Friday, April 19, 2024
Home » சகவாழ்வு, சகோதரத்துவத்துக்கு நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி

சகவாழ்வு, சகோதரத்துவத்துக்கு நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி

by sachintha
October 13, 2023 11:28 am 0 comment

இஸ்லாம் சமூக ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. அல் குர்ஆன் இதனை பல இடங்களில் எடுத்தியம்பியுள்ளதோடு நபி (ஸல்) அவர்களும் சமூக ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பெரிதும் வலியுறுத்தியுள்ளார்கள். இதன் ஊடாக சகோதரத்துவ வாஞ்சை மிக்க இஸ்லாமிய சமூகம் உருவானது.

சமூக ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வே மாபெரும் முன்மாதிரியாகும். அது அன்னார் முன்னெடுத்த இலட்சிய பயணத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.

முஸ்லிம்கள் அல்லாஹ் ஒருவனை வணங்கி வழிபடுகின்றனர். இறுதித்தூதர் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு எல்லா காலத்திற்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்கக்கூடிய திருமறையும் ஒன்று தான், தொழுகைக்காக எழுந்து நின்று முன்னோக்கும் இடமும் ஒன்றுதான், தொழுகைக்காக அழைக்கும் அழைப்பும் ஒன்றுதான். தவாப் செய்யும் கஃபாவும் அவர்களுக்கு ஒன்றாகத்தான் இருக்கின்றது. இஹ்ராம் அணியும் ஆடையும் ஒரே நிறம் தான். இவற்றில் சிறியவர் பெரியவர், பேதை-மேதை, ஏழை -பணக்காரர், அழகுள்ளவர்-அழகற்றவர் போன்ற எந்த வேறுபாடுகளும் இல்லை. இவை அனைத்தும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமூகம் என்பதை படம் பிடித்து காட்டுகின்றன.

இதனை அல்குர்ஆன் , “இன்னும் நீங்கள் யாவரும் சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்”.(ஆல இம்ரான்:103) என்று எடுத்தியம்பியுள்ளது.

மக்காவிலிருந்து அனைத்தையும் துறந்து அகதிகளாக மதீனா நோக்கி பயணமான மக்காவாசிகளுக்கும் மதீனாவாசிகளுக்கும் இடையில் ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையில் நபி (ஸல்) அவர்களால் ஏற்படுத்தப்பட்ட உன்னதமான முதல் பணியே “அல் முஆஹாத்” சகோதர வாஞ்சையைக் கட்டியெழுப்புதல் எனும் பணியாகும். உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் மதீனா வாசிகளின் அரவணைப்பும் அன்பும் இருந்ததாக வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. இந்த சகோதர வாஞ்சையின் அடிநாதத்தில் கட்டியெழுப்பப்பட்ட சமூக ஒற்றுமையை இஸ்லாம் உலகறியச் செய்தது. அந்த ஒற்றுமையாளர்களை அல்லாஹ் நேசிப்பதாகவும் அல்குர்ஆனின் அல் ஸப் என்ற அத்தியாயத்தின் நான்காவது வசனம் எடுத்தியம்பியுள்ளது.

இஸ்லாம் கடமையாக்கியுள்ள ஒவ்வொரு கடமையின் ஊடாகவும் சமூக ஒற்றுமையை கட்டியெழுப்புவற்கான வழிகளை ஏற்படுத்தியுள்ளது. தொழுகையின் போது அணிகளை நெருக்கமாக்காமல் நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்க மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இறுதித் தருணம், இந்த உலகிற்கு விடை கொடுக்கும் நாள் ஸுபஹ் தொழுகை நேரம் திரையை நீக்கிவிட்டு பார்க்கின்றார்கள், எல்லா சஹாபாக்களும் தோளோடு தோள் நின்று, ஒரே அணியில் தொழும் காட்சியை கண்டு பூரித்துப் போனார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தன் சமூகத்தார் மத்தியில் விதைக்க விரும்பிய உன்னத இலக்கு ஈமானின் ஒளியில் புடம்போடப்பட்ட ஒற்றுமைச் சமூகமாகும். அதைக் கண்கூடாகக் கண்டபோது ஏற்பட்ட பூரிப்பே அது. முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை எப்படி இருக்க வேண்டும் என்பதனை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள், “மூஃமின்கள் ஒரு மனித உடலுக்கு ஒப்பானவர்கள். ஒரு மனிதனது கண்ணில் வலி ஏற்பட்டால் அவனது முழு உடம்பும் அவ்வலியை ஏற்றுக்கொள்கின்றன. அவ்வாறே ஒரு மனிதனது தலையில் வலி ஏற்பட்டால் அவனது முழு உடம்பும் அவ்வலியை தாங்கிக் கொள்கின்றன.” (ஆதாரம்-: அஹ்மத்)

இவ்வொழுங்கின் பிரகாரமே முஸ்லிம்களின் ஒற்றுமை நபி (ஸல்) அவர்களால் கட்டியெழுப்பப்பட்டது. முஸ்லிம்களோடு மட்டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தாரோடு சேர்ந்து வாழ்ந்த மாற்று மத சகோதரர்களோடும் ஒற்றுமையைப் பேணி நல்லிணக்கத்தோடு வாழும்படி பணித்தார்கள். இவ்வுலகமே வியந்து பார்க்குமளவுக்கு எல்லா சமூகத்தினரோடும் ஒற்றுமையைப் பேணி வாழ்ந்தார்கள்,

குறிப்பாக ‘நபி (ஸல்) அவர்கள் யூதர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளார்கள். அன்னார் தமது இரும்புக் கவசத்தை ஒரு யூதரிடம் அடமானமாக வைத்து அவனிடம் உணவுப் பொருட்களைக் கடனாக பெற்று இருந்தார்கள்’.

(ஆதாரம்: புஹாரி)

‘ஒரு தடவை நாயகம் (ஸல்) அவர்களைக் கடந்து பிரேத ஊர்வலமொன்று சென்ற போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். ‘இது யூதருடைய பிரேதம்’ என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அதுவும் ஒரு உயிர் அல்லவா? என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஏனைய சமூகத்தினருடனும் சகவாழ்வுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்துள்ளார்கள். அதன் ஊடாக இரண்டு தசாப்தங்களுக்குள் ஒரு மாபெரும் ஒற்றுமைப் புரட்சியின் ஊடாக மிகச் சிறந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பினார்கள். இதற்கு அல் குர்ஆனின் பல வசனங்களும் அடித்தளமாக அமைந்தன.

எனவே சகோதரத்துவ ஒற்றுமையைப் பேணிப் பாதுகாத்திட வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். அதன் ஊடாக அல்லாஹ்வின் அருளையும் கருணையையும் அடைந்திடுவோம்.

கலாநிதி, அல்ஹாபிழ் எம்.ஐ.எம். சித்தீக்…

(அல்-ஈன்ஆமி)

B.A.Hons,(Al- Azhar university, Egypt) M.A.& PhD (International Islamic university, Malaysia)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT