400 மீற்றர் ஓட்டத்தில் தென்னாபிரிக்க வீரருக்கு தங்கம்

லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள போட்டியில், நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் வான் நியரிக் தங்க பதக்கம் வென்றார்.

உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் தென்னாபிரிக்க வீரர் வான் நியரிக் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 43.98 வினாடியில் கடந்தார். பகாமஸ் வீரர் ஸ்டீபன் 44.41 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், கத்தாரை சேர்ந்த ஹாரூன் 44.48 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

800 மீற்றர் ஓட்டத்தில் பிரான்ஸ் வீரர் பியா அம்ரோஸ் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 44.67 வினாடியில் கடந்தார். போலந்து வீரர் ஆடம் காஸ்கோட் வெள்ளியும் (1 நிமிடம்44.95 வினாடி), கென்யாவை சேர்ந்த கிபியான் பெட் வெண்கலமும் (1 நிமிடம் 45.21 வினாடி) பெற்றனர். 3 ஆயிரம் மீற்றர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் கென்யா வீரர் கிப்ருட்டோ 8 நிமிடம் 14.12 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

மொராக்கோவை சேர்ந்த எல்பார்லி 8 நிமிடம் 14.49 வினாடியில் கடந்து வெள்ளி பதக்கமும், அமெரிக்க வீரர் இவன் ஜாக்கா 8 நிமிடம் 15.33 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

போல்ட் வால்ட் பிரிவில் (கோல் ஊன்றி உயரம் தாண்டுதல்) அமெரிக்க வீரர் சாம் சென்டிரிக்ஸ் 5.95 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தை பிடித்தார். போலந்து வீரர் லிசெக் (5.89 மீற்றர்) 2-வது இடத்தையும், பிரான்சை சேர்ந்த ஹவல்லெனி (5.89 மீற்றர்) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

பெண்களுக்கான ஈட்டி எறியும் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை பார்பரா ஸ்பாட்கோவா தங்கம் வென்றார். அவர் 66.76 மீற்றர் தூரம் எறிந்தார். சீனாவுக்கு வெள்ளி, வெண்கலம் கிடைத்தன. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...