4 எம்.எல்.ஏக்கள் விரைவில் எடப்பாடி அணியில் இணைய முடிவு | தினகரன்

4 எம்.எல்.ஏக்கள் விரைவில் எடப்பாடி அணியில் இணைய முடிவு

தி.மு.க. மேலிடத்துடன் தினகரன் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதை ஏற்க முடியாது எனக்கூறி ஓரிரு நாட்களில் மேலும் நான்கு அ.தி.மு.க. - எம்.எல்.ஏக்கள் முதல்வர் பழனிசாமி அணியில் ஐக்கியமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஜக்கையன், முதல்வர் பழனிசாமி அணியில் ஐக்கியமானார். 'தி.மு.கவுக்கு ஆதரவாக தினகரன் செயல்படுகிறார்' என அவர் குற்றம் சாட்டினார். இது தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏக்களை சிந்திக்க வைத்துள்ளது.

அதற்கேற்றபடி கொங்கு மண்டல முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், 'தி.மு.க. மேலிடத்துடன் தினகரன் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார்' எனக்கூறி அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை மூளைச்சலவை செய்து வருகிறார். அவரின் முயற்சியால் மேலும் நான்கு எம்.எல்.ஏக்கள் பழனிசாமி அணிக்கு மாற உத்தரவாதம் அளித்துள்ளனர். அதற்கான கடிதத்தையும் முதல்வர் பழனிசாமியிடம் சிலர் வாயிலாக அவர்கள் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

'புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த போதே நான்கு பேரும் வெளியேற தயாராகி விட்டனர். ஆனால் அவர்களை விடாப்பிடியாக கர்நாடக மாநிலத்திற்கு அழைத்து சென்று உள்ளனர். இருப்பினும் ஓரிரு நாட்களில் நால்வரும் சென்னை வந்து முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு அளிக்க உள்ளனர்' என அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...