முன்னுரிமை ஒழுங்கை நடைமுறை 2 ஆம் கட்டம் 22 இல் ஆரம்பம் | தினகரன்

முன்னுரிமை ஒழுங்கை நடைமுறை 2 ஆம் கட்டம் 22 இல் ஆரம்பம்

காலி வீதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பஸ்களுக்கான "முன்னுரிமை ஒழுங்கை" நடைமுறைத்திட்டம் வெற்றியளித்துள்ளது. இதனை ஏனைய வீதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

காலி வீதியில் மொரட்டுவை குருஸ்ச சந்தியிலிருந்து கட்டுபெத்தை சந்தி வரையும், வெள்ளவத்தை சவோய் சந்தியிலிருந்து பம்பலப்பிட்டி சந்தி வரையுமான பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இந்த பஸ் முன்னுரிமை ஒழுங்கை நடைமுறை வாகன சாரதிகளால் முறையாக பின்பற்றப்படுகிறது. காலை 6 மணிமுதல் 9 மணிவரை அமுலில் இருக்கும் இந்த ஒழுங்கை நடைமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது. இரண்டாம் கட்டம் எதிர்வரும் (22) விஸ்தரிக்கப்படும் என்றார்.

பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

பத்தரமுல்லை எச்.எஸ்.பி.சி சந்தியிலிருந்து இராஜகிரிய ஆயுள்வேத சந்திவரை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட பஸ் முன்னுரிமை ஒழுங்கை நடைமுறையில், கிடைத்த அனுபவத்தைக் கொண்டு காலி வீதியில் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் பரீட்சார்த்தமானது அல்ல. தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும். ஏதாவது ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படும். சிலர் அதனை அரசியலாக்குவர். பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டபோது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டதாக விமர்சித்தனர். எனினும், விமர்சனங்களுக்கு அடிபணியாது திட்டத்தை ஆரம்பித்தோம். இது வெற்றியளித்துள்ளது.

மாலை வேளைகளில் ஏன் பஸ்களுக்கான முன்னுரிமை ஒழுங்கை நடைமுறைப் படுத்தப்படவில்லையென சிலர் கேள்வி யெழுப்புகின்றனர். காலையில் பாடசாலை வாகன நெரிசல் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் வாகன நெரிசல் என அதிகமான வாகன நெரிசல் காணப்படுகிறது. மாலையில் இது பிரிந்து செல்கிறது. அது மாத்திரமன்றி பஸ் "முன்னுரிமை ஒழுங்கை" திட்டத்தை மாலையில் நடைமுறைப்படுத்தினால் வீதியோரங்களில் உள்ள வியாபார நிலையங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும். இவற்றைக் கவனத்தில் கொண்டு மாலையில் இதனை நடை முறைப்படுத்தவில்லை.

(மகேஸ்வரன் பிரசாத்) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...