Friday, March 29, 2024
Home » சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டப்படிப்பை ஏற்க அமைச்சரவை முடிவு

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டப்படிப்பை ஏற்க அமைச்சரவை முடிவு

- 53,965 விவசாயிகளுக்கு சிறுபோகப் பயிர்ச்செய்கை அழிவுக்கு இழப்பீடு

by Prashahini
October 10, 2023 2:47 pm 0 comment

– நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்குதல்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 12 முடிவுகள்

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டப்படிப்பை ஏற்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இது தவிர நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள் உள்ளடங்கிய தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்காகவும், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காகவும் பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக 2023.05.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகள் உள்ளடங்கலான அறிக்கையின் அடிப்படையில், சர்வதேச தரப்படுத்தலுக்கமைய இலக்கம் 01 தொடக்கம் 1000 வரையான பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டங்களை எமது நாட்டில் அங்கீகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை விதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. அங்கொடை, மண்டாவில, லேக் க்ரெஸ்ட் றெசிடன்சீஸ் வீட்டுத்திட்டத்தின் வீட்டு அலகுகளை அறுதி உறுதி அடிப்படையில் விற்பனை செய்தல்

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட 500 வீட்டு அலகுகளுடன் கூடிய அங்கொடை, மண்டாவில, லேக் க்ரெஸ்ட் றெசிடன்சீஸ் வீட்டுத்திட்ட வீடுகளின் இருப்பாட்சி 2018 ஆம் ஆண்டில் வீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த வீடுகளுக்கான அனைத்துக் கட்டணங்களும் செலுத்திப் பூர்த்தியடைந்துள்ள குடியிருப்பாளர்களுக்கு கூட்டாட்சி ஆதன உரித்து சட்டத்திற்கமைய அறுதி உறுதிகளை வழங்குவதற்கும், ஏனைய குடியிருப்பாளர்களுக்கு ஏற்புடைய கட்டணங்கள் முழுமையாகச் செலுத்திய பின்னர் அறுதி உறுதியை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. நாராஹேன்பிட்டி, ஹத்போதியவத்த எனும் காணியில் குறைந்த வசதிகளைக் கொண்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கி குறித்த காணியை அபிவிருத்தி செய்தல்

நாராஹேன்பிட்டி கிருல கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள ஹத்போதியாவத்த எனும் பெயரிலான 01 ஏக்கர் 03 றூட் 10 பேர்ச்சர்ஸ் அரசுக்கு சொந்தமான காணித்துண்டில் குறைந்த வருமானங் கொண்டவர்களின் குடியிருப்பொன்று காணப்படுவதுடன், குறித்த குடியிருப்பில் வசிக்கின்ற குடும்பங்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் நகர மறுமலர்ச்சிக் கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த காணியிலுள்ள குடியிருப்பாளர்களை நகர மறுமலர்ச்சிக் கருத்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் வீடுகளை வழங்குவதற்கும், பின்னர், குறித்த காணியில் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் 6(1) பிரிவின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குப் பெற்றுக்கொள்வதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. 2023 சிறுபோகப் பயிர்ச்செய்கை அழிவுகளுக்கான இழப்பீடு செலுத்தல்

நிலவிய சீரற்ற காலநிலையால் போதுமானளவு நீர் வழங்கலுக்கு இயலாமல் போனமையால், 2023 சிறுபோகத்தில் 58,770 ஏக்கர்கள் நெற்செய்கை மற்றும் வேறு பயிர்ச்செய்கைகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், 53,965 விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு செலுத்துவதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, அரசு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிகள் மத்தியிலும் தற்போது நடைமுறையிலுள்ள விவசாயக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடுகளைச் செலுத்துவதற்குத் தேவையான நிதியொதுக்கி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

5. பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், இலங்கை பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் தோட்டக் காணிகளில் சுற்று அளவைகள் மேற்கொள்ளப்பட்டு எல்லைகளைத் தயாரித்துக் கொள்ளல்

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், இலங்கை பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் தோட்டக் காணிகளில் சுற்று அளவைகள் மேற்கொள்ளப்பட்டு எல்லைகளைத் தயாரித்துக் கொள்வதற்கான கருத்திட்டம் 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது குறித்த காணிகளில் குறிப்பிடத்தக்களவு பூர்த்தியாகும் வகையில் அளவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் அளவைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள காணிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கருத்திட்டத்தை 2027 ஆம் ஆண்டு வரைக்கும் நீடிப்பதற்காக பெருந்தோட்டத் துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வான் வழிசெலுத்தல் வசதிக் கட்டணங்கள் ஒழுங்குவிதிகள்

கொழும்பு விமானத் தகவல் பிராந்தியத்தினூடாக பறக்கும் விமானங்களுக்கு வான் வழிச் செலுத்தல் வசதிக் கட்டணங்களை விதிப்பதற்கு இயலுமாகும் வகையில் 1981 ஆம் ஆண்டில் வான் வழிச் செலுத்தல் வசதிக் கட்டணங்களுக்கான ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகள் கடந்த காலப்பகுதியில் திருத்தம் செய்யப்படவில்லை.

அதனால், சர்வதேச சிவில் விமான அமைப்பின் கொள்கைள் மற்றும் சமகால உலகளாவிய போக்குகளைக் கருத்தில் கொண்டு வான் வழிசெலுத்தல் வசதிகள் ஒழுங்குவிதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த புதிய ஒழுங்குவிதிகள் 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வான் வழிசெலுத்தல் வசதிக் கட்டணங்கள் ஒழுங்குவிதிகளாக 2319/64 ஆம் இலக்க மற்றும் 2023.02.16 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக துறைமுக, கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. தேசிய காணி ஆணைக்குழுச் சட்டத்தைத் தயாரித்தல்

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையின் 1 ஆம் பட்டியலில் II ஆம் வாசகத்திற்கமைய காணி ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படைச் சட்டமூலத்தின் அடிப்படையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல்

2016 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை இரத்துச் செய்து நுண் நிதியளிப்பு மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தை வலுவாக்கம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2021.03.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. “பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்” எனும் பெயரிலான சட்டமூலம்

2009 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் சட்டத்தை இரத்துச் செய்து பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் பதிவு அதிகாரசபையைத் தாபிப்பதற்கான ஏற்பாடுகளை விதித்து புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும், அதற்கு இணையாக கீழ்க்காணும் சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் 2019.05.28 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 காலவிதிப்பு (திருத்தச்) சட்டமூலம்
 நம்பிக்கைப் பொறுப்புப் பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம்
 அடகு (திருத்தச்) சட்டமூலம்
 குத்தகை நிதி (திருத்தச்) சட்டமூலம்
 உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்புப் பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம்
 கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம்
 ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம்

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பாக மேலும் அந்தந்த அதிகாரிகளுடன் கவனத்திலெடுக்குமாறு 2021.05.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் சட்டவரைஞரால் காலத்தோடு தழுவியதாக இற்றைப்படுத்தி, அதற்காக சட்டமா அதிபரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தேசிய நீரியல் சட்டமூலம்

இலங்கையை தெற்காசிய வலயத்தில் சமுத்திர கேந்திர நிலைமாக மேம்படுத்தும் நோக்கில் சமுத்திர நீரியல் துறையை விருத்தி செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2023.05.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலம் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அவர்களும் நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் சீனக் குடியரசின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சீனக் குடியரசின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கும் இடையிலான உற்பத்தி இயலளவு மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. இலங்கை அவுஸ்திரேலியா வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக ஒப்பந்தக் காலத்தை நீடித்தல்

அவுஸ்திரேலியா இலங்கையின் முக்கியமான நேரடி வெளிநாட்டு முதலீட்டுத் தரப்பாக இருப்பதுடன், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகைதரும் 05 ஆவது நாடாகவும் உள்ளது. இருநாடுகளுக்கிடையில் இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் 2017.11.02 அன்று இலங்கை அவுஸ்திரேலியா வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கு இயலுமாகும் வகையில் 2023.10.10 தொடக்கம் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்காக குறித்த ஒப்பந்தத்தை நீடிப்பதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT