செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு 16 வருடங்கள் | தினகரன்

செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு 16 வருடங்கள்

 
அமெரிக்காவில் பாரிய தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
 
இதே தினத்தில், கடந்த 2001 ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கி வந்த அல்கொய்தா அமைப்பினால், அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள், மற்றும் பென்டகன்  மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
 
நான்கு பயணிகள் விமானங்கள் கடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் 2,997 பேர் மரணமடைந்திருந்தனர். இதில் 2,978 பொதுமக்கள் மற்றும் 19 கடத்தல்காரர்கள் உயிரிழந்திருந்ததோடு, 6,000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
 
அமெரிக்காவின் இரு பயணிகள் விமான சேவை நிறுவனங்களான யுனைடட் எயார்லைன்ஸ், அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகளுக்குச் சொந்தமான 4 விமானங்கள் இதன்போது கடத்தப்பட்டு இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
 
இதில் அமெரிக்கன் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான AA11 மற்றும் யுனைடட் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UA175 ஆகிய விமானங்கள் முறையே, உலக வர்த்தக மையம் அமைந்துள்ள நியூயோர்க் நகரிலுள்ள, வடக்கு மற்றும் தெற்கு இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியதோடு, ஒரு மணித்தியாலங்கள் 42 நிமிடங்களின் பின்னர் தலா 110 மாடிகளைக் கொண்ட அவ்விரு கோபுரங்களும் தரைமட்டமானதோடு, அதனைச் சூழவிருந்த 10 இற்கும் மேற்பட்ட கட்டங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியது. 
 
அமெரிக்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான மூன்றாவது விமானம் AA77, வேர்ஜினியா மாநிலத்திலுள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களமான பென்டகன் கட்டடத்தின் மீது மோதியதோடு, இதில் அக்கட்டடத்தின் பகுதியளவிலான பாதிப்பை ஏற்படுத்தி கட்டடத்தின் மேற்குப் பகுதியில் சேதத்தை ஏற்படுத்தியது. 
 
அதேபோன்று நான்காவது விமானமான, யுனைடட் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UA93 அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நோக்கி செலுத்தப்பட்ட போதிலும், பயணிகளால் கடத்தல்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக, பென்சில்வேனியா மாநிலத்திற்கருகிலுள்ள ஸ்டொனிகிறீக் டவுன்சிப் பகுதியில் வீழ்ந்தது.
 
இத்தாக்குதல் அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மிகப் பாரிய தீவிரவாத தாக்குதல் என கருதப்படுவதோடு, இத்தாக்குதலால் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பொருள் சேதமும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...