Home » ஜனாதிபதி தேர்தலை அரசு ஒருபோதும் பிற்போடாது

ஜனாதிபதி தேர்தலை அரசு ஒருபோதும் பிற்போடாது

எத்தகைய எண்ணமும் இல்லை

by mahesh
October 18, 2023 8:08 am 0 comment

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும். என்றாலும் நாடு தற்போதுள்ள நிலையில் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் சிந்திக்கவில்லையென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆனால் 1994இல் இருந்து மக்கள் ஆணைக்கு தலைசாய்த்து வீட்டுக்கு சென்றவர்தான் ரணில் விக்கிரமசிங்க. அதனால் தேர்தலில் வெற்றி தோல்வி எவ்வாறாக இருந்தாலும் மக்களின் ஜனநாயக வாக்களிக்கும் உரிமையை ரணில் விக்கிரமசிங்க மீறமாட்டார். ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் அதிகாரத்துக்கு பேராசைகொண்ட கட்சி அல்ல.

2022இல் சந்திரிகா குமாரதுங்க அமைச்சுக்களை கைப்பற்றிக்கொண்ட சந்தர்ப்பத்தில், 2018இல் பலாத்காரமாக பிரதமர் பதவியை கைப்பற்றிக்கொண்டபோது, ஒரு வாக்கினால் அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியுமாகி இருந்த சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்க மக்களின் தீர்மானத்துக்கு செவிசாய்த்து செயற்பட்டார்.

அதனால் தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னும் ஒருவருடம் வரையான காலம் இருப்பதால் அது தொடர்பில் அரசாங்கம் சிந்திக்கவில்லை.

அத்துடன் தற்போது தேர்லை கோருவது மக்களா? என்ற கேள்வி எமக்கு இருக்கிறது. வங்குராேத்து நிலையில் இருந்து நாட்டை மீட்குமாறே மக்கள் கோருகின்றனர். அதனால் அரசியல் கட்சிகளின் தேவைக்கு தேர்தலை நடத்துமாறு கோருவதனால், நாட்டின் உண்மை நிலையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக நாங்கள் எமது அர்ப்பணிப்பை காட்டியுள்ளோம். அதேபோன்று மக்களின் வாக்குரிமையையும் நாங்கள் பாதுகாப்போம்.

1977இல் நாடு வீழ்ச்சியடைந்து மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு, ஒரு ராத்தல் பாண் வாங்க முடியாத நிலையில் இருந்தது.இந்நிலையில், நாட்டை பொறுப்பேற்ற ஐக்கிய தேசிய கட்சி நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT