Friday, April 19, 2024
Home » இலங்கையின் இரண்டாவது பெரிய மகப்பேற்று, குழந்தைகள் மருத்துவமனை களுத்துறையில் திறந்து வைப்பு

இலங்கையின் இரண்டாவது பெரிய மகப்பேற்று, குழந்தைகள் மருத்துவமனை களுத்துறையில் திறந்து வைப்பு

by mahesh
October 18, 2023 10:04 am 0 comment

நாட்டு மக்களுக்கு இலவச சுகாதார சேவையின் பயன்களை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் களுத்துறையில் நிர்மாணிக்கப்பட்ட விசேட மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை (Maternal and Childrens Hospital) அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டு மக்களுக்கான இலவச சுகாதார சேவையின் பயன்களை விரிவுபடுத்தி பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நெதர்லாந்து அரசின் நிவாரண கடன் திட்டத்தின் உதவியில் இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாக இந்த மருத்துவமனை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தலைமையில் இடம்பெற்ற திறப்புவிழாவில் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன, நெதர்லாந்து தூதுவராலய பிரதிநிதிகள், சுகாதார அமைச்சின் செயலாளர், களுத்துறை போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ​ெடாக்டர் மதுபாஷினி கருணாரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பத்து பில்லியன் ரூபா செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த ஏழு மாடி மருத்துவமனை கட்டடத் தொகுதியில் வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, விஷேட குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, சிறுவர் மற்றும் மகப்பேற்று வார்டுகள், இரத்த வங்கி, கிளினிக்குகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட முப்பது பிரிவுகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை மாவட்டத்தில் நாகொட கல்லஸ்ஸ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை நாட்டின் இரண்டாவது பெரிய சிறுவர் மற்றும் மகப்பேறு வைத்தியசாலையாக விளங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிகழ்வில் அனைத்துமத குருமார்களின் ஆசிர்வாத பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

எம்.எஸ்.எம்.முன்தஸிர் (பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT