Thursday, April 25, 2024
Home » மதிப்பாய்வுகளைப் பயன்படுத்தி கொள்கை வகுப்பில் பாராளுமன்ற வகிபாகத்தை வலுப்படுத்துவது முக்கியம்

மதிப்பாய்வுகளைப் பயன்படுத்தி கொள்கை வகுப்பில் பாராளுமன்ற வகிபாகத்தை வலுப்படுத்துவது முக்கியம்

- பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ

by Rizwan Segu Mohideen
October 11, 2023 2:28 pm 0 comment

மதிப்பாய்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கொள்கை வகுப்பில் பாராளுமன்றத்தின் வகிபாகத்தை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது எனப் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான தேசிய மதிப்பாய்வு வாரத்தின் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதி சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உலகளாவிய பாராளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பாய்வு சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹசிம், இந்த சங்கத்தின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக, பாராளுமன்றத்தின் பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, சர்வதேச அபிவிருத்தி மதிப்பாய்வு சங்கத்தின் தலைவர் எடா ஒகம்போ (Ada Ocampo), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா மற்றும் இலங்கை மதிப்பாய்வு சங்கத்தின் தலைவர் கலாநிதி அசேல களுகம்பிட்டிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய பிரதி சபாநாயகர் மேலும் குறிப்பிடுகையில், Eval Colombo 2018 மாநாட்டின் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் கைச்சாத்திடப்பட்ட மதிப்பாய்வு தொடர்பான கொழும்புப் பிரகடனம், இலங்கை பாராளுமன்றத்தில் மதிப்பாய்வு நிறுவனமயமாக்கலுக்கான பிரதான வழிகாட்டியாக மாயிறுள்ளது. இந்த அறிக்கையின் கோட்பாடுகளின் அடிப்படையில் மதிப்பாய்வை நிறுவனமயமாக்கும் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

தேசிய மதிப்பாய்வுக் கொள்கை 2018ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன், தேசிய மதிப்பாய்வுக் கொள்கையை அங்கீகரிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பிரதி சபநாயாகர் பாராட்டினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவிக்கையில், தெற்காசியாவில் தேசிய மதிப்பாய்வுக் கொள்கையை அங்கீகரித்த முதலாவதும், ஒரேயொரு நாடும் இலங்கையாகும் என்றார். குறிப்பாக ஜனாதிபதியின் சரியான தொலைநோக்குப் பார்வை, தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் ஊடாக தேசிய மதிப்பாய்வுக் கொள்கையை இலங்கையில் அமுல்படுத்துவது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மதிப்பாய்வை நிறுவனமயமாக்குவதன் முக்கியத்துவம்; பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் தேசிய பேரவையின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உபகுழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மற்றும் பாராளுமன்ற பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகாரி ரிஷ்மியா நூட்டான் ஆகியோர் நெறியாழ்கைசெய்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT