Thursday, April 25, 2024
Home » யுத்தத்தினால் சர்வதேசம் எதிர்கொள்ளும் நெருக்கடி!

யுத்தத்தினால் சர்வதேசம் எதிர்கொள்ளும் நெருக்கடி!

by Rizwan Segu Mohideen
October 11, 2023 6:07 am 0 comment

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சனியன்று ஹமாஸ் அமைப்பினர் தென் இஸ்ரேலுக்குள் ஊடுருவி மேற்கொண்ட திடீர்த் தாக்குதலைத் தொடர்ந்து இந்த யுத்தம் ஆரம்பமானது. இந்த யுத்தநிலையைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நிலைமை கொதிநிலையை அடைந்துள்ளது. இதன் விளைவாக உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடிகளும் தாக்கங்களும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே உக்ரைன்_- ரஷ்யா போர் வளர்முக மற்றும் மூன்றாம் மண்டல நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. அதேநேரம் முழு உலகிற்கும் பெரிதும் சவாலாக விளங்கிய கொவிட் 19 பெருந்தொற்றும் இந்நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிதும் பாதிப்புக்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழலில் உலக நாடுகளுக்கு எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது யுத்தம் மூண்டிருக்கின்றது. இந்த யுத்தம் ஏற்கனவே பொருளாதார ரீதியில் அழுத்தங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம்கொடுத்துள்ள வளர்முக மற்றும் மூன்றாம் மண்டல நாடுகளுக்கு மேலும் தாக்கங்களை ஏற்படுத்தவே வழிவகுக்கும். அதன் காரணத்தினால் இது தொடர்பில் உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.

குறிப்பாக எரிவாயு மற்றும் எரிபொருள் விலையில் கடுமையான தாக்கம் ஏற்பட இந்த யுத்தம் வழிவகுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான சூழலில் மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் உயரத் தொடங்கியுள்ளது. நேற்றுமுன்தினம் வெளியான தகவலின்படி மசகு எண்ணெய் விலையில் ஐந்து சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த யுத்தநிலை நீடிக்குமாயின் எரிபொருட்களின் விலைகளில் நீண்ட கால அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதையும் இப்பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அதனால் இலங்கையிலும் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. ஆனால் இம்மாதத்தின் முதலாம் திகதி இந்நாட்டில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டமை தெரிந்ததே.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்றுமுன்தினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நெருக்கடி நிலை உலகளாவிய எரிபொருள் விலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. அதனால் ஆபிரிக்க ஒன்றியத்தின் பரிந்துரையின்படி, இந்த மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரும் இக்கோரிக்கையை வரவேற்கக் கூடியவர்களாக உள்ளனர்.

உலக மக்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ள அனைத்துத் தரப்பினரதும் வேண்டுகோளும் இதுவாகவே உள்ளது. ஏனெனில் எந்தவொரு யுத்தமும் அழிவுகளையும் சேதங்களையும் இழப்புக்களையுமே கொண்டு வருமேயொழிய மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வரக்கூடிய ஒன்றல்ல. அதனால் இந்த யுத்தநிலையும் இலங்கை போன்ற வளர்முக மற்றும் மூன்றாம் மண்டல நாடுகளின் பொருளாதாரத்தில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தவே செய்யும்.

கொவிட் 19 பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யா போர் என்பன ஏற்கனவே வளர்முக மற்றும் மூன்றாம் மண்டல நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிதும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான தாக்கங்களுக்கும் பாதிப்புகளுக்கும் இலங்கையும் கூட முகம்கொடுத்தது. அந்தத் தாக்கங்களில் இருந்து எந்தவொரு நாடும் இன்னும் முழுமையாக மீட்சி பெற்றிடவில்லை. அதற்கிடையில் மற்றொரு யுத்தம் ஏற்பட்டிருப்பது உலகின் பலரதும் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. அதிலும் எரிபொருள், எரிவாயு உற்பத்தி பிராந்தியத்தில் இந்த யுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவற்றின் விலைகளில் நீண்ட கால அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இந்த யுத்தம் காரணமாக வளர்முக மற்றும் மூன்றாம் மண்டல நாடுகள் பொருளாதார ரீதியில் எதிர்கொள்ளக்கூடிய தாக்கங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு இம்மோதலை நிறுத்துவதைத் தவிர வேறுவழியில்லை.

அதேநேரம் உள்நாட்டு எரிபொருள் மற்றும் எரிவாயு பாவனையாளர்களும் உலகளாவிய நிலமைகளைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பயன்படுத்தவும் தவறக்கூடாது. இன்றைய காலகட்டத்தில் மிகுந்த பொறுப்போடு விரயமற்ற வகையில் பயன்படுத்த வேண்டியதே எரிபொருட்கள். அதன் ஊடாக உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டாலும் அதன் தாக்கங்கள் பாதிப்பாக அமையாத வகையில் பொருளாதார நிலைமைகளை பேணிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT