Tuesday, March 19, 2024
Home » இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம்

இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம்

by sachintha
October 6, 2023 8:29 am 0 comment

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் என்பது மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த பிரகாரம் எமது வாழ்வை அமைத்துக்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அதனால் நபியவர்கள் மீதான எமது கடமையை அறிந்து செயல்படுவது அவசியம்.

பின்பற்றல் என்பது ‘அல்லாஹ்வும், நபியவர்களும், அவரது தோழர்களும் கொண்டு வந்தவற்றை பின்பற்றுவதை குறிக்கும்’ என்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதாகும் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பதாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் அத்தோடு உங்களது பாவங்களையும் மன்னிப்பான் என்று கூறுங்கள்’

(ஆதாரம்-: ஆல இம்ரான் 31)

நபியை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பின்பற்றி, அவர் பற்றிய செய்திகளை உண்மைப்படுத்தி, அவரது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவரது அழைப்புகளுக்கு பதிலளித்து மிக விருப்பத்தோடு அவரை மேலாக கருதினால்தான் அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுக்கொள்ள முடியும்’ என்று இமாம் இப்னுல் கையிம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

‘யார் அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராவார். யார் அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்படவில்லையோ (அதற்காக நீர் வருந்த வேண்டியதில்லை) உம்மை நாம் அவர்களை கண்காணிப்பவராக அனுப்பவில்லை

(ஆதாரம்:- நிஸா 180)

ஒருவர் இறைநேசத்தை பெற வேண்டுமானால் நபியை பின்பற்ற வேண்டும் என்பது இறை வழிகாட்டலாகும். ‘அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் அன்பு காட்டப்படுவீர்கள்’ (ஆதாரம்- ஆல இம்ரான் 132)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி வணக்க வழிபாடுகளையும் நற்செயல்களையும் செய்யாதபோது அவை அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறுவதில்லை. வணக்க வழிபாடுகள், செயல்பாடுகளின்போது அல்லாஹ்வின் திருப்தியை நாடி நிற்பதும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையை பின்பற்றுவதும் அவை அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகளாகும்.

நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவது ஈமானின் தூண்களில் ஒன்றாகும். நபிமார்கள் உலகிற்கு அனுப்பப்பட்டதன் நோக்கமே அவர்களுக்கு கட்டுப்படுவதுதான். நபிமார்கள் சொன்ன தீர்ப்பை உள்ளத்தில் எவ்வித சங்கடங்களுமின்றி பின்பற்ற வேண்டும்.

‘மக்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே நாம் தூதர்களை அனுப்பினோம்’, ‘அவர்கள் தங்களிடையே எழுந்த சர்ச்சைகளில் உம்மை (நபியை) நீதிபதியாக ஏற்று பின்னர் நீர் (நபி) தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் உள்ளங்களில் ஏற்படுத்திக்கொள்ளாமல் முற்றாக தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்’ என்றும் (ஆதாரம்-: தவ்பா 64, 65) அல் குர்ஆன் குறிப்பிட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட்டு நடப்பதன் மூலமே சுவனத்துக்கான பாதையான நேர்வழியில் பயணிக்கலாம். எனவே ஒருவன் சரியான பாதையில் பயணிக்க வேண்டுமானால் நபியவர்கள் சொன்ன பிரகாரம் அவருக்கு பூரணமாக கட்டுப்படுவதன் மூலம் மாத்திரமே அது சாத்தியமாகும். ‘அல்லாஹ்வுக்கு நீங்கள் கட்டுப்படுங்கள். தூதருக்கும் நீங்கள் கட்டுப்படுங்கள்…. நீங்கள் அவருக்கு கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள்

(ஆதாரம்-: நூர் 54)

நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவது உயர்ந்த அந்தஸ்துகளை பெறுவதற்கான ஒரு வழியாகும். ‘யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றாரோ அவர்கள் இறையருளைப் பெற்ற நபிமார்கள், சத்தியவான்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் ஆகியோர்களுடன் இருப்பார்கள். இவர்கள்தான் சிறந்த தோழர்கள். இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும். (ஆதாரம்-: நிஸா 69, 70)

ஒரு முஸ்லிமை பொருத்தவரையில் சுவனத்தை அடைவதுதான் அவனது வாழ்வில் அடையும் மகத்தான வெற்றியாகும். நபியை பின்பற்றுவதன் மூலம் சுவனம் என்ற மகத்தான வெற்றியை அடைந்துகொள்ள முடியும். ‘யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சுவனத்தில் நுழையச் செய்வான். அதன்கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கு நிலையாக தங்கியிருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (ஆதாரம்:- நிஸா 13)

‘எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்துகொள்வதோடு அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்கு மாறுசெய்வதைத் தவிர்ந்து நடந்து கொள்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்’

(ஆதாரம்:- நூர் 52)

இவ்வாறு பல ஹதீஸ்களும் நபியவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது. ‘மறுத்தவர்கள் தவிர எனது சமூகத்திலுள்ள அனைவரும் சுவனம் நுழைவார்கள்’ என்று நபியவர்கள் கூறியபோது, மறுத்தவர்கள் என்பது யாரை குறிக்கும் என்று ஸஹாபாக்கள் வினாத்தொடுத்தார்கள். அதற்கவர்கள் ‘யார் எனக்கு கட்டுப்பட்டாரோ அவர் சுவனம் நுழைவார். யார் எனக்கு மாறு செய்கிறாரோ அவர்தான் மாறு செய்தவர் ஆவார்’ என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: புஹாரி)

அதனால் நபி (ஸல்) அவர்களை பின்பற்றும் விடயத்தில் ஸஹாபாக்கள் மிக கரிசனையோடு நடந்துகொண்டார்கள். அனைத்து விடயங்களிலும் நபியை முன்மாதிரியாகக் கொண்டார்கள். அதேபோன்று நாமும் நபி(ஸல்) அவர்களைப் பூரணமாக பின்பற்றி இறையருளைப் பெற்றுக்கொள்வோம்.

அஷ் ஷெய்க் யூ.கே றமீஸ்…

எம்.ஏ. (சமூகவியல்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT