சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்படமாட்டாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசு சமுர்த்தி பயனாளிகளின் கொடுப்பனவுகளை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சமுர்த்தி கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும். அதேநேரம் எவ்வித கொடுப்பனவும் கிடைக்காத இலட்சக்கணக்கான மக்கள் இந்த நாட்டில் உள்ளனர். இவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

எம்பிலிபிட்டியவில் மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு நேற்று 'கம் உதாவ' மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சமுர்த்தி கொடுப்பனவு இரத்துச் செய்யப்படப்போவதாக பலரும் பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் உண்மை இல்லை. அரசாங்கம் எச்சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ மாட்டாது. இவ்வருட இறுதிக்குள் அரசாங்கம் ஒரு இலட்சம் மக்களுக்கு காணி உரிமைகளைப் பெற்றுத் தருமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை விவசாயிகளின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமையையும் அவர் சுட்டிக் காட்டினார். தேசிய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை தரம் உயர்த்த முடியுமென்றும் அவர் கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், விவசாய மக்கள் தமது பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொள்வதற்கும், தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக விவசாய துறையில் புதிய செயற்திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டின் மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்பினை அதிகரித்து அதனூடாக தேசிய பொருளாதாரத்தையும், விவசாயிகளின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதற்கு காணப்படும் வாய்ப்பினை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எமது நாட்டின் விவசாயத்துறையில் புத்தாக்கத்தை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு கண்கவர் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதென்றும் தெரிவித்தார்.

மக்களின் காணி உரிமைகளை உறுதி செய்தல் தொடர்பாக்க் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவற்றை எந்தவித தாமதங்களும் இன்றி நிறைவேற்ற வேண்டியது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும் என்பதுடன், இவ்விடயத்தில் அரசியல் மற்றும் கட்சி பேதங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்திற்கொண்டு செயற்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.

வரலாற்றில் உலகம் பூராகவும் மக்கள் தமது காணி உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டே பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பதை நினைவூட்டிய ஜனாதிபதி, அனைத்து இலங்கையர்களுக்கும் தங்களுக்கென்று காணி மற்றும் வீட்டின் உரிமையை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றதெனவும் தெரிவித்தார்.

மகாவலி குடியேற்றவாசிகளுக்கு ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் வளவை வலய விவசாயிகளுக்கு 5,000 காணி உறுதிகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், அதனை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதியால் சில விவசாயிகளுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்களான மஹிந்த அமரவீர, தலதா அத்துகோரல, பிரதி அமைச்சர்கள் அநுராத ஜயரத்ன, கருணாரத்ன பரணவித்தான உள்ளிட்ட மாகாண அரசியல் பிரதிநிதிகளும், அரச உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர். 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...