சுயாதீன விசாரணை இன்றேல் இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜராவேன் | தினகரன்

சுயாதீன விசாரணை இன்றேல் இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜராவேன்

வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்
 
சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணைகள் நடைபெறுமானால் அதற்கு முன்னைய விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கியதுபோன்று பூரணமான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர். ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுமொரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
எனினும் அவ்வாறான விசாரணைக்குழு அமைக்கப்படாதவிடத்து மத்திய அரசின் சட்டபூர்வ விசாரணைக்குழுவான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் நானாக ஆஜராகி என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சமர்ப்பித்து விசாரணைக்கு உட்படுவேன் என ப. சத்தியலிங்கம் மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் நான் ஒருபோதும் விசாரணைக்கு பயந்தவன் அல்ல. பயப்படவேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் எந்தவிதமான குற்றங்களையும் செய்யவில்லை. இந்த மாகாணத்தின் சுகாதார துறை அபிவிருத்திக்காகவும், கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காவும் பணிசெய்யவே எனது மருத்துவ  தொழிலை இராஜினாமா செய்துவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தேன். அமைச்சுப்பதவியும் நான் கேட்டுப் பெற்றுக்கொள்வில்லை. துறைசார் அனுபவத்தின் அடிப்படையில் கட்சியின் தலைமையும்இ மாகாண முதலமைச்சரும் என்னை அமைச்சராக நியமித்தார்கள்.
 
அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட பதவியைக்கொண்டு மாகாணத்தின் சுகாதார துறை அபிவிருத்திக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எனது சக்திக்கும் மாகாண சபையின் சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் அர்ப்பணிப்புடன் எனது கடமையை செய்திருக்கின்றேன். தற்போதும் செய்துகொண்டிருக்கின்றேன்.
 
கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அநாதரவாக விடப்பட்டுள்ள பொதுமக்கள், முன்னாள் போராளிகள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், கணவனை இழந்த மனைவிமார், விசேட தேவைக்குட்பட்டவர்கள் இவர்களை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்காக நாங்கள் எவ்வளவோ செய்யவேண்டியுள்ளது. அவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் பலவற்றை எனது அமைச்சு செய்துவருகின்றது. 
 
அதைவிடுத்து வெறும் ஆவேசப்பேச்சுக்களை மட்டும் பேசி காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களோடு மக்களாக அவர்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்தவன் என்ற வகையில் அவர்களின் துயரங்களை நன்கறிவேன்.
 
கடந்த மூன்றரை வருடங்களில் வடக்கு மாகாண சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்திகளை கண்டுள்ளது. இதை கண்கூடாக பார்க்கலாம். நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான பல திட்டங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். எனினும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளாலும், பதவிமோகத்தினாலும் சிலர் என்மீது அபாண்டமான பழியைச் சுமத்தியுள்ளனர்.
 
மக்கள் தங்கள் வாக்கு பலத்தினால் தமக்கு சேவை செய்யவே எங்களை தெரிவுசெய்துள்ளனர். அவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது. மக்கள் மனங்களிலுள்ள சந்தேகத்தை போக்கவேண்டியது எனது கடமையாகும். அதை செய்வதற்காக சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாணைக்குழு முன்னிலையில் அல்லது  மத்திய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு சமூகமளிக்க தயாராகவுள்ளேன்  என தெரிவித்தார்.
 
(கோவில்குளம் குரூப் நிருபர் - கந்தன் குணா)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...