சேனைக்குடியிருப்பை சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் கராத்தே வரலாற்றில் புதிய சாதனை | தினகரன்

சேனைக்குடியிருப்பை சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் கராத்தே வரலாற்றில் புதிய சாதனை

தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று கல்முனை சேனைக்குடியிருப்பை சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முறையாக நடைபெற்ற 4ஆவது தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (05) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

இதில் ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் காட்டா(Kata) போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் சௌந்தரராஜா பாலுராஜ் தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக 2014ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே தோ சம்பின்ஷிப்பில் அவர் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கறுப்புப் பட்டியைக் கொண்டவரும் (Internatinal Black Belt 5th dann), வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய நடுவராக தெரிவாகியுள்ளவருமான (Sensei) எஸ்.முருகேந்திரனின் கீழ் பாலுராஜ் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை – சேனைக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சௌந்தரராஜா பாலுராஜ், சிறுவயது முதலே கராத்தே விளையாட்டில் அதிக ஆர்வமுடையவராக காணப்பட்டார். தனது சகோதரனான முருகேந்திரனின் வழிகாட்டலுடன் கராத்தே பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவர், கல்முனை கார்மெல் பற்றிமா கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை மேற்கொண்டவராகும்.

நற்பிட்டிமுனை விசேட, காரைதீவு குறூப் நிருபர்கள் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...