் மற்ற செயலாளர்களை அறிவுறுத்தியிருக்க வேண்டும்.

இவ்வாறு தெரிந்து கொண்டே தவறு செய்தவர்களை பாதுகாக்கவே சில பிக்குமார் பணம் திரட்டுகின்றனர்.இவர்கள் கடந்த காலத்தில் யாருடன் இருந்தார்கள் என்பது எமக்குத் தெரியும்.

இவர்கள் இருவரும் தவறு செய்தது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.

வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தானே இதற்கு உத்தரவு வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி தற்பொழுது கூறுகிறார்.அவருக்கு வழக்கு விசாரணை நடைபெறுகையில் இதனை கூறியிருக்க முடியும்.28 நாட்கள் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.நீதி மன்றத்திற்கு வந்து கூட அவருக்கு இதனை கூறியிருக்கலாம். தான் உத்தரவு வழங்கியதை மஹிந்த ஏற்றுக்கொண்டுள்ளதால் அவருக்கு எதிராக எவருக்கும் வழக்கு தொடர முடியும்.

19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மட்டுமன்றி சாதாரணமாகவே கூட வழக்கு தொடர முடியும் .முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு எதிராக வோடர்ஸ் ஏஜ் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

8 தேங்காய்களை திருடியதற்காக தண்டிக்கப்பட்ட சிறுவனுக்காக பிக்குமார் இவ்வாறு பணம் சேர்த்தார்களா?இலஞ்சம் பெற்றவர்களுக்காக பணம் சேர்ப்பது இலஞ்சத்திற்கு உதவுவது போன்றதாகும் என்றார்.

இங்கு கருத்து வெளியிட்ட இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் தயாசிரி ஜெயசேகர,லலித் வீரதுங்க மோசடி குற்றச்சாட்டுகளற்ற சிறந்த அரச அதிகாரிகள் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு சில் துணி விநியோகிக்க அவர் பங்களித்துள்ளார்.நான் வழக்கு தீர்ப்பு பற்றி எதுவும் குறை கூறவில்லை. அவருக்கு நோய்கள் இருப்பது குறித்து முன்கூட்டி நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...