Friday, March 29, 2024
Home » நபி (ஸல்) அவர்களுடைய பெருமையை உலகம் இறுதிவரை பேசிக்கொண்டேயிருக்கும்

நபி (ஸல்) அவர்களுடைய பெருமையை உலகம் இறுதிவரை பேசிக்கொண்டேயிருக்கும்

பொத்துவில் மீலாத் விழாவில் முஷாரப் எம்.பி

by damith
October 9, 2023 10:02 am 0 comment

நபி (ஸல்) அவர்களுடைய பெருமையை உலகம் பேசிக்கொண்டே இருக்கின்ற இக்கால கட்டத்தில், மீலாத் விழாக்கள் நடந்தாலும், நடக்காவிட்டாலும் அவரது பெருமையை முழு உலகும் இறுதி நாள் வரை பேசிக்கொண்டே இருக்குமென்பதில் சந்தேகமில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற மீலாத் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், உலகில் அதிகமானோர் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டதற்கு முதன்மையான காரணம் நபி (ஸல்) அவர்களின் நன்னடத்தையும், சிறப்பான நற்குணமும்தான். அதற்குப் பின்னர்தான் பல காரணங்களைச் சொல்ல முடியும்.

எனவே, உலகம் முழுவதும் மாற்று மதங்கள் சார்ந்தவர்கள் பலரும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டதற்கு முதன்மை காரணம் நபியவர்களின் நற்குண இயல்புகள்.

நபிகளாரை பற்றி மாவீரன் நெப்போலியன் சொல்கின்றபோது, திருக்குர்ஆனுக்கும், தூதர் நபி (ஸல்) அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகின்றேன். அல்குர்ஆனின் கொள்கைக்கிணங்க ஒரே விதமான ஆட்சியை உலகம் எங்கும் நிறுவக்கூடிய காலம் வெகு தூரத்தில் இல்லை என்று அவர் தெரிவித்தார். அதேபோல், அறிஞர் பேர்னாட்சா தெரிவிக்கையில், முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றி அவரது கொள்கைகளை நான் ஆதரிக்கின்றேன். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றக்கொண்டுவிடும் என்று பேர்னாட்சா சொன்னார்.

எமது அயல் நாடான இந்திய தேசத்தின் ஜவஹர்லால் நேரு ஒரு முறை கூறுகின்றபோது, முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம் அவர்கள் கொண்டிருந்த உறுதியும், ஊக்கமும்தான். இத்தகைய உறுதி அத்தகைய சூழலில் ஏற்படுவது எழிதன்று. இரண்டாவது காரணம் இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் என்றார்.

இந்திய தேசத்திலிருந்து சமத்துவம், சகோதரத்துவத்தையும் போதித்தமைக்காக நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹி வஸல்லாம் அவர்களை உயர்வாகப் பார்க்கின்றேன் என்றார்.

ஒரு சீப்பின் பல்வரிசை போல மனிதர்கள் அனைவரும் சமத்துவமானவர்கள் என்று நபி அவர்கள் சொன்னார்கள். இந்த மார்க்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹி வஸல்லாம் அவர்கள் போதித்த சமத்துவம்,சகோதரத்துவம் தவிர வேறு எதையும் சொல்ல முடியாது என்றார்.

(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT