Wednesday, April 24, 2024
Home » நாட்டில் மழையைத் தொடர்ந்து பரவும் இரு ஆபத்தான நோய்கள்!

நாட்டில் மழையைத் தொடர்ந்து பரவும் இரு ஆபத்தான நோய்கள்!

by gayan
October 12, 2023 6:00 am 0 comment

நாட்டில் தற்போதைய மழைக்காலநிலையைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. அதனால் டெங்கு நோயின் அச்சுறுத்தல் மீண்டும் தீவிரமடையும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புக்கான தேசிய கட்டுப்பாட்டு இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

டெங்கு நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் கடந்த சில தினங்களாக அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பில் சுகாதாரத் தரப்பினர் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.

டெங்கு நுளம்பினால் காவிப் பரப்பப்படும் ஒரு வைரஸாகும். இது நுளம்புகளில் காணப்படும் எல்லா இனங்களாலும் காவிப் பரப்பப்படக் கூடிய ஒன்றல்ல. இவ்வைரஸானது ஈடிஸ் எஜிப்டைய் இன நுளம்புகளால் மாத்திரமே காவிப்பரப்பப்படக் கூடிய ஒரு வகை வைரஸாகும்.

இவ்வின நுளம்புகள் தெளிந்தநீர் தேங்கிக் காணப்படும் இடங்களில் பல்கிப் பெருகும் பண்பை தன்னகத்தே கொண்டுள்ளன. அவை வேறு இடங்களில் பெருகக் கூடியவை அல்ல. அந்தளவுக்கு தனித்துவ பண்பைக் கொண்டிருக்கின்றன இவ்வின நுளம்புகள். அதன் காரணத்தினால் இவ்வின நுளம்புகளின் பெருக்கத்திற்கு தற்போதைய மழைக்காலநிலை நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

வீட்டிலும் சுற்றாடலிலும் தேங்கிக் காணப்படுகின்ற நீர் தேங்கக்கூடிய திண்மக்கழிவுப் பொருட்கள் இவ்வின நுளம்புகளின் பெருக்கத்திற்கு பாரிய பங்களிப்பை நல்கி வருகின்றன. அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் இவ்வின நுளம்புகள்தான் தெளிந்தநீரில் முட்டையிட்டு பல்கிப் பெருகுகின்றன.

இவ்வின நுளம்புகள் இவ்வாறு பெருகுகின்ற போதிலும் அவை எடுத்த எடுப்பில் டெங்கு வைரஸைப் பரப்பக் கூடியவை அல்ல. அவற்றுக்கு டெங்கு வைரஸ் நோய்க்கு உள்ளான நபர் இன்றியமையாததாகும். அவ்வாறான நபரைக் குத்துவதன் ஊடாக இவ்வைரஸைப் பெற்றுக்கொள்ளும் இவ்வின நுளம்புகள் இவ்வைரஸை சுகதேகிகளுக்கு பரப்பும் பண்பைக் கொண்டுள்ளன.

இவ்வின நுளம்புகள் இல்லாவிடில் டெங்கு வைரஸ் பரவ வாய்ப்பும் இராது. அது அச்சுறுத்தாகவும் அமையாது. அதனால்தான் மழைநீர் தேங்க முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்துக் கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. இருந்த போதிலும் மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்க முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்படாத நிலைமையைப் பரவலாக அவதானிக்க முடிகிறது. நுளம்பு ஒழிப்பின் முக்கியத்துவம் உணரப்படாததன் வெளிப்பாடே இது. இதனை இவ்வின நுளம்புகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

ஆனால் இந்நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தினால் டெங்கு வைரஸ் அச்சுறுத்தல் இருக்காது. அதனால் டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும். இவ்விடயத்தில் கவனயீனமாக நடந்து கொள்ளக் கூடாது.

அதுவே மருத்துவர்களின் கருத்தாகும். உண்மையில் மக்களின் ஒத்துழைப்பின்றி இந்நுளம்புகளின் பெருக்கத்தையும் டெங்கு வைரஸின் அச்சுறுத்தலையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இது சுற்றாடலுடன் சம்பந்தப்பட்டதொரு பிரச்சினை என்பதை மறந்து விடலாகாது.

டெங்கு வைரஸின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் எலிக்காய்ச்சல் நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நாட்டில் மழைக்காலநிலையுடன் சேர்த்து தீவிரமடையக் கூடிய மற்றொரு நோயாகவே எலிக்காய்ச்சல் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் சேறுசகதிமிக்க இடங்களில் நடமாடுவதையும் விளையாடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் காரணத்தினால் தற்போதைய சூழலில் காய்ச்சலை அறிகுறியாகக் கொண்ட நோய்கள் காணப்படுமாயின் தாமதமின்றி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ளத் தவறக்கூடாது. அண்மைக் காலமாக டெங்கு, எலிக்காய்ச்சல் இரண்டுமே மழைக்காலநிலையுடன் தீவிரமடையக் கூடிய நோய்களாக விளங்குகின்றன. இந்நோய்களுக்கு உள்ளானவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளும் போது நோயை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிடில் இந்நோய்கள் உயிராபத்துகளைக்கூட ஏற்படுத்திவிட முடியும்.

ஆகவே மழைக்காலநிலையுடன் சேர்த்து ஏற்பட்டுள்ள டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது ஒவ்வொருவரினதும் பொறுப்பு என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT