Friday, March 29, 2024
Home » நாட்டில் ஜப்பான் – இலங்கை சுதந்திர வர்த்தக வலயம்; இடமும் தெரிவு

நாட்டில் ஜப்பான் – இலங்கை சுதந்திர வர்த்தக வலயம்; இடமும் தெரிவு

- 15 பில்லியன் டொலர் பாரிய முதலீட்டுடன் துறைமுக நகர செயற்பாடுகள்

by Rizwan Segu Mohideen
October 14, 2023 10:36 am 0 comment

ஜப்பான் – இலங்கை சுதந்திர வர்த்தக வலயமொன்றை இந்நாட்டில் உருவாக்கத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதற்காக பிங்கிரிய மற்றும் இரணவில ஆகிய பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,

“தற்போது துறைமுக நகரம் தொடர்பான நிர்மாணப் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி தற்காலிகமாக பொதுமக்களுக்கு பார்வையிடவும் திறக்கப்பட்டுள்ளது.

முத்தரப்பு ஒத்துழைப்பின் கீழ் துறைமுக நகர செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதிகொண்ட திட்டமாகும். சைனா ஹார்பர் நிறுவனத்தின் சுமார் 80% நிர்மாணப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

துறைமுக நகரத்தில் வர்த்தகம் செயற்பாடுகளுக்கு அவசியமான சட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு செயல்பாட்டு விதிமுறைகளும் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படுள்ளன. ஏனைய சட்ட வரைவுகளும் எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன. ஆனால், சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்கும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன்படி, எதிர்காலத்தில் இந்த முதலீடுகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முழுமையான வணிக செயற்பாடுகளுக்காக 74 நிலப் பகுதிகள் (Project plots) இத்திட்டத்தில் உள்ளடங்குகின்றன. பொதுவான செயற்பாடுகளுக்காக 44 பகுதிகள் உள்ளன. அதன்படி இங்கு மொத்தம் 118 நிலப் பகுதிகளுக்கான (Project plots) முதலீடுகள் உள்ளன.

மேலும், ஜப்பான்-இலங்கை சுதந்திர வர்த்தக வலயமொன்றை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை பிங்கிரிய பிரதேசத்திலும் இரணைவிலைக்கு அருகாமையிலும் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான்-இலங்கை வர்த்தக சபை ஒன்று உள்ளது. ஜப்பானில் உள்ள அந்த சபையில் பாரிய அளவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஏராளமான தொழிலதிபர்கள் உள்ளனர்.

அவர்கள் இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்க விரும்புகிறார்கள். அதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”” என்றும் முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT