ஊடகவியலாளர் கொலை தொடர்பில் அமைச்சு பதவி கிடைக்கவில்லை? | தினகரன்

ஊடகவியலாளர் கொலை தொடர்பில் அமைச்சு பதவி கிடைக்கவில்லை?

ஊடகவியலாளர் சிவராம் கொலையுடன் தொடர்பு உள்ளதால் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அமைச்சுப் பதவி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வெளிவந்துள்ள செய்தியை மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் மறுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக எமது பிராந்திய ஊடகவியலாளர்   தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட் அமைப்பின்) உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவனேசனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
குறித்த உரையாடல் வருமாறு,
 
ஊடகவியலாளர்: வடக்கு மாகாண சபை அமைச்சு தொடர்பாக நீங்கள் முதலமைச்சருக்கு சுயவிபரக்கோவை ஒன்றை அனுப்பினீர்களா?
 
க. சிவநேசன் : இல்லை
 
ஊடகவியலாளர்: அவ்வாறு இல்லையெனில் ஏன் தற்போது உங்களை பற்றி ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இது உண்மையா?
 
க. சிவநேசன் :  முதலமைச்சரின் செயலகத்தில் இருந்து   மின்னஞ்சல் ஊடாக    சகல மாகாண சபை உறுப்பினர்களுக்கும் சுயவிபரக்கோவையை அனுப்புமாறு கோரியிருந்ததை அறிந்தேன். அந்த சுயவிபரக்கோவை எனக்கும் கிடைத்திருந்தது. இது  அமைச்சு விடயத்திற்கா வேறு நோக்கத்திற்காக  என்று எனக்கு தெரியாது. ஆனால் எனது சுயவிபரக்கோவையை உடனே அனுப்பினேன். ஆனால்   தற்போது வெளிவந்துள்ள செய்தி குறித்து   எனக்கு தெரியாது. அத்துடன்  நான் அனுப்பிய சுயவிபரக்கோவைக்கு முதலமைச்சர் என்ன பதில் அனுப்பினார் என்று கூட நான் இன்னும் பார்க்கவில்லை .
 
ஊடகவியலாளர்: அப்படியாயின் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது நீங்கள் வெளிநாட்டில் இருந்துள்ளீர்களே உண்மையா?
 
க. சிவநேசன் : படுகொலை நடைபெற்ற வேளை நான் இலங்கையிலேயே இருந்தேனா இல்லையா என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால் வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வந்துள்ளேன். சம்பவம் நடைபெற்ற வேளை உள்நாட்டிலா வெளிநாட்டிலா இருந்தேன் என்று ஆராய வேண்டும். மேலும் ஊடகவியலாளர் படுகொலை தொடர்பாக எனக்கு இதுவரை எவ்வித விசாரணைக்கும் அழைப்பு விடுக்கவும் இல்லை. ஆயினும் தேவையற்ற விடயங்களை சில ஊடகங்கள் பரப்புகின்றன என  குறிப்பிட்டார்.
 
ஊடகவியலாளர்: தனிப்பட்ட முறையில் அமைச்சு வேண்டும் என்று நீங்கள் விண்ணப்பித்தீர்களா?
 
க. சிவநேசன் : இல்லை. ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சு வேண்டும் என்று பொதுவாக முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டினேன்.அங்குள்ள மக்கள் நிலைமையினை சுட்டிக்காட்டி இருந்தேன்.இது தவிர அண்மையில் மறைந்த பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஜயாவின் கனவும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என்பதே.
 
ஊடகவியலாளர்: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சக ஆளும்கட்சி உறுப்பினர் து.ரவீகரனுடன் அமைச்சு பதவிற்காக முரண்பட்டதாக சொல்லப்படுகின்தே ?
 
க. சிவநேசன் : இப்ப தான் இந்த விடயம் குறித்து கேள்விப்படுகின்றேன். நான் யாருடனும் முரண்பட்டது கிடையாது. இந்த செய்தி தவறானது. சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினரை கேளுங்கள் என கூறினார்.
 
ஊடகவியலாளர்: நன்றி 
 
தொலைபேசி உரையாடல் நிறைவு...
 
இதேவேளை, கடந்த ஜுன் மாதம் 14 ஆம் திகதி வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து ஆளும்கட்சியில் அங்கம் வகிக்கும், புளொட் அமைப்பின், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிற்கு நிபந்தைனையற்ற ஆதரவினை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மேற்குறித்த விடயமானது அண்மையில் வடக்கு மாகாண சபையில் வெற்றிடமான அமைச்சுப் பதவிகளை நிரப்புவதற்காக  வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து சுயவிவரக் கோவையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.
 
இந்நிலையில்  மாகாண சபை உறுப்பின கந்தையா சிவநேசனால்  அனுப்பி வைக்கப்பட்ட சுயவிபரக்கோவைக்கு பதிலளிக்கும் வகையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் எனவும் அதில், அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஊடகவியலாளர் சிவராம் கொலையில்  அவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...