Thursday, April 18, 2024
Home » இலங்கை பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் Huawei உடன் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் Huawei உடன் ஒப்பந்தம் கைச்சாத்து

- சீன Huawei நிறுவனத்திற்கு ஜனாதிபதி மேற்பார்வை விஜயம்

by Rizwan Segu Mohideen
October 17, 2023 6:17 pm 0 comment

இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின் சிரேஷ்ட உதவித் தலைவரும் ஹுவாவி ஆசிய – பசுபிக் வலயத் தலைவருமான சைமன் லீன் (Simon Lin) தெரிவித்தார்.

தமது நிறுவனம் தற்போதும் இலங்கைக்குள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்க ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (17) பீஜிங் நகரிலுள்ள ஹுவாவி நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்திற்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையிலேயே சைமன் லீ இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தான் இம்முறை இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் கலந்தாலோசிக்கவே ஹுவாவி நிறுவனத்திற்கு வந்திருப்பதாக கூறினார்.

டிஜிட்டல் கல்வி முறைமை மற்றும் பசுமை வலுசக்தி உற்பத்தி தொடர்வில் சீன அரசாங்கம் மற்றும் ஹுவாவி நிறுவனத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

எதிர்கால உலகிற்கு வலுவாக முகம்கொடுப்பதற்காக இலங்கைக்கு போட்டித்தன்மை மிக்க டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதார கொள்கையொன்று அவசியம் என்றும், அதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதாரத்துடன் இலங்கை மக்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வலுவூட்ட வேண்டியதன் அவசியத்தையும், ஹுவாவி நிறுவனத்தின் சர்வதேச சேவைகள் மற்றும் அவர்களின் நவீன தொழில்நுட்ப செயன்முறைகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பிலும் இலங்கை தூதுக்குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது, இலங்கை பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பிலான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, போக்குவரத்து மற்றும வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதேபோல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் சீனாவின் சிவில் பொறியியல் மற்றும் பொறியியல் நிர்மாண கூட்டுத்தாபனத்தின் உயர் மட்ட அதிகாரிகளையும் தொழில் நிறுவனங்கள் பலவற்றின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT