எம்.எல்.ஏக்களை வளைக்க சசிகலா மீண்டும் திட்டம்! | தினகரன்

எம்.எல்.ஏக்களை வளைக்க சசிகலா மீண்டும் திட்டம்!

தமிழ்நாட்டின் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று மாநில அமைச்சர்கள் அச்சத்தில் இருக்க, அதிக பண ஆசையில் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் காத்திருக்கின்றனர். எம்.எல்.ஏக்களை பணத்தால் வளைக்க மன்னார்குடி சசிகலா கோஷ்டி திட்டமிட்டுள்ளது.

தமிழக அமைச்சர்கள் மத்தியில், ஆட்சிக் கவிழ்ப்பு குறித்த அச்சம் இருந்தாலும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் உற்சாகத்துடன் வலம் வருகின்றனர். ' இரண்டாம் கட்ட அறுவடைக்கான நேரம் நெருங்கி விட்டது. கூடுமான வரையில் இலாபம் பார்த்து விட வேண்டும்' என்ற எண்ணத்தில், நடப்பதைக் கவனித்து வருகின்றனர்.

மாவட்டங்களில் நடக்கும் அமைச்சர்களின் விழாக்களையும் எம்.எல்.ஏக்கள் பலரும் புறக்கணிக்கின்றனர். கடலூரில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஆய்வுப் பணிகளை பார்வையிட அமைச்சர்கள் சென்ற போது, சில எம்.எல்.ஏக்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்து விட்டனர்.

" இன்னும் பெரிய அளவுக்கு எம்.எல்.ஏக்கள் ஆசைப்படுகிறார்கள். கூவத்தூரை விட இரண்டு மடங்கு ஆசையில் இருக்கிறார்கள் எம்.எல்.ஏக்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது தினகரன்- _திவாகரன் கோஷ்டி" என அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுஇவ்விதமிருக்க, தமிழக சட்டசபையில் எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர தி.மு.க திட்டமிட்டுள்ளது. இந்தமுறை எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்புமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. சட்டசபையில் பத்து சதவீத எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால்தான் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர முடியும். இந்த ஆட்சியைக் கலைப்பதற்கு தி.மு.க தயாராக இருக்கிறது.

இதற்கான சூழலுக்காகத்தான் இவ்வளவு நாள் ஸ்டாலின் காத்திருந்தார். இப்போது எடப்பாடி_-தினகரன் சண்டை அதற்கான வாய்ப்பைக் கொடுத்து விட்டதாக அவர் கருதுகிறார்.

"திமுகவுடன் நாங்கள் கை கோர்த்தால் ஆட்சி கவிழும்" என தினகரன் தரப்பு எச்சரிக்கையாகவே கூறி விட்டது.

இதற்குப் பதில் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்போ, "உங்கள் குடும்பத்துக்கு எதிராக எதையும் செய்யாமல் அமைதியாக இருந்ததால்தான், என்னுடைய செல்வாக்கு பெரியளவில் உயரவில்லை. அமைதியாக இருக்கலாம் என நினைத்தால் நீங்கள் விடப் போவதில்லை.

ஆட்சிக்கு எதிராக சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டாலும், கைது நடவடிக்கையைத் தடுக்க முடியாது. உங்கள் குடும்பத்தை வலுவாக எதிர்த்தால்தான் என்னால் வளர முடியும். அதற்கான சூழலை நீங்களே உருவாக்கிக் கொடுக்கிறீர்கள். இனி நீங்களா? நானா எனப் பார்த்து விடுவோம்" எனக் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.

சட்டசபைக் கூட்டத் தொடரில் திமுகவுடன் தினகரன் கை கோர்ப்பாரா என்பதே இன்றைய எதிர்பார்ப்பு ஆகும்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...