Thursday, March 28, 2024
Home » அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் இன,மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும்

அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் இன,மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும்

– மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
October 8, 2023 9:42 am 0 comment

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதென சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் நேற்று (07) கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்லூரிக்கு வருகைத் தந்த ஜனாதிபதி மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

அதனையடுத்து பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் தமிழ், சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தேசிய கீதத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று கூறப்படுவதால் அதனை சிங்களத்தில் இசைத்தாலும் தமிழில் இசைத்தாலும் பிரச்சினைகள் இல்லை எனவும், அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவைச் சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதென என்றும் சுட்டிக்காட்டினார்.

60களில் நாங்கள் பாடசாலையில் படிக்கும் போது ஒரு பழமொழி சொல்வார்கள். கடவுளுக்கு மகிமை, புனித மைக்கலுக்கு அதிசயம், ஏனென்றால் அன்று உங்கள் பாடசாலை தொடர்ந்து கூடைப்பந்து போட்டிகளில் வென்றது. புனித மைக்கல் அணிக்கு எதிரான கூடைப்பந்து ஆட்டத்தில் வெற்றி பெறுவது கடினமாக இருந்தது. இருந்தும் நாங்கள் அன்று கூடைப்பந்து விளையாட மட்டக்களப்புக்கு வந்தோம். வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை. போட்டி முடிந்ததும் எலரசிங்கத்தின் தென்னந்தோப்புக்கு சென்று குளிப்பதே எமது நோக்கம். இன்று அந்த இடத்தில் பாசிக்குடா சுற்றுலாத் தலமும் அமைந்துள்ளது. அதனால் புனித மைக்கல் கல்லூரி அன்று அவ்வாறு தான் அழைக்கப்பட்டது.

முதலில் இந்த புனித மைக்கல் கல்லூரி இன்று ஒரு தேசிய பாடசாலை. இங்குள்ள கேட்போர் கூடத்தை பழுதுபார்ப்பதற்கு ஆகும் செலவை தெரிவிக்குமாறு அதிபரிடம் கேட்டேன். அதற்கான ஒதுக்கீடுகளை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.

பாடசாலையை விஸ்தரிப்பதற்கு காணி அவசியம் என என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித மைக்கல் கல்லூரிக்கு மட்டுமன்றி ஏனைய பாடசாலைகளுக்கும் எதிர்காலத்தில் தேவையான காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஆளுநரும், இராஜாங்க அமைச்சர்களும் இணைந்து ஆராய்ந்த பின்னர் எனக்கு முன்மொழிவொன்றை வழங்குமாறு கோரியுள்ளேன்.

இது இயேசு சபையினால் நிறுவப்பட்ட பாடசாலை. உங்களின் மிகப் பிரபலமான முன்னாள் மாணவர் சுவாமி விபுலானந்தன்.

திருகோணமலை கிழக்கு மாகாணத்தின் தலைநகராக இருக்கிறது. ஆனால் கிழக்கு மாகாணத்தின் கல்வி மையம், மட்டக்களப்பு ஆகும். அதன்படி, அறிவுசார் மூலதனம் இங்குதான் உள்ளது. எனவே நீங்கள் அனைவரும் அதன் ஊடாக நாட்டுக்கு சேவை செய்திருக்கிறீர்கள்.

எனது பாடசாலைப் பருவத்திற்குப் பிறகு, இந்தப் பகுதிக்கு நான் கல்வி அமைச்சராகத் தான் வருகை வந்தேன். மற்றும் புனித மைக்கல் கல்லூரி தொடர்பில் நிறைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இப்பாடசாலையை மேம்படுத்த சில நடவடிக்கைகளை எடுக்க எம்மால் முடிந்தது.

யுத்தம் காரணமாக உங்களுக்கு விரும்பத்தகாத அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு இதேபோன்ற ஒரு கடினமான சூழ்நிலையை நாங்கள் எதிர்கொண்டோம். எவ்வாறாயினும், இப்போது ஒரு நாடாக நாம் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். அங்கு, இந்த புனித மைக்கல் கல்லூரிக்கு வழிகாட்டுதலை வழங்க முடியும்.

அபிவிருத்திக்கு முன் இப்பிரதேச மக்களிடையே ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். இந்தப் பாடசாலை இயேசு சபை துறிவிகளினால் தொடங்கப்பட்ட போதும் இங்கு படித்தவர்களில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களும் உள்ளனர்.உதாரணமாக, எனக்கு நன்றாகத் தெரிந்த பிரிகேடியர் பல்தாசர் இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர். அவர் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்ற அதிகாரி. மேலும், புலிகள் இயக்க செயற்பாடுகளில் கலந்து கொண்ட மாணவர்களும் இருந்தனர்.எனவே இப்பாடசாலை சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களும் இருந்தனர்.

இப்போது நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னேற வேண்டும். இங்கு அனைத்து விதமான இசை பாணியையும் இங்கு கேட்டேன். கடவுளுக்கான பிரார்த்தனைக் குரல்கள், இந்து வாழ்த்துச் செய்திகள், சிங்கள ஜெயமங்கல பாடல்கள் அனைத்தும் இங்கு கேட்டன. மேலும் இங்கு கண்டுகளித்த பரத நாட்டியமானது சில மகளிர் பாடசாலைகளில் பார்ப்பதை விட சிறப்பாக இருந்தது.

வரலாற்றில் சில இடைவெளிகள் இருந்தன. நாங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டோம். அது இந்த நாட்டை படுகுழியில் தள்ளவே காரணமாக அமைந்தது. அரசியல் ரீதியாகவும் போராடினோம். அதிலிருந்து மேலும் கீழே விழுந்தோம். நாட்டின் மிக மோசமான வீழ்ச்சியை நாம் அனுபவித்துள்ளோம். யுத்த காலத்தில் கூட இவ்வாறு நடக்கவில்லை.

நான் இந்த நாட்டைக் பொறுப்பேற்ற போது நாட்டில் எரிவாயு இல்லை. பெற்றோல் இல்லை, எங்களுக்கு உணவு இல்லை. அத்தோடு கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.
இன, மத வேறுபாடின்றி நாம் அனைவருக்கும் இதனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோம்.

இப்போது அதிலிருந்து விடுபட வேண்டும். அரசாங்கம் திட்டங்களை வகுக்கலாம். எமது கடனை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வருகின்றோம்.

ஒரு நாடு என்ற வகையில் நாம் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப பொருளாதார ரீதியாக நாட்டை பலப்படுத்த முடியும். இனப்பிரச்சினைக்காகவும் மதப்பிரச்சினைகளுக்காகவும் சண்டையிட்டு நாட்டை அதள பாதாளத்தில் தள்ளிய காலம் நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட காலத்திற்கு நாம் திரும்பிச் செல்லக்கூடாது.

இன ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ உங்கள் அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன. மேலும் விவசாயிகள், மீனவர்கள் என ஒவ்வொரு சமூகத்துக்கும் பிரச்சினைகள் உள்ளன. இவற்றைத் தீர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும்.

புனித மைக்கல் கல்லூரி மாணவர்கள் நமோ நமோ மாதா என்று தமிழில் பாடிய போது மிகத் தெளிவாகத் தெரிந்தது.இரண்டும் ஒன்றுதான். நாம் அனைவரும் ஒரு தாயின் குழந்தைகள் என்று சொல்கிறோம். நீங்கள் அதை சிங்களத்தில் பாடினாலும் அல்லது தமிழில் பாடினாலும் பிரச்சினையில்லை.

பல்கலைக்கழகத்திற்குச் செல்லும்போது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களை, வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களை சந்திக்கிறோம்.இந்தப் பகுதிகளிலும் பல்வேறுபட்டவர்களைச் சந்திக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றாக எப்படி முன்னேற முடியும்? எனவே இந்த இனப்பிரச்சினை, மதப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அனைத்து தலைவர்களுடனும் கலந்துரையாடி வருகின்றேன். இனப்பிரச்சினை, மதப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

இரண்டாவதாக, மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன் என்பதைச் சொல்ல வேண்டும். பொலீஸ் அதிகாரம் என்ற பேச்சை ஒருபுறம் வைக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் பின்னர் செய்யலாம். ஆனால் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

முதலில் அரசியல் பிரச்சினைகளை பேசி தீர்க்க வேண்டும். இரண்டாவதாக, அதிகாரப்பகிர்வு தொடர்பில் படிப்படியாக நடவடிக்கை எடுத்து முன்னோக்கிச் செல்வது அவசியம் . இது வேகமாகச் செல்லக் கூடிய பயணம் அல்ல. மனித உரிமை மீறல் நடந்தால், அதை நாட்டிற்குள் அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுப்போம். அதற்காக சர்வதேசத்திற்கு செல்ல வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. இதற்கு நாட்டிலேயே தீர்வு காண வேண்டும். இங்கு அனைத்து தரநிலைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன என்ற உறுதியளித்து தொடர்ந்து முன்னேற வேண்டும்.

எனவே இவ்விடயங்களில் புனித மைக்கல் கல்லூரியை உதாரணமாகக் கொள்ளலாம். புனித மைக்கல் கல்லூரியின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ். வியாளேந்திரன்,சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் அதிபர் , என்டன் பெனடிக் மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT