Friday, March 29, 2024
Home » முப்பெரும் தேவியரின் அருள் வேண்டி அனுஷ்டிக்கும் நவராத்திரி விரதம்

முப்பெரும் தேவியரின் அருள் வேண்டி அனுஷ்டிக்கும் நவராத்திரி விரதம்

by Rizwan Segu Mohideen
October 20, 2023 6:08 am 0 comment

சைவசமய விழாக்களில் நவராத்திரிவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. கடந்த 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நவராத்திரிவிரதம் ஆரம்பமாகியது. புரட்டாதி மாதத்தில் கொண்டாடப்படும் இவ்விழாவில் முதல் மூன்று நாட்களும் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் இலக்குமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவிக்குமாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட்டு, இறுதியாக பத்தாம் நாள் விஜயதசமிஆயுதபூஜையாக கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் வித்தியாரம்பம் நடைபெறும்.

சக்திவழிபாடே தாய்வழிபாடு அல்லது அன்னை வழிபாடு என்று கூறப்படுகின்றது. சக்திவழிபாடு மிகவும் பழைமையானது. அன்னையே உயிர்களுக்கு போகத்தையும், முத்தியையும் அளிப்பவள். இவ்வாறு வேண்டுவோருக்கு வேண்டியதை வேண்டியாங்கு வகுத்தருளுகின்ற காரணத்தால் அவள் அகிலஅண்டங்களுக்கும் அன்னையாக விளங்குகின்றாள்.

எங்கும் எதிலும் எஞ்ஞான்றும் நீக்கமற்ற நிறைபொருளாகத் திகழ்கின்ற ஆதிசக்தியாகிய பராசக்தி பல்வேறு தேவியம்சங்களைக் கொண்டருளித் திகழ்கின்றாள். எங்கும் நிறைந்த பொருளாகப் போற்றப்படுகின்ற அந்த ஆதிசக்தி பராசக்தி, பூரணி, இராஜ இராஜேஸ்வரி என்னும் திருப்பெயர்களைக் கொண்டருளுகின்றாள். முத்தொழிலைச் செய்யும் போது பிரம்மாணி, வைணவி, உருத்திராணி என்ற திருப்பெயரும் ஈஸ்வரனுக்கு ஒப்பாகும் போது துர்க்கையாகவும், செல்வத்தின் உருவாகும் போது இலக்குமியாகவும், வித்தையின் வடிவாகும் போது சரஸ்வதியாகவும் காட்சி தருகின்றாள்.

அண்டங்களாகி, அவற்றிலுள்ள உயிர்க்குலங்கள் அனைத்துமாகி உலகவாழ்வை நடத்தி வைப்பவள் பராசக்திஆவாள். துர்க்கை அச்சம் போக்குபவள். ஆபத்து காலத்தில் தன்னிடத்தில் அடைக்கலம் புகுந்தவர்க்கு அச்சம் போக்கி அருள்பவள் துர்க்கை.

இலட்சுமிதேவி மக்களிடம் பிரியமுடையவள். இலட்சுமியைப் பூவின் திருவென்றும் அழகின் புனைக்கலம் என்றும் அமுதில் பிறந்தாள் என்றும் கூறுவர். தன்னுடைய கருணை நோக்கினாலே தன்னை அடைந்தவர்களுக்கு அருள் செய்கிறாள்.

கலைகள் தந்து அருள்பவள் சரஸ்வதிதேவியாவாள். இவளை சரஸ்வதி, கலைமகள், பனுவலாட்டி, வாணி, வெண்டாமரையாள் முதலிய திருநாமங்களில் வழிபடுவர். சொல், அறிவுணர்வு, கல்வி, மெய்யறிவு என்பவற்றின் நிலைக்களமாகவும்,சகல வித்தைகளின் வடிவமாகவும் விளங்குகின்றாள். சகல வித்தைகளின் வடிவம் தான் என்பது தோன்றும்படி எப்போதும் கைகளில் வீணை, புத்தகம் ஏந்தியபடி காட்சியளிப்பவள். இவள் வெண்டாமரையில் வீற்றிருப்பவள்.

தேவியரை வழிபடுவோருக்கு தேவியர்களின் திருவருள் பேறு கிடைக்கும். நம் வாழ்வு நல்வாழ்வாக விளங்குவதற்கு தேவியர்களின் அருள் சிறப்புற்றிருக்க வேண்டும். எனவே நாம் தேவியரை வணங்கி, வழிபாடு செய்து நிறைவாழ்வை பெறுவோமாக! நாம் நவராத்திரி விரத்தை அனுஷ்டித்து மேன்மையடைவோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT