Friday, March 29, 2024
Home » ஜனாதிபதி மற்றும் சீன துணைப் பிரதமருக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் சீன துணைப் பிரதமருக்கு இடையில் சந்திப்பு

- பொருளாதார நெருக்கடியின்போது, சீனா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி பாராட்டு

by Prashahini
October 20, 2023 3:34 pm 0 comment

சீன மக்கள் குடியரசுடன் இறப்பர் அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இலங்கை, தங்களுக்கு வழங்கிய ஆதரவை சீன மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும், சீனா இலங்கைக்கு தனது ஆதரவை எப்போதும் வழங்கும் என்றும் சீன துணைப் பிரதமர் Ding Xuxiang தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன துணைப் பிரதமருக்கும் இடையில் நேற்று (19) பீஜிங் நகரில் இடம்பெற்ற, இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே சீன துணைப் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள்...

“பெல்ட் அண்ட் ரோட்” முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்த சீன துணைப் பிரதமர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சீன – இலங்கை இறப்பர் அரிசி ஒப்பந்தம் இலங்கை செய்து கொண்ட முதலாவது வெளிநாட்டு வர்த்தக உடன்படிக்கை என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளினதும் பொதுவான கொள்கைகளுக்கு அமைவாக புதிய வர்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின்போது, சீனா வழங்கிய ஆதரவை பெரிதும் பாராட்டுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை-சீன நட்புறவு கடந்த காலத்திலிருந்து வலுவான மட்டத்தில் இருந்ததாகவும், ஜனாதிபதி ஜீ ஜின் பிங்கின் கீழ் அது மேலும் வலுவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அடையாளத்தையும் அமைதியையும் பாதுகாப்பதில் இலங்கை மிகுந்த கவனம் செலுத்துவதாகவும், இந்து சமுத்திரம் அதிகாரப் போட்டிக்கு பலியாவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதே இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்பதையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதேபோல், பிராந்திய பொருளாதார உறவுகளுக்கான (RCEP) அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலின் இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கு சீன துணைப் பிரதமர் இரவு விருந்தொன்றையும் வழங்கினார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் அதாவுதஹெட்டி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பிரதான இணைப்பு அதிகாரி செனரத் திஸாநாயக்க, சீனாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் பிரதானி கே.கே. யோகநாதன், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் ரிஷான் டி சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT