மாகாண சபை உறுப்பினர் மேசை மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கை

 
வடமேல் மாகாண சபையில் கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை கொண்டு வந்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் தனது மேசையின் மீது ஏறி நின்று இவ்வாறு எதிர்ப்பைத் தெரிவித்தார். 
 
இன்று (20) வடமேல் மாகாண சபையின் கூட்டம் காலை 9.30 மணிக்கு சபைத் தலைவர் டிக்கரி பண்டார தலைமையில் கூடியது.
 
இதன்போது, வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை உப்புச் செய்கை, இறால் வளர்ப்பு போன்ற பல்வேறு தேவைகளுக்காக புத்தளம் மாவட்ட மக்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள போதிலும் அவர்களுக்கு காணிகளை வழங்காது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தனவந்தர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் காணிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
 
இதனை அடுத்து, தனது மேசை மீது ஏறி நின்று இதற்கு உரிய தீர்வை வழங்கும் வரை கீழே இறங்கப் போவதில்லை என சபையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
 
புத்தளம் மாவட்டத்தில் அதிகமான அரச காணிகள் உள்ள நிலையில் அவற்றை உப்புச் செய்கை, இறல் வளர்ப்பு மற்றும் வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கு என  பல்வேறு தேவைகளுக்காக புத்தளம் மாவட்ட மக்கள் அரசாங்கத்திடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 
 
எனினும் அந்த உள்ளுர் மக்களின் கோரிக்கைகள் வருடக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் திடீரென வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தனவந்தர்களுக்கு, புத்தளம் மாவட்டத்தின் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது இந்த மக்களுக்கு செய்யும் அநீதியாகும்.  
 
இந்த மாகாண சபையின் காணி அமைச்சர் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புத்தளம் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலாளர்களும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் போது இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.  
 
எனவே இந்த மாகாண சபை இந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வந்தர்களுக்கு புத்தளம் மாவட்டத்தில் உள்ள காணிகளை வழங்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 
 
இதன் பின்னர் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தசநாயக்கா மற்றும் காணி அமைச்சர் சுமல் திசேரா ஆகியோர் தாம் இவ்விடயம் தொடர்பில் உடன் ஆராய்ந்து பார்த்து அவ்வாறு வெளியாருக்கு காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அவ்வாறான நடவடிக்கைகள் தமக்கும் தெரியாமலேயே இடம்பெற்றிருப்பதால் இனி அவ்வாறு இடம்பெற அனுமதிக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்ததையடுத்து மாகாண சபை உறுப்பினர் மேசையிலிருந்து இறங்கியதாகத் தெரிவித்தார்.  
 
இதற்கு உரிய தீர்வு கிடைக்காது போனால் மக்களை இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி இந்த செயற்பாட்டிற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடாத்தப் போவதாகவும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் இது தொடர்பில் கேட்ட போது கூறினார். 
 
(புத்தளம் விஷேட நிருபர் - எம். எஸ். முஸப்பிர்)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...