குழந்தைகளின் உளநலத்தை பாதிக்கும் ஸ்மாட் ஃபோன்கள் | தினகரன்

குழந்தைகளின் உளநலத்தை பாதிக்கும் ஸ்மாட் ஃபோன்கள்

பாட்டன், பாட்டிகளுடன் வளர்ந்த குழந்தைகள் இன்று ஸ்மார்ட் போன்களுடன்தான் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டுவதற்கும் அடம்பிடித்தால் சமாதானப்படுத்துவதற்கும் இரவு தூங்க வைக்கவும் தங்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்கவைக்கவுமென எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வாக ஸ்மார்ட் போன்களையே பல பெற்றோர் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற குறுகிய கால ஆசுவாசத்துக்காகக் குழந்தைகளின் மன நலனையும் உடல் நலனையும் புறக்கணிப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை பெற்றோர் உணர்வதில்லை.

குழந்தைகளுக்கு ஸ்மார்ட் தொலைபேசி அவசியமா என்பதைப் பெற்றோர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் .குழந்தைகள் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாக முக்கியக் காரணம் பெற்றோர்தான். பச்சிளம் குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு பல தாய்மார்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறார்கள். அப்போது போனில் இருந்து வரும் வெளிச்சம் குழந்தைகளைக் கவரும். இந்த நடவடிக்கைதான் குழந்தைக்கு ஸ்மார்ட் போன் குறித்த ஆர்வத்தை முதலில் தூண்டுகிறது.

ஆறு மாதம் ஆகும்போது குழந்தைக்கு நன்றாகப் பார்வை தெரியும். அப்போது ஸ்மார்ட் போன்களில் அசையும் உருவங்களையும் அவை கவனிக்கின்றன. குழந்தைக்கு மூன்று வயதுக்குள் மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும்.

அந்த வேளையில் குழந்தைகள் பார்க்கும், கேட்கும் விஷயங்களை மிகவும் நுட்பமாகக் கவனிப்பார்கள். இப்படிச் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு செல்போனை அறிமுகப்படுத்துவதால், பிற்காலத்தில் குழந்தைகள் ஸ்மார்ட் போன்களைத் தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை விஷயங்களில் ஒன்று என நம்பத் தொடங்கி விடுகிறார்கள்.

பெற்றோர் சாப்பாடு ஊட்டும் போது, ‘நீ இதைச் சாப்பிட்டால், நான் போன் தருவேன்’ என்று முதலில் சொல்வார்கள். தங்களுக்கு செல்போன் வேண்டும் என குழந்தைகள் நினைக்கும் போது, ‘செல்போன் கொடுத்தால்தான், நான் சாப்பிடுவேன்’ என்று தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

குழந்தைகளுக்குப் பெற்றோர் என்ன கற்றுத் தருகிறார்களோ, அதைத்தான் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். தாங்கள் கற்றுத் தரும் விஷயம் நல்லதா, கெட்டதா என்பதைப் பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும்.

குழந்தைகள் ஒரு பொருளுக்காகத் தொடர்ச்சியாக அடம் பிடிப்பது, நாளடைவில் அவர்களிடம் மனரீதியான பாதிப்பை உருவாக்கக் கூடும் என்கிறார்கள் உளவள மருத்துவர்கள்.ஒரு பொருள் கிடைக்கவில்லை என்கிறபோது குழந்தைகளுக்கு வரும் கோபத்தில் பல பரிமாணங்கள் உண்டு. குழந்தைகள் அதீதமாகக் கோபப்பட்டுத் தன்னையே வருத்திக் கொள்ள நினைப்பது இதில் முக்கிய பிரச்சினை. இதுபோன்ற குழந்தைகளுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

அதேபோல் தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன் போன்ற விஷயங்களில் மூழ்கியிருக்கும் குழந்தைகள் நடைமுறை வாழ்வில் இருந்து விலகி, பெரும்பாலும் கற்பனை உலகிலேயே வாழ்வார்கள்.

வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது, வகுப்பறையில் மற்ற குழந்தைகளிடமும் ஆசிரியரிடமும் பேசாமல் இருப்பது, பாடத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது போன்றவற்றை வைத்து ஒரு குழந்தையின் மனநிலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதை உணரலாம்.

ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கித் தருவதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும். அவர்கள் அடம்பிடித்தாலும், முடியாது எனப் பெற்றோர் கண்டிப்பாக மறுக்க வேண்டும்.

குழந்தைகள் முன்னிலையில் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் முதலில் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களுடன் விளையாட வேண்டும். மற்ற குழந்தைகளுடன் அவர்களை விளையாட வைக்க வேண்டும். பிறருடன் தங்கள் குழந்தையை ஒப்பிட்டுப் பேசும் தவறை மறந்தும் கூடப் பெற்றோர் செய்யக் கூடாது.

ஐந்து வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு செல்போன், ஸ்மார்ட் போன் ஆகியவற்றைக் கொடுக்கக் கூடாது. ஐந்து வயது முதல் பத்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பார்க்க மட்டும் குறைந்த அளவு நேரம் ஒதுக்கினால் போதும். பத்து முதல் பதினைந்து வயதுவரை உள்ளவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி கட்டுப்பாடுகளை மாற்றிக் கொள்ளலாம்.

காலையில் எழுந்தால் பல் துலக்க வேண்டும், குளிக்க வேண்டும், சாப்பிட வேண்டும் எனக் கற்றுத் தருவதுபோல் ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கூடாது என்பதைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கவும், அதனால் வரும் பிரச்சினை எடுத்துரைக்கவும் வேண்டும். பெற்றோர் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தால் மட்டுதான் ஸ்மார்ட் போன் போன்றவற்றின் பிடியில் இருந்து குழந்தைகளை மீட்க முடியும் என்கின்றனர் குழந்தை மனநல மருத்துவர்கள். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...