சிவானந்தா தேசிய பாடசாலை சம்பியன் | தினகரன்

சிவானந்தா தேசிய பாடசாலை சம்பியன்

கிழக்கின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட 3ஆவது வருட சுற்றுப்போட்டியில் சிவானந்தா தேசிய பாடசாலை வெற்றி பெற்று “சிவராம வெற்றிக்கிண்ணம் 2017”இன் சம்பியனானது.

(08) மாலை மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் மூன்றாவது வருடமாக நடைபெற்ற இப்போட்டியில் 3இற்கு பூச்சியம் எனும் அடிப்படையில் சிவானந்தா அணியினர் இவ்வாறு அபார வெற்றியை பெற்றுக் கொண்டனர்.

ஐந்து வருடங்களுக்கு தொடராக இடம்பெறவுள்ள இச்சுற்றுப்போட்டியின் வெற்றிக்கிண்ணத்திற்கு “சிவராம” என பெயரிடப்பட்டுள்ளதுடன் இரு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகள் பங்கு கொள்ளும் “கிழக்கின் சமர்” என பெயர் சூட்டப்பட்டது.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் எஸ்.தயாபரன்; தலைமையில் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் அனுர டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சமூக அபிவிருத்தி மற்றும் மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை அதிபர் எம்.கிருபைராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

போட்டியின் ஆரம்பம் முதலே சிவானந்தா அணியினர் தங்களது ஆதிக்கத்தினை செலுத்தி முதல் 5நிமிடங்களில் கோள் ஒன்றினை போட்டனர். அடுத்த சில நிமிடங்களில் இராமகிருஸ்ண அணியினருக்கு கோல் போடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அதனை அவர்கள் தவறவிட்டனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திய சிவானந்தா உற்சாகத்துடன் இடைவேளையின் பின்னர் மேலும் ஒரு கோளினை இட்டு 2இற்கு பூச்சியம் எனும் அடிப்படையில் முன்னிலை வகித்ததுடன் மீண்டும் தண்டனை உதை மூலம் மற்றுமொரு கோளினை இட்டு அபார வெற்றி பெற்றதுடன் எதிர் அணியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். இதனடிப்படையில் சிறந்த கோள் காப்பாளர் மற்றும் சிறந்த முன்வரிசை வீரர் விருதுகளையும் தட்டிச் சென்றனர்.

போட்டியின் இடைவேளையின் போது நடைபெற்ற இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் கலந்து கொண்ட மாணவர்கள் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்

மாணவர்களிடையே நல் உறவையும், ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் இவ்வாறான போட்டிகளினூடாக வலுப்படுத்த முடியும் என இருபாடசாலைகளின் அதிபர்களும் போட்டி தொடர்பில் இங்கு கருத்து வெளியிட்டனர்.

வாச்சிக்குடா விஷேட நிருபர 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...