Thursday, March 28, 2024
Home » இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதி தீர்வுக்கு ஐ.நா. உடன் தலையிட வேண்டும்

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதி தீர்வுக்கு ஐ.நா. உடன் தலையிட வேண்டும்

- சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று

by Rizwan Segu Mohideen
October 20, 2023 6:02 am 0 comment

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிடுமாறு கோரும் சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை (20) – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிடுமாறு கோரும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளையதினம் (20) நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (19) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கு அமைய நாளையதினம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்காது மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த இங்கு தீர்மானிக்கப்பட்டது. ஆளும் கட்சி எதிர்க்கட்சியினரின் பொதுவான இணக்கப்பாட்டுடன் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணைக்கு அமைய விவாதம் நடத்தப்படும் என்றும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதற்கான பிரேரணையை முன்மொழிய, ஆளும் கட்சியின் சார்பில் இது வழிமொழியப்படும் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க அனைத்து தரப்பினரையும் கோர வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த யுத்த நிலைமை சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் வகையில் அமைந்திருப்பதுடன், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், இலட்சக்கணக்கான மக்கள் காயமடைந்து இடம்பெயர்ந்துள்ளனர், பெருமளவிலான இலங்கையர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றமை, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட விளைவுகள் ஏற்பட்டிருப்பதால் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விவாதம் நடத்தப்படுகிறது.

அதேநேரம், நாளையதினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 2323/41ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் 2294/54 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்குக் காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய பிரசுரிக்கப்பட்ட 2354/08 ஆம் இலக்க வர்த்தமானி என்பவற்றை விவாதமின்றி அங்கீகரிப்பதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT