IS அமைப்பின் வீழ்ச்சி; ஈராக் ஈட்டிய சாதனையும் எதிர்கால சவால்களும் | தினகரன்

IS அமைப்பின் வீழ்ச்சி; ஈராக் ஈட்டிய சாதனையும் எதிர்கால சவால்களும்

ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிராண்ட் அல் - நூரி மசூதியைக் கைப்பற்றியிருப்பதன் மூலம், ஐ.எஸ் அமைப்புக்கு ஈராக் படைகள் ஓரளவு முடிவு கட்டியிருக்கின்றன.

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் -பாக்தாதி, முஸ்லிம் அரசின் தலைவரென 2014-இல் தன்னை அறிவித்துக் கொண்டது இந்த மசூதியில்தான். தற்போது மொசூலின் சில பகுதிகளில் மட்டும் ஐ.எஸ் பயங்கரவாத ஆயுததாரிகள் மிஞ்சியிருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் தங்கள் முழு வெற்றியை அறிவிக்கப் போவதாக ஈராக் தளபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ் அமைப்பினரின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், ஈராக் படையினர் மொசூலை விட்டு வெளியேறியிருந்த நிலையில், இது அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றிதான். மொசூலைக் கைப்பற்றும் நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஈராக் பிரதமர் ஹைதர் அல் - அபாதி, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கையில் உறுதியாக இருந்தார்.

ஈராக் படைகள் ஒருபுறம் போரிட்டுக் கொண்டிருக்க, ஈரானிடம் பயிற்சி பெற்ற ஷியா படையினரும், குர்து இன பெஷ்மெர்கா படையினரும் அந்நடவடிக்கையில் இணைந்து கொண்டனர்.

மறுபுறம், ஐ.எஸ் படையினர் மீது அமெரிக்க இராணுவ விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தின.

அமெரிக்காவும் ஈரானும் பகை நாடுகள்; குர்து படையினருக்கும் ஈரான், ஈராக்குக்கும் நல்ல உறவில்லை எனும் சூழலில், ஐ.எஸ் படையினரை எதிர்த்துப் போரிட அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தது நல்ல உதாரணம். பிற பகுதிகளில், குறிப்பாக இன்னமும் ஐ.எஸ் ஆதிக்கம் நிலவி வரும் சிரியாவில் இதுபோன்ற அணுகுமுறை கைகொடுக்கும்.

மொசூல் நகரை மறுகட்டமைப்பது என்பது பிரதமர் அபாதிக்கு ஒரு பெரும் சவால்தான். கூடவே, ஐ.எஸ் அமைப்பினர் மீண்டும் பலம் பெற்று விடாமல் தடுக்க வேண்டிய சவாலும் இருக்கிறது.

2006-ல் ஈராக்கில் அல்-_கொய்தா தலைவர் அபு முஸாப் அல் -ஜர்காவி கொல்லப்பட்ட பின்னர், அந்த அமைப்பினர் சிறிது காலம் பின்வாங்கியிருந்தாலும் மீண்டும் ஈராக்கின் அப்போதைய பிரதமர் நூரி அல் - மாலிகி தலைமையிலான ஷியா அரசின் குறுங்குழுவாதக் கொள்கைக்கு எதிராக சன்னி பிரிவினர் போரிடத் தொடங்கியது, சிரியாவில் ஏற்பட்ட நெருக்கடிகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அல்-_கொய்தா படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர்.

அதேபோல், ஐ.எஸ் படையினரும் மீண்டும் தலையெடுக்க வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில், நூரி அல்-மாலிகி செய்த தவறை, தானும் செய்யப் போவதில்லை எனும் நம்பிக்கையை ஈராக் மக்களிடம் பிரதமர் அபாதி ஏற்படுத்த வேண்டும். அதுதான் மிகப் பெரிய சவால்! 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...