Tuesday, March 19, 2024
Home » உக்ரைனின் கிராமம் ஒன்றின் மீது தாக்குதல்; 51 பேர் பலி

உக்ரைனின் கிராமம் ஒன்றின் மீது தாக்குதல்; 51 பேர் பலி

by Rizwan Segu Mohideen
October 7, 2023 2:56 pm 0 comment

உக்ரைனின் வடகிழக்கு கிராமம் ஒன்றின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டு மேலும் ஆறு பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர் இடம்பெறும் குப்பியான்ஸ் முன்னரங்கு பகுதியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் இருக்கும் ஹ்ரோசா என்ற கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை உணவகம் மற்றும் கடை ஒன்றில் மீது ஏவுகணை விழுந்துள்ளது. தாக்குதல் இடம்பெறும்போது பொதுமக்கள் பலரும் அங்கிருந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் ஆறு வயது சிறுவர் ஒருவரும் இருப்பதாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஒலே சின்ஹுபொவ் தெரிவித்துள்ளார்.

சுமார் 330 பேர் மாத்திரமே உள்ள அந்த கிராமத்தில் தாக்குதல் இடம்பெறும்போது குறித்த உணவக விடுதியில் மக்கள் நினைவஞ்சலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்ததாக உள்துறை அமைச்சர் இஹோர் கிளிமன்கோ தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். இது ஒரு பெரும் சோகம் நிறைந்த ஒன்றாகும்” என்று கிளிமன்கோ உக்ரைன் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

தாக்கப்பட்ட பகுதியில் குடியிருப்பாளர்களைத் தவிர இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என்று உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

எனினும் இது தொடர்பில் ரஷ்யா எந்த பதிலும் அளிக்கவில்லை. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ரஷ்யா இதற்கு முன்னர் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தாக்குதல் இடம்பெற்ற கிராமம் அமைந்திருக்கும் குபியன்ஸ்க் மாவட்டத்தில் உக்ரைனிய இலக்குகள் மீது 20 ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா நேற்று, வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தது.

19 மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடக்கம் கார்கிவ் பிராந்தியத்தில் அதிக உயிரிழப்புக் கொண்ட தாக்குதலாக இது அமைந்துள்ளது.

குபியன்ஸ்க் மாவட்டம் போர் ஆரம்பித்தபோது ரஷ்ய படைகளுக்கான பிரதான விநியோகப் பாதையாக இருந்த நிலையில் பல மாத போருக்குப் பின் கடந்த ஆண்டு செப்டெம்பரில் உக்ரைனிய படை அந்தப் பகுதியை மீட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT