Saturday, April 20, 2024
Home » யாழ். விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்ய கோரிக்கை

யாழ். விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்ய கோரிக்கை

by damith
October 16, 2023 9:17 am 0 comment

யாழ்ப்பாணம் விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 2018-19 காலப்பகுதியில் விவசாய அமைச்சராக மகிந்த அமரவீரவும், விவசாய பிரதி அமைச்சராக நானும் கடமையாற்றினேன்.

அப்போது, எமது யாழ் மாவட்டத்தில் விவசாய புத்தெழுச்சியை ஏற்படுத்த அமைச்சர் பெரும் முன்னெடுப்புகளை செய்திருந்தார்.

குறிப்பாக உருளைக்கிழங்கு, மிளகாய் பயிர்ச்செய்கைகளின் ஊடாக யாழ் மாவட்ட விவசாய துறையை வருமானமீட்டும் துறையாக மாற்ற எம்மால் முடிந்திருந்தது.

சின்ன வெங்காயத்துக்கு அடுத்ததாக உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை தற்போது விளங்குகிறது.

பாரம்பரிய விவசாயத்துடன், பெறுமதிசேர் விவசாய செயற்பாடுகளை யாழில் அறிமுகம் செய்து அதனூடான வருமானங்களை இம்மண்ணுக்கு கொண்டுவர அமைச்சர் முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளின் உருளைக்கிழங்கு அறுவடைகளில் அதிகப்படியான அடைவுமட்டம் (target achieve) 2019ம் ஆண்டில் பதிவாகியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்குகளை எமது விவசாயிகள் பயன்படுத்திவந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அவற்றை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே எமது விவசாயிகளுக்கு உள்ளூர் விதை உருளைக்கிழங்குகளை பெற்று வழங்குவதற்கு அமைச்சர் உதவி செய்ய வேண்டும்.

அதேவேளை எமது விவசாயிகளின் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உற்பத்திகளுக்கான பெறுமதி சேர்க்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. உள்ளூர் ஏற்றுமதிச்சந்தைகளை தாண்டி ஐரோப்பா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும்.

தற்போது, இந்தியாவுடனான கடல் மற்றும் வான் வழி தொடர்புகளை யாழ் மாவட்டம் கொண்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய சந்தை வாய்ப்புகளை எமது உற்பத்திகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

ஆகவே கடந்த காலங்களில் எமது விவசாயத்துறைக்கு மேற்கொண்ட உதவிகள் போன்று தற்போதைய இந்நல்வாய்ப்புகளை பயன்படுத்தவும் உதவிகளை செய்ய வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் எனத் தெரிவித்தார்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT