Thursday, April 25, 2024
Home » ஹமாஸின் தாக்குதலை அடுத்து காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து சரமாரி வான் தாக்குதல்

ஹமாஸின் தாக்குதலை அடுத்து காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து சரமாரி வான் தாக்குதல்

by damith
October 9, 2023 8:28 am 0 comment

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய நகரங்களுக்கு ஊடுருவி நூற்றுக்கணக்கானோரை கொன்று மேலும் பலரை கடத்திச் சென்று கடந்த பல தசாப்தங்களில் இல்லாத பாரிய தாக்குதலை நடத்திய நிலையில் இஸ்ரேலிய படையினர் காசா பகுதி மீது சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது மத்திய கிழக்கில் பெரும் போர் ஒன்றுக்கு வழிவகுத்துள்ளது. இந்த மோதல் காசாவை தாண்டி விரிவடையும் சமிக்ஞையாக லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பரஸ்பரம் பீரங்கி மற்றும் ரொக்கெட் குண்டு தாக்குதல் இடம்பெற்றிருக்கும் அதேநேரம் எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் இருவருடன் அவர்களின் எகிப்தைச் சேர்ந்த பாதுகாவலர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (07) இரவில் காசாவில் உள்ள வீட்டுத் தொகுதிகள், சுரங்கப்பாதைகள், பள்ளிவாசல் ஒன்று மற்றும் ஹமாஸ் அதிகாரிகளின் வீடுகள் மீது இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதல்களை நடத்தியது. இதனால் 20 சிறுவர்கள் உட்பட 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பயங்கர தினத்திற்காக தீவிரமாக பழிவாங்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். மறுபுறம் இந்த எதிர்பாராத தாக்குதலுக்கு பின்தெற்கு இஸ்ரேலில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேலிய படையினர் மற்றும் ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். சரமாரி ரொக்கெட் தாக்குதல் ஒன்றை அடுத்தே சனிக்கிழமை காசா எல்லையை ஒட்டிய இஸ்ரேலிய நகரங்களுக்குள் ஹமாஸ் போராளிகள் எல்லை வேலிகளை உடைத்து ஊடுரவி உள்ளனர்.

இந்தத் தாக்குதலை தடுக்கத் தவறியது தொடர்பில் பெரும் கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கும் இஸ்ரேலிய படையினர் தமது நிலப்பகுதியின் பல பகுதிகளையும் மீட்டதாகவும் நூற்றுக்கணக்கான தாக்குதல்தாரிகளை கொன்று மேலும் பல டஜன் பேரை சிறைப்பிடித்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் சில இடங்களில் நேற்று மாலை வரை மோதல் நீடித்து வந்தது.

காசாவை சூழவுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான படையினரை குவித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல், 2.3 மில்லியன் பலஸ்தீனர்கள் வாழும் அந்த குறுகிய நிலப்பகுதிக்கு அருகில் வசிக்கும் இஸ்ரேலியர்களை அப்புறப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது காசா மீது தரைவழி தாக்குதல் ஒன்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தீவிரமாக ஹமாஸை தாக்கப்போகிறோம். அது நீண்டதாக இருக்கும் என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் தமது மக்களின் பாதுகாப்புக்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் பேச்சாளர் அப்தல் லதிப் கனுவா தெரிவித்துள்ளார். தமது அமைப்பு தொடர்ந்து ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் எல்லை கடந்து தொடந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

50 ஆண்டுகளுக்கு முன் தாம் இழந்த நிலத்தை மீட்பதற்காக எகிப்து மற்றும் சிரியா யோம் கிப்புர் போரை இஸ்ரேல் மீது தொடுத்ததன் பின்னர் இஸ்ரேல் மீதான மிகப்பெரிய ஊடுருவலாக இது பதிவாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் அமெரிக்க ஆதரவு முயற்சி வெற்றி அளித்து வரும் சூழலிலேயே அதனை பதிப்பிழக்கச் செய்யும் வகையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த இராஜதந்திர முயற்சி ஹமாஸின் பிரதான ஆதரவாளர்களின் ஒன்றான ஈரானுக்கு மற்றும் பலஸ்தீன சுயநிர்ணய உரிமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருந்தது. மற்றொரு பிராந்திய சக்தியான ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா பதற்றத்தை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற நிலையில், இதற்குள் ஹிஸ்புல்லா வரக் கூடாது என்றும் அவர்கள் அதனைச் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை என்றும் இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை தாக்குதல்

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களின் சேதங்களை இஸ்ரேலிய தெற்கு நகரங்கள் மற்றும் எல்லை பகுதிகளில் நேற்று காலையில் காண முடிவதாக இருந்தது. புறநகர் பகுதி வீதிகள், கார்கள் மற்றும் வீடுகளில் சிதறிக் கிடந்த சடலங்களை பார்க்க முடிவதாக இருந்தது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் 400க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதில் மூத்த இராணுவ அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர். இதனால் அச்சமடைந்த இஸ்ரேலியர்கள் பாதுகாப்பு அறைகளுக்குள் அடைக்கலம் பெற்றிருப்பதோடு தமது அவலநிலை பற்றி தொலைபேசி மற்றும் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் விபரித்துள்ளனர். தாக்குதல் நடத்திய போராளிகள் பலரையும் பணயக் கைதிகளாக பிடித்துக் கொண்டு காசாவுக்கு திரும்பியுள்ளனர். இதில் இஸ்ரேலிய இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் அடங்குகின்றனர். பிடித்து வந்தோரின் எண்ணிக்கை பற்றி பின்னர் அறிவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. தாக்குதலின்போது இலக்கு வைக்கப்பட்ட நடன விழாவில் பங்கேற்ற சுமார் 30 பேர் காணாமல்போன நிலையில் மறைந்திருந்த அவர்கள் நேற்று வெளியே வந்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையான இஸ்ரேலியர்கள் இரத்தம் சிந்தும் நிலையில் பாதுகாப்புச் சோதனைச் சாவடி வழியாக காசாவை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டதோடு மேலும் சிலர் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் இஸ்ரேல் மீது நேற்று சரமாரியாக ரொக்கெட் குண்டுகளை வீசிய நிலையில் தெற்கு இஸ்ரேலில் சைரன் ஒலி தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தது. எல்லைப் பகுதிகளில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு தாக்குதல்தாரிகளை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. காசாவில் ஹமாஸ் மற்றும் மற்றொரு போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் இராணுவ மற்றும் அரச திறன்களை அழிப்பதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்திருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.காசாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு எரிபொருள் விநியோகம் மற்றும் காசாவுக்கு பொருட்கள் செல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.

காசாவில் அழிவு

ஹமாஸின் தாக்குதல் இடம்பெற்ற விரைவிலேயே காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. நேற்று ஹமாஸ் அமைப்பின் அலுவலகங்கள், பயிற்சி முகாம்களுடன் வீடுகள் மற்றும் ஏனைய கட்டடங்களும் தாக்கப்பட்டன. சில பகுதிகளில் நீர் விநியோகத்தை இஸ்ரேல் துண்டித்ததாக ஹமாஸ் தெரிவித்தது.

இஸ்ரேலிய பதில் தாக்குதல்களில் காசாவில் இதுவரை 313 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு சுமார் 2000 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கறுப்புப் புகை, செம்மஞ்சள் நெருப்பு காசா வானை சூழ்ந்திருப்பதோடு வானுக்கு மேலால் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் சுற்றித் திரிவதை காண முடிகிறது. முந்தைய தாக்குதல்களில் இஸ்ரேலிய இராணுவம் காசா குடியிருப்பாளர்களுக்கு வழங்கிய முன்னெச்சரிக்கை இம்முறை தாக்குதல்களில் வழங்கப்பட்டிருக்கவில்லை.

தென் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்ட நிலையில் நேற்று காலை இடுபடிடுகளில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இரவுத் தொழுகைக்குப் பின் திடீரென்று பள்ளிவாசல் மீது குண்டு வீசப்பட்டது. சிறுவர்கள் மற்றும் முதியவர்கள பயத்தில் உறந்தனர்  என்று அங்குள்ள குடியிருப்பாளர் ஒருவரான ரமிஸ் ஹனிக்டெக் தெரிவித்தார்.

நாம் உங்களை எச்சரிக்கிறோம்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் அண்மைக் காலத்தில் வன்முறை அதிகரித்திருந்த சூழலிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பலஸ்தீன அதிகாரசபை மற்றும் ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் ஆட்சிக்கு வந்த தென்யாகுவின் தீவிர வலதுசாரி அரசு பஸ்தீனர்கள் மீது தொடர்ச்சியான சுற்றிவளைப்பு தெடுதல்களை நடத்தி வந்ததோடு இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்களும் அதிகரித்திருந்தன.

இந்நிலையில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் இந்தத் தாக்குதலை கண்டித்திருப்பதோடு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஈரான் மற்றும் ஏனைய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கு விரோதமான எந்தத் தரப்பும் இந்தத் தாக்குதலை பயன்படுத்திக்கொள்ள இது தருணமல்ல என்று அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கில் ஹமாஸின் தாக்குதலுக்கு ஆதரவு அளித்து பேரணிகள் இடம்பெற்றதோடு ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாத இந்தத் தாக்குதலை வரவேற்றுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT