Saturday, April 27, 2024
Home » இஸ்ரேலின் காசா தாக்குதல் தொடர்கிறது; பணயக்கைதிகளை படுகொலை செய்வதாக ஹமாஸ் எச்சரிக்கை!

இஸ்ரேலின் காசா தாக்குதல் தொடர்கிறது; பணயக்கைதிகளை படுகொலை செய்வதாக ஹமாஸ் எச்சரிக்கை!

- உயிரிழப்பு இஸ்ரேலில் 900, காசாவில் 700 ஆக உயர்வு

by Rizwan Segu Mohideen
October 11, 2023 8:43 am 0 comment

காசாவில் இதுவரை இல்லாத உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் இஸ்ரேலின் உக்கிர வான் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை இன்றி வான் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டால் தமது பிடியில் உள்ள சுமார் 150 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் படுகொலை செய்வதாக பலஸ்தீன போராளிகள் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேல் ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை (09) தொடக்கம் காசா மீது முழுமையான முற்றுகையை செயற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு உணவு, நீர் மற்றும் மின்சார விநியோகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இது ஏற்கனவே மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வரும் காசாவின் நிலைமையை மேலும் மோசமடையச் செய்வதாக உள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வான், தரை மற்றும் கடல் வழியாக நடத்திய தாக்குதல் இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இது அமெரிக்கா மீதான செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு ஒப்பிட்டு பேசப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த எதிர்பாராத தாக்குதலினால் கொல்லப்பட்ட இஸ்ரேலியர் எண்ணிக்கை 900ஐ தாண்டியுள்ளது. இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது. இதில் சுமார் 140 சிறுவர்கள் அடங்கும்.

பெரும் எண்ணிக்கையான பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இஸ்ரேலுக்குள் தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது. இந்நிலையில் இஸ்ரேலிய எல்லைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில் இஸ்ரேலுக்குள் இருந்து சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அது குறிப்பிட்டது. இது கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் அளவை காண்பிப்பதாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா எல்லையை ஒட்டி இருக்கும் இஸ்ரேலிய சமூகங்கள் கிட்டத்தட்ட முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று சூரியோதயத்திற்கு முன்னரும் காசாவில் தொடர்ச்சியான வெடிப்புகள், தீப்பிழ ம்புகள் தெரிந்த வண்ணம் இருந்ததோடு சைரன் ஒலிகளும் கேட்ட வண்ணம் இருந்தது.

இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் கடந்த திங்கட்கிழமை நான்கு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தது. மற்ற பணயக்கைதிகளை தாமே படுகொலை செய்ய ஆரம்பிக்கப் போவதாக அந்த அமைப்பு பின்னர் எச்சரிக்கை விடுத்தது.

“முன்னெச்சரிக்கை இன்றி எமது மக்கள் மீதான ஒவ்வொரு இலக்கிற்காகவும் பணயக்கைதியாக இருக்கும் சிவிலியன் ஒருவர் கொல்லப்படுவார்” என்று ஹமாஸின் ஆயுதப் பிரிவான இஸதீன் அல் கசாம் படை தெரிவித்தது.

கடந்த திங்கட்கிழமை இரவு தொலைக்காட்சியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் அமைப்பை இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுடன் ஒப்பிட்டுக் கூறியதோடு இஸ்ரேல் முன்னெ ப்போதும் இல்லாத வகையில் படைகளை நிலைநிறுத்தத் திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

“ஹமாஸ் பயங்கரவாதிகள் சிறுவர்களை எரித்துக் கொன்றனர். அவர்கள் காட்டுமிராண்டிகள். ஹமாஸ் என்பது ஐ.எஸ் தான்” என்று நெதன்யாகு தெரிவித்தார்.

“ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வடக்கில் மற்ற முனையையும் பலப்படுத்தப்போவதாக” நெதன்யாகு குறிப்பிட்டார். ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகள் இடையே நேற்று முன்தினம் இரண்டாவது நாளாகவும் மோதல் இடம்பெற்றது.

ஹமாஸ் தொலைவில் இருக்கும் டெல் அவிவ் மற்றும் ஜெரூசலம் மீது ரொக்கெட் குண்டுகளை வீசிய நிலையில் அங்குள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு செயற்பட்டதோடு வான் தாக்குதலுக்கான சைரன் ஒலியும் எழுப்பப்பட்டது.

இஸ்ரேல் தனது படை நடவடிக்கைக்காக 300,000 மேலதிக துருப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2.3 மில்லியன் மக்கள் வாழும் குறுகிய நிலப் பகுதியான காசா நீண்ட காலமாக முற்றுகையில் உள்ள நிலையில் அந்தப் பகுதி மீது “முழுமையான முற்றுகை” அமுல்படுத்தப்படுவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் மின்சாரம், உணவு, நீர், எரிவாயு இல்லை. அனைத்தும் மூடப்படுகின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மறுபுறம் காசாவுக்காக எகிப்து எல்லையான ரபா எல்லையில் தற்காலிகமாக மூடப்படுவதாக எகிப்து குறிப்பிட்டுள்ளது.

இந்த முற்றுகை அறிவித்தல் குறித்து ஐக்கிய நாடுகள் தலைவர் அன்டோனியோ குட்டரஸ் தனது கவலையை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மோசமான மனிதாபிமான நிலைக்கு முகம்கொடுத்திருக்கும் காசாவில், நிலைமை மேலும் தீவிரம் அடையும் என்று எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் ஹமாஸை தோற்கடிப்பது மற்றும் பணயக்கைதிகளை விடுப்பதற்கு காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல்களை நடத்தும் வாய்ப்பு அதிகரித்திருக்கும் சூழலில் காசாவின் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

லெபனான் எல்லையில் மோதல்

ஹமாஸின் தாக்குதலை இஸ்ரேலிய எதிரி நாடான ஈரான் வரவேற்றிருப்பது மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. எனினும் இந்தத் தாக்குதலுடன் நேரடி தொடர்பு இல்லை என்று ஈரான் மறுத்துள்ளது.

ஹமாஸ் தனது நடவடிக்கையை “அல் அக்ஸா வெள்ளம்” என்று அழைத்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு மேற்குக் கரை மற்றும் அரபு, இஸ்லாமிய நாடுகளின் போராளிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

“படை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது” என்று ஹமாஸ் அதிகாரி ஹொசம் பத்ரான் டோஹாவில் இருந்து ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். “கைதிகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு தற்போது எந்த வாய்ப்பும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்ட மற்றும் சக்திவாய்ந்த இராணுவம் என்று அழைக்கப்படும் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் எதிர்பாராத தாக்குதலால் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது. தற்போது அந்த இராணுவம் பல முனைகளிலும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. லெபனானில் இருந்து எல்லை கடந்து வந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் தமது படையினர் கொல்லப்பட்டதாகவும் அந்தப் பகுதியில் இலக்குகள் மீது இஸ்ரேலிய ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் திங்கட்கிழமை குறிப்பிட்டது.

இந்தத் தாக்குதலுக்கு பலஸ்தீன ஜிஹாத் அமைப்பு பின்னர் பொறுப்பேற்றது.

மறுபுறம் இஸ்ரேலிய தாக்குதலில் தமது மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் ஆதரவு லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்த அமைப்பு ஏவுகணைகள் மற்றும் ஷெல் குண்டுகளை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் இரு இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டாவது தினமாகவே கடந்த திங்கட்கிழமை ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் தாக்குதலுக்கு ஆதரவு அளித்து ஹிஸ்புல்ல இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகளை வீசியது.

“இந்த மோதலில் ஹிஸ்புல்லா இரண்டாவது முனை ஒன்றை ஏற்படுத்தும் தவறான முடிவொன்றை எடுக்க வாய்ப்பு இருப்பது பற்றி நாம் அதிகம் கவலை அடைந்துள்ளோம்” என்று அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்கும் வகையில் அமெரிக்கா தனது மிகப்பெரிய விமானதாங்கிக் கப்பல் மற்றும் ஏனைய போர் கப்பல்களை இஸ்ரேலுக்கு நெருக்கமாக நகர்த்தியுள்ளது. எனினும் அமெரிக்கப் படைகளை அங்கு அனுப்ப திட்டமில்லை என்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேலின் முயற்சிக்கு உதவப் போவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

“பொறுக்கமுடியவில்லை”

காசாவை சுற்றி இஸ்ரேல் போட்டிருக்குக்கு எல்லை வேலி, கண்காணிப்பு கெமராக்கல், ஆளில்லா விமானங்கள், ரோந்து கண்காணிப்பு என அதிக பாதுகாப்புக் கொண்டதாக கருதப்பட்ட நிலையிலேயே ஹமாஸ் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியது.

ஹமாஸ் தாக்குதலை அடுத்து நெகேவ் பாலைவனத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற பகுதியில் பெரும்பாலும் இளைஞர்களை கொண்ட 270க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் பலர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

ஹமாஸ் தாக்குதல்தாரிகள் கூட்டத்தின் மீது ஆர்.பீ.ஜி. ஏவுகணைகளை வீசியதை கண்டதாக இஸ்ரேலிய வீரர் எப்ரையிம் மோர்டசேவ் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

மறுபுறம் காசா வான் தாக்குதல்களில் ஜபலியா அகதி முகாமில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. அங்குள்ள இடிபாடுகளுக்குள் இருந்து தீயில் கருகிய சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்த மோதல்களில் மூன்று பலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை தொடக்கம் இரு படப்பிடிப்பாளர்களும் காணாமல்போயிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் ஆட்சிக்கு வந்தது தொடக்கம் அந்தப் பகுதியை முடக்கியுள்ள இஸ்ரேல் இதற்கு முன்னர் நான்கு போர்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேலிய வான் தாக்குதல்களால் குடியிருப்பு கோபுரங்கள், மிகப் பெரிய பள்ளிவாசல் ஒன்று மற்றும் அந்தப் பகுதிக்கான பிரதான வங்கிக் கட்டடம் ஆகியன தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

காசாவில் பாடாசாலைகளில் 137,000க்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“நிலைமை பொறுக்க முடியாதுள்ளது” என்று வகுப்பறை ஒன்றில் பயத்தில் உள்ள தமது மாணவர்களுடன் இருக்கும் 37 வயதான அமல் அல் சர்சாவி தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையிலான மோதல்களில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் 17 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகளாவிய அதிர்ச்சி அலை

மத்திய கிழக்கில் மோதல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்திருப்பதோடு தங்கத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். இதன்போது இந்த மோதல் பிராந்தியத்தில் பரவுவதை தடுக்க பணியாற்றி வருவதாக முஹமது பின் சல்மான் கூறியதாக சவூதி அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

பலஸ்தீனர்களுக்கு வழங்கப்படும் அபிவிருத்தி உதவிகளை மீளாய்வு செய்யவிருப்பதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் உதவிகள் இன்னும் நிறுத்தப்படவில்லை என்று அது தெளிவுபடுத்தியது. பிரிட்டனும் இதேபோன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஹமாஸ் அமைப்பை ஒரு பயங்கரவாதக் குழுவாகவே கருதுகின்றன.

ஹமாஸின் எதிர்பாராத தாக்குதலின் தீவிரத்தை கருதும்போது எந்த ஒரு இராஜதந்திர முயற்சியும் தற்போதைய சூழலில் வெற்றி அளிக்கும் சாத்தியம் குறைவாக இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானும் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் அவசர தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து எர்தவான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோன்று ஹமாஸ் மீது விமர்சனத்தை வெளியிட்ட அவர், இரு தரப்பும் போரின் “ஒழுக்கங்களை” மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT