அச்சம் பீதியற்ற சூழலுக்காக ஏங்கும் வடபகுதி மக்கள் | தினகரன்

அச்சம் பீதியற்ற சூழலுக்காக ஏங்கும் வடபகுதி மக்கள்

யாழ்குடாநாட்டில் அண்மைக் காலமாக வாள்வெட்டுகளில் ஈடுபட்டு வந்த 'ஆவா' குழுவின் தற்போதைய தலைவர் உட்பட அக்குழுவின் முக்கியஸ்தர்கள் பலர் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இக்குழுவை தற்போது வழிநடத்துபவராகக் கருதப்படும் நிஷா விக்டர் என அறியப்படும் முன்னாள் புலி உறுப்பினரான சத்தியவேல்நாதன் நிஷாந்தனும் அவரது இரு சகபாடிகளும் புறக்கோட்டை பஸ்நிலையத்தில் கைது செய்யப்பட ஏனையவர்கள் யாழ்ப்பாணத்திலும், கொழும்பு மட்டக்குளியிலும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்குழுவினர் கடந்த இரண்டொரு வருடங்களாக யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் வாள் வெட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இக்குழுவினரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு தொடர்பில் சிறப்பு விசாரணைகளை மேற்கொள்ளவென பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விஷேட குழுவொன்றை கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியமித்தது. இக்குழுவின் விசாரணை அதிகாரியாக உப பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார நியமிக்கப்பட்டிருந்தார். அவரது விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகி இருந்தன.

இவ்வாறான சூழலில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றிருந்த முறைப்பாடு ஒன்றை விசாரிப்பதற்காக கடந்த 30 ஆம் திகதி இப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நந்தாவில் அம்மன் கோவில் வீதிக்கு மோட்டார் பைசிக்கிளில் சென்றுள்ளனர். அந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் முகங்களைத் துணியினால் கட்டிக்கொண்ட இனந்தெரியாத கும்பலொன்று துரத்தி துரத்தி மூர்க்கத்தனமாக வாள்களால் வெட்டியுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுங்காயங்களுக்கு உள்ளாகினர்.

இச்சம்பவம் இடம்பெற்ற இரண்டொரு தினங்களுக்குள் யாழ்குடா நாட்டுக்கு விஜயம் செய்த பொலிஸ் மாஅதிபர், யாழ் குடாநாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் குடாநாட்டு பொலிஸ் உயரதிகாரிகளோடு கலந்துரையாடி தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கினார்.

இதனடிப்படையில் ஏற்கனவே ஆவா குழு தொடர்பில் கிடைக்கப் பெற்றிருந்த தகவல்களும் மேலதிக விசாரணையாளர்களின் மேலதிக விசாரணைக்கு பக்கத் துணையாக அமைந்தன. இந்நிலையில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்யும் கும்பல்களைக் கைது செய்து சட்டத்தின் முன் ஆஜர்படுத்தும் நோக்கிலான சுற்றிவளைப்புகளையும், தேடுதல்களையும் பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் மேற்கொண்டனர்.

இதன் விளைவாக கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்களை வாள்களால் வெட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆவா குழு முக்கியஸ்தர்களாகக் கருதப்படும் நல்லூர் முத்து, மது உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்ட புலன் விசாரணைகளில் கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக ஆவா குழுவை தற்போது வழி நடாத்தும் விக்டர் இனம் காணப்பட்டார். அவரோடு சேர்த்து மேலும் பத்து பேரைக் கைது செய்யும் நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தினர்.

இப்பின்புலத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியவராகக் கருதப்படும் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் போல் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் மட்டக்குளியவில் வைத்து கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆவா குழு தலைவரும் அவரது இரு சகாக்களும் கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்தில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து-ம் புலன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்குடா நாட்டின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கைகள் வட பகுதி மக்கள் மத்தியில் குடி கொண்டிருந்த அச்சம் பீதியை நீக்கும் வகையில் அமைந்திருப்பதாகவே கருதப்படுகின்றது.

ஏனெனில் நாட்டில் நீடித்த சுமார் முப்பது வருட கால யுத்தம் காரணமாக வடபகுதி மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். அவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு மீண்டும் முகம் கொடுப்பதற்கு அம்மக்கள் சிறிதளவேனும் தயாரில்லை. அதனை அம்மக்கள் விரும்பவும் இல்லை. அவர்கள் அச்சம் பீதி இல்லாத அமைதி சூழலில் சுதந்திரமாக வாழவே எதிர்பார்க்கின்றனர்.

இருப்பினும் ஒரு சிலர் வட பகுதியைத் தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருக்கவே விரும்புகின்றனர். அதனூடாக அற்ப இலாபம் பெற அவர்கள் எதிர்பார்ப்பதாக நம்பப்படுகின்றது. குறிப்பாக வெளிநாடுகளில் தங்கியுள்ள வட பகுதியைச் சேர்ந்த சிலர் தாம் தொடந்தும் அங்கு தங்கி இருப்பதற்கு இவ்வாறான கொதிநிலையை எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது.

அதேநேரம் தம் தேவைகளின் நிமித்தம் பயன்படுத்துவதற்காக இக்குழு முன்னாள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இக்குழுவினரின் நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படுகின்றது.அத்தோடு இக்குழுவில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக்குழுவினரின் செயற்பாட்டில் அரசியல் நோக்கம் இருப்பது மறைக்க முடியாத உண்மையாகும்.

வாள் வெட்டு உள்ளிட்ட வன்முறைச் செயற்பாடுகளில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீண்டும் ஈடுபடுகின்றார்கள் என்றால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட புனர்வாழ்வின் நிலைமை என்ன? என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. ஆகவே சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது. அதற்கான பொறுப்பு அவற்றை செயலுருப்படுத்தும் நிறுவனங்களுக்கு உரியதாகும். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...