Friday, April 19, 2024
Home » மண்சரிவு, வௌ்ள அனர்த்தங்களால் பல குடும்பங்கள் இடம்பெயர்வு
சீரற்ற காலநிலை மேலும் நீடிக்கும்;

மண்சரிவு, வௌ்ள அனர்த்தங்களால் பல குடும்பங்கள் இடம்பெயர்வு

by damith
October 16, 2023 7:10 am 0 comment

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 75 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி காணப்படுமென்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, கடும் காற்று, மின்னல் தாக்கங்களும் இடம்பெறலாமென்றும் தெரிவித்துள்ள அந்த நிலையம் இயற்கை அனர்த்தங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதில் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாமென்றும் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் கடற் பிரதேசங்களில் காலையில் மழை வீழ்ச்சி ஏற்படலாமென்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் பனியுடன் கூடிய காலநிலை காணப்படுமென்றும் வாகனங்களை செலுத்துபவர்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டுமென்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள கொஸ்லந்தை, மீரியவத்தை பகுதியில் வகிக்கும் 134 குடும்பங்கள் மற்றும் மககந்த பகுதியில் வசிக்கும் 23 குடும்பங்கள், மகல்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 84 குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

அதேவேளை கொத்மலை, வேனலாவ கிராமத்தில் நிலத்திற்கடியில் அச்சப்படத்தக்க விதத்தில் இடம்பெற்றுள்ள சத்தம் காரணமாக அந்த கிராமத்திலுள்ள 50 குடும்பங்கள் இரவு வேளைகளில் மாத்திரம் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுவருவதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

இந்த கிராமம் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளதால் தொடர்ச்சியாக நிலத்திற்கடியில் இவ்வாறான சத்தம் வெ ளிவருவதாகவும், அதுதொடர்பில் கொத்மலை பிரதேச செயலாளருக்கு அறிவித்து மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொகவந்தலாவ, தெரைசா தோட்டத்தில் லயன் தொகுதியொன்றின் மீது நேற்று மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 5 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அதன்காரணமாக அந்த வீடுகளில் வசித்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடும் மழை காரணமாக தெருறுஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் நேற்றுக் காலை திறக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிக்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் சம்பத் சமரஜீவ அதுதொடர்பில் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக அந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளதாலேயே நான்கு வான் கதவுகளை திறக்க நேர்ந்தது என்றும் தற்போது அந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 70.61 மீற்றராக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT