Friday, March 29, 2024
Home » ஆரம்பப் பிரிவு மாணவரின் ஆளுமை விருத்தியில் ஆசிரியர்களின் வகிபாகம்

ஆரம்பப் பிரிவு மாணவரின் ஆளுமை விருத்தியில் ஆசிரியர்களின் வகிபாகம்

by damith
October 16, 2023 3:02 pm 0 comment

ஒரு பிள்ளையின் வாழ்நாள் கல்வியின் வித்து ஆரம்பக் கல்வியே. வாழ்நாள் முழுவதுமான கல்விக்கு அத்திவாரமாகவும் அடிப்படையாகவும் அமைவது இக்கல்வியே. அந்த வகையில், ஆரம்பப் பிரிவை பொறுத்தவரை சிறார்களை அவர்களின் ஆற்றலுக்கு ஏற்ப வடிவமைப்பது ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். ஆரம்பப் பிரிவு மாணவர்கள் வயதிலும் பக்குவத்திலும் சிறியவர்கள், முதிர்ச்சி அடையாதவர்கள் என ஆசிரியர்கள் அவர்களை புறந்தள்ளியோ, ஒதுக்கியோ செயற்பட முடியாது. இரண்டாம் நிலை, உயர்நிலை கல்விக்கு தேவையான ஆளுமையின் அடிப்படைகளை அத்திவாரமிடுவதில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களே முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஊடாக மாணவர்களுக்கு ஆளுமை விருத்தியை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டி உள்ளது. தொடர்பாடல், ஆளுமை விருத்தி, சூழல், வேலை உலகிற்கு தயார் செய்தல், சமயமும் ஒழுகலாறும், ஓய்வு நேரத்தை பயன்படுத்துதல், விளையாட்டு என ஏழு வகை அடிப்படைத் தேர்ச்சிகளை மாணவர்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு ஆசிரியர் சமூகத்திடம் காணப்படுகின்றது. அதற்காக ஆசிரியர் சிறந்த உளவியல், தத்துவார்த்த பின்புலத்தையும் ஆற்றலையும் கொண்டிருத்தல் வேண்டும்.

ஆரம்பப் பிரிவில் பொதுவாக செயற்பாட்டுடன் கூடிய கற்றல் நடவடிக்கைகளே முதலிடம் பெறுகின்றன. கல்விச் செயலொழுங்குகள் மூலம் எதிர்பார்க்கப்படும் மாணவர்களின் அடைவு மட்டமானது பயனுறுதி மிக்க வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் மூலமே சாத்தியமாகும். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றும் பொறுப்பு ஆசிரியரையே சார்ந்தது. மாணவர்களை ஆளுமை மிக்கவர்களாக மாற்றியமைக்க ஆசிரியர் ஒருவர் தன்னியல்பான பல ஆளுமை கூறுகளை விருத்தியாக்கிக் கொள்ள வேண்டும். புதிய அறிவு விருத்தியும் தொழில்நுட்பக் கருவிகளை கையாள்வதில் பயிற்சியும் எண்ணங்களின் தெளிவான பார்வையும் என தன்னிலைகளை மாற்ற வேண்டியவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர்.

வெறுமனே பேச்சு, வினாவிடை மூலம் அறிவை மாணவர்களுக்கு வழங்காமல் தேடி ஆய்வில் ஈடுபட்டு அனுபவங்களின் ஊடாக அறிவையும் விளக்கத்தையும் தனிப்பட்ட ரீதியில் உருவாக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பினை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் விரிந்த சிந்தனையும் சிறந்த ஆளுமையும் கொண்ட பல்வேறு வகிபாகங்களை நிறைவேற்ற வேண்டிய வாண்மைத்துவ தகைமைகளை உடையவர்களாக நிலைமாறுதல் வேண்டும்.

ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் சிறுவர்களுக்கு உரிய முறையில் வகுப்பறையை முகாமைத்துவம் செய்து, ஆக்கபூர்வமான கற்றல் சூழலை உருவாக்க வேண்டும். தனது கற்பித்தலில் பல நுட்பமுறைகளை கையாள வேண்டும். மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விடய ஆய்வு, கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் கற்பித்தலில் ஈடுபடும் போது மாணவர்களுக்கு அறிவை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வழியை ஏற்படுத்தி, ஆளுமை விருத்தியை மேம்படுத்தலாம்.

ஆளுமை விருத்தியை ஏற்படுத்துவதில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் போலவே இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் பங்குண்டு. அந்தவகையில், பாடசாலை விளையாட்டுப் போட்டி, கலைவிழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், சாரணிய இயக்கம் போன்ற செயற்பாடுகளில் ஆசிரியர்கள் முன்னின்று மாணவர்களை செயற்பட வைப்பதன் ஊடாக, மாணவர்களின் சேர்ந்து இயங்கும் திறன், பொருந்தி வாழும் தன்மை, வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, உற்சாகம், பேச்சாற்றல், தலைமைத்துவப் பண்பு என உடல், உள, சமூக, மனவெழுச்சி விருத்திகளை சிறுவயதிலிருந்தே படிப்படியாக மேம்படுத்த முடியும். கண்காட்சி, சிரமதானம், சுற்றுலா என பல செயற்பாட்டு ரீதியான திட்டங்களில் மாணவர்களை அனுபவரீதியாக பங்கேற்க வைப்பதனூடாக நிகழ்வுகளை தாமாகவே முன்னின்று செயற்படுத்துதல், குழுவாக செயற்படுதல், ஒற்றுமையை விருத்தி செய்தல் போன்ற பல திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் ஆசிரியர்கள் வசதி அளித்து கொடுக்க வேண்டும்.

தமிழ்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டி நிகழ்வுகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் இதற்காக தங்களை தயார் செய்து விருத்தியாக்கிக் கொள்வதும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

வகுப்பறையில் பல்வேறு வகையான கற்றல் கற்பித்தல் சூழலில் வசதி அளிப்பவர், கூட்டுப் பணியாளர், பயிற்சியாளர், வழிகாட்டியாளர், தொழில்நுட்பவியலாளர், மதிப்பீட்டாளர், புத்தாக்குனர், முகாமையாளர், கலாசார முகவர் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்பவர் போன்ற வகிபாகங்களை வகிப்பதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்ய முடியும்.

‘இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்’ என்ற கூற்றுக்கு இணங்க, கல்விச் சமூகத்தின் நாளைய தலைவர்களாக வளர்ந்து கொண்டிருக்கும் ஆரம்பப் பிரிவு மாணவர்களை சிறந்த ஆளுமை மிக்க பண்பு கொண்டவர்களாக செதுக்குவது 21ஆம் நூற்றாண்டு ஆசிரியர்களின் திறனும் வகிபாகமும் ஆகும்.

– R.Rinosha
B.A. (First Class Honours in Political Science& Public Policy), PGDE (R), SLTS,
Iqra Primary Vidyalaya, Hambantota

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT