Saturday, April 20, 2024
Home » இரத்தினபுரி சீவலி கல்லூரி பாராளுமன்ற முதல் அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில்

இரத்தினபுரி சீவலி கல்லூரி பாராளுமன்ற முதல் அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில்

- சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டு பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையும் தெரிவு செய்யப்பட்டது

by Rizwan Segu Mohideen
October 10, 2023 5:28 pm 0 comment

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட வந்திருந்த வேளை ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததோடு அதற்கமைய ஜனாதிபதி அலுவலகத்தில் தமது முதலாவது அமர்வை அவர்கள் நடத்தினர்.

இக்கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 152 உறுப்பினர்கள் இதில் பங்கேற்றதுடன், அங்குரார்ப்பண அமர்வின் பின்னர் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டு பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை தெரிவுசெய்யப்பட்டது. அதன்பின் புதிய எம்.பி.க்கள் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் முதல் அமர்வு ஆரம்பமானது.

மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று மொழிகளிலும் தங்களின் எதிர்காலப் பணிகள் குறித்த யோசனைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். புதிதாக நியமிக்கப்பட்ட சபாநாயகர் மும்மொழிகளிலும் சபையை வழிநடத்தியது விசேட அம்சமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின் படி செயற்படும் மாணவர் பாராளுமன்றமானது சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ,மாணவர்களின் தேவைகள் தொடர்பிலான முன்மொழிவுகளை தயார் செய்து மாணவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரினார். அதற்கேற்ப மாணவர்களின் தேவைகள் குறித்து யோசனை பெற முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இது பாடசாலைக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அத்துடன், நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்கால தலைமைத்துவம் இந்த மாணவர் பாராளுமன்றங்களின் ஊடாகத் தான் உருவாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த செயற்பாடுகளுக்கு இந்த அனுபவங்கள் நல்ல உறுதுணையாக அமையும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் சகல பாடசாலைகளிலும் செயற்படும் மாணவர் பாராளுமன்றங்களை ஒன்றிணைத்து மாணவர் பாராளுமன்ற மன்றத்தை நடைமுறைப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இங்கு சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இலங்கை பாராளுமன்றத்தின் வகிபாகம் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி அதிபர் நீல் வத்துகரவத்த மற்றும் ஆசிரியர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT