FIBA 3x3 Basketball Nations League 2017 சுற்றுப்போட்டி இலங்கையில் | தினகரன்

FIBA 3x3 Basketball Nations League 2017 சுற்றுப்போட்டி இலங்கையில்

 சர்வதேச கூடைப்பந்தாட்ட சங்க (FIBA) 3x3 Basketball Nations League 2017 சுற்றுப்போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை கூடைப்பந்தாட்டச் சங்கம் (SLBF) அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் சர்வதேச ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் போட்டியிடவுள்ளன.

இச் சுற்றுப் போட்டியானது இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வெளிக்களத் திடலில் 2017 நேற்று 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறுகிறது. 23 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 3x3 Nations League தகுதி காண் சுற்றில் செக் குடியரசு, நெதர்லாந்து, ஹங்கேரி, ஸ்லோவேனியா, ஜோர்தான், உகண்டா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து கூடைப்பந்தாட்ட அணிகள் கலந்துகொள்கின்றன.

இதுபதுக்கு இருபது கிரிக்கெட் ஆட்டத்தின் வடிவில் அதனையொத்த பல்வேறு அம்சங்களை உள்ளடக்கும் வகையில் 3x3 சுற்றுப்போட்டி திட்டமிடப்பட்டுள்ளதுடன், உலகெங்கிலும் கூடைப்பந்தாட்ட வீரர்கள் மத்தியில் இது மிகுந்த பிரபலமடைந்து வருகின்றது. 3x3 கூடைப்பந்தாட்டத்தில் உலகளாவிய தரப்படுத்தலில் இலங்கை வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வீரரான பிரேன்ட் தேவகுமார் அவர்கள் (18 வயதிற்குக கீழ்ப்பட்ட ஆண்கள் பிரிவு) உலகளாவில் 11 ஆவணது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை உள்நாட்டில் கூடைப்பந்தாட்ட வீரர்களின் வளர்ச்சிக்கு சிறந்த ஒரு சான்றாக அமைந்துள்ளது. உலகளாவிய தரப்படுத்தில் இலங்கை தற்சமயம் 51 ஆவது ஸ்தானத்தில் உள்ளதுடன் வலய ரீதியான தரப்படுத்தலில் 10 ஆவது இடத்தில் உள்ளது. உலகளாவிய தர்படுத்தலில் 23 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்கள் அணி 44 ஆவது ஸ்தானத்திலும் 23 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்கள் அணி 37 ஆவது ஸ்தானத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் 3x3 கூடைப்பந்தாட்டத்தை ஊக்குவித்து, நிகழ்வில் மேலும் உற்சாகத்தையும், ஆர்வ மேலீட்டையும் ஏற்படுத்தும் நோக்குடன், அழைக்கப்பட்டவர்களுக்கான 3x3 கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி மற்றும் பயிற்சிச் செயலமர்வு ஆகியனவும் இச்சுற்றுப் போட்டி இடம்பெறும் சமயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இச்சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்வதற்கு இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கம் முன்வந்துள்ளமை தொடர்பில் இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவரான பிரிகேடியர் இந்துனில் ரணசிங்க அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இந்த ஆண்டு சர்வதேச கூடைப்பந்தாட்ட சங்க Nations League போட்டியை ஏற்பாடு செய்வதையிட்டும், அதில் கலந்துகொள்வதற்காக இலங்கை அடங்கலாக ஏழு நாடுகளிலிருந்து அணிகளை வரவழைப்பதையிட்டும் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சர்வதேச கூடைப்பந்தாட்ட சங்க Nations League ஆனது ஆசிய கூடைப்பந்தாட்ட வீரர்கள் மத்தியில் அவர்களை ஊக்குவிக்கும் ஒரு வடிவமாக அண்மையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அது படிப்படியாக சர்வதேச கூடைப்பந்தாட்ட மட்டத்திலும் ஊடுருவியுள்ளது. 3x3 போட்டி வடிவத்தில் இளைஞர், யுவதிகள் மிகுந்த ஆர்வத்துடன், உற்சாகத்துடனும் கலந்துகொள்வதை நாம் காணக்கூடியதாக உள்ளதுடன் மிகுந்த விறுவிறுப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தவுள்ள இச்சுற்றுப் போட்டியை நாம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...