மலையக கல்வித் துறையில் நிலவும் முக்கிய பின்னடைவு | தினகரன்

மலையக கல்வித் துறையில் நிலவும் முக்கிய பின்னடைவு

மலையகத்தில் உள்ள பெருந்தோட்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள தமிழ்ப் பாடசாலைகளில் விஞ்ஞான, கணித பாடங்களுக்குரிய ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அங்கு நிலவுகின்ற கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைக்கு இரண்டு காரணங்களை இங்கே கூற முடியும்.

முதற் காரணம் மலையகப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் கணித, விஞ்ஞான பட்டதாரிகளாக உருவாகுவது மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பட்டதாரிகளில் கணித விஞ்ஞான துறையைச் சேர்ந்தோர் சொற்பமாகவே உள்ளனர்.

அங்குள்ள மாணவர்கள் க. பொ. த. சாதாரண தரப் பரீ்ட்சையில் சித்தியடைந்த பின்னர் உயர்தர வகுப்பை நாடும் போது ஒருவித குழப்ப நிலைமைக்கு உள்ளாகின்றனர்.

க. பொ. த. உயர்தரத்தில் கணித பிரிவையோ அல்லது உயிரியல் பிரிவையோ தெரிவு செய்வதற்கு அவர்கள் தயங்க வேண்டியுள்ளது. மலையகத் தமிழ்ப் பாடசாலைகளில் க. பொ. த. உயர்தர வகுப்புகளுக்கு கணித, விஞ்ஞான பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே கணித, விஞ்ஞான பிரிவுகளில் கற்பதனால் உரிய ஆசிரியர்களின்றி தங்களது கல்வி பாதிக்கப்படுமென்ற அச்சம் அவர்களுக்கு உண்டு. ஆகவே கணித, விஞ்ஞான துறைகளில் திறமையைக் காண்பிக்க வேண்டிய மாணவர்கள் அங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக வேறு வழியின்றி க. பொ. த. உயர்தர கலைப் பிரிவை நாட வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.

மலையகத்தில் காணப்படுகின்ற பட்டதாரிகளில் அநேகர் கலைப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பதற்கு இதுவே காரணமாகின்றது. கணித, விஞ்ஞானப் பட்டதாரிகளின் எண்ணிக்கையானது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் குறைவாகவே காணப்படுகின்றது.

க. பொ. த. உயர்தரப் பிரிவில் மாத்திரமன்றி சாதாரண தர வகுப்பில் கற்கின்ற மாணவர்களும் இதேவிதமான சிக்கலுக்கே முகம் கொடுக்க வேண்டியுள்ளது. க. பொ. த. சாதாரண தர வகுப்புகளில் கணிதம், விஞ்ஞானம் கற்பிப்பதற்கும் மலையகப் பாடசாலைகளில் போதுமான ஆசிரியர்கள் கிடையாது. எனவே க. பொ. த. சாதாரண தரத்தைக் கடப்பதற்கிடையிலேயே அம்மாணவர்களின் கணித, விஞ்ஞான அறிவு மழுங்கடிக்கப்படும் பரிதாப நிலைமை அங்கு காணப்படுகின்றது.

இவை தவிர, ஏனைய மாவட்டங்களில் இருந்து மலையகப் பாடசாலைகளுக்கு நியமனம் பெறுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. அவர்களில் கணித, விஞ்ஞான பாட ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. மலையகத்தில் நிலவுகின்ற விஞ்ஞான, கணித பாட ஆசிரியர் பற்றாக்குறைக்கான இரண்டாவது காரணமாக இதனைக் கூறலாம்.

அரசாங்க ஊழியர்களில் பெரும்பாலானோர் தங்களது மாவட்டத்தினுள் கடமையாற்றுவதற்கே விரும்புகின்றனர். தாங்கள் கடமை புரிகின்ற இடம் மிகவும் அருகாமையில் இருப்பதை அவர்கள் விரும்புகின்றனர். ஆசிரியர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனவே மலையகம் போன்ற தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுச் செல்வதை ஆசிரியர்கள் பெருமளவு தவிர்ப்பதையே காண முடிகின்றது.

மலையகத்தில் இவ்வாறான சிக்கலொன்று நீண்ட காலமாக நிலவி வருகின்ற போதிலும், அங்குள்ள அரசியல்வாதிகள் இதுபற்றி அக்கறை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மலையகத்தில் பலம் வாய்ந்த தொழிற்சங்கமாக முன்னர் விளங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த கால அரசாங்கங்களில் பிரதான பங்காளிக் கட்சியாக விளங்கிய போதிலும், தோட்டப் பிரதேச தமிழ் மாணவர்களின் கல்வியில் உரிய அக்கறை செலுத்தவில்லையென்றுதான் கூற வேண்டும்.

அன்றைய காலத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைப் பிரயோகித்து வடக்கு, கிழக்கில் இருந்து தேவையான ஆசிரியர்களை பத்து வருட கட்டாய சேவையின் அடிப்படையிலாவது மலையகப் பாடசாலைகளுக்கு நியமித்திருக்க முடியும். ஆனால் இ. தொ. கா. மாத்திரமன்றி எந்தவொரு மலையக தொழிற்சங்கமும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தியதில்லை. இவ்வாறான நீண்ட கால அலட்சியம் காரணமாகவே மலையக தமிழ்ப் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையானது தற்போது மிக மோசமாகிப் போயுள்ளது.

மலையக கல்வி வளர்ச்சிக்கான தடைக்கல்லாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. இன்றைய நவீன உலகம் கலைக் கல்வியை நம்பியதாக இல்லையென்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியம். இன்றைய நவீன உலகின் தேவைக்கு ஏற்றபடி மாணவர்கள் தயார் செய்யப்படுவது அவசியம். இல்லையேல் மாணவர்களின் கல்வியினால் எதிர்காலத்தில் நன்மை விளையப் போவதில்லை. கணித விஞ்ஞான பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கும் போது இன்றைய நவீன யுகத்துக்குரிய கல்வியை மலையகத்தில் எவ்வாறு எதிர்பார்கக் முடியும்?

மலையகக் கல்வியின் நிலைமை இவ்வாறு பின்னடைவாக இருக்கையில், கிழக்கில் இருந்து சாதகமான குரல்கள் ஒலித்திருக்கின்றன. கிழக்கில் சமீப காலமாக வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் நடத்தி வரும் பட்டதாரிகளில் பலர், தாங்கள் மலையகப் பாடசாலைகளுக்குச் சென்று கடமையாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கிழக்கில் உள்ள விஞ்ஞான கணிதப் பட்டதாரிகளில் ஒரு பகுதியினரே இவ்வாறு தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

மலையகக் கல்வியைப் பொறுத்த வரை இதனை சாதகமானதொரு அம்சமாகவே நாம் நோக்க வேண்டும். கிழக்கில் உள்ள கணித விஞ்ஞானப் பட்டதாரிகளில் ஒரு தொகையினருக்கு மலையகப் பாடசாலைகளில் நியமனம் வழங்குவதால் இருவித நன்மைகள் உள்ளன.

இப்பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பது ஒருபுறமிருக்க, மலையக மாணவர்களின் பிரச்சினைக்கும் தீர்வு கிட்டுவதற்கு வழியேற்படுகின்றது. மலையகக் கட்சிகள் இனிமேலும் அலட்சியமாக இருத்தல் கூடாது. மலையகத்தில் நீண்ட காலம் கற்பிக்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்பட்டதாரிகளை அங்குள்ள பாடசாலைகளுக்கு உள்வாங்கிக் கொள்வதே உசிதமான வழியெனத் தோன்றுகின்றது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...