Saturday, April 20, 2024
Home » தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ‘நளீம் ஹாஜியார் நினைவுச் சொற்பொழிவு’

தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ‘நளீம் ஹாஜியார் நினைவுச் சொற்பொழிவு’

by sachintha
October 6, 2023 12:32 pm 0 comment

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட பொன் விழாவின் பிரதான நிகழ்வுகளிலொன்றான ‘நளீம் ஹாஜியார் நினைவுச் சொற்பொழிவு’ கடந்த (03) செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு 07, இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நளீம் ஹாஜியார் நினைவுப் பேருரை மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி ரிப்கி காஸிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி வாழ்வும் பணியும்’ என்ற தலைப்பில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் (நளீமி) பிரதான உரையையும் ‘கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி – அறிவுப் பங்களிப்பு’ எனும் தலைப்பில் ஜாமிஆ நளீமிய்யாவின் அரபு மொழி கற்கைத் துறைத் தலைவர் கலாநிதி அஷ்ஷெய்க் ஏ.பீ.எம் அப்பாஸ் (நளீமி) விசேட உரையையும் நிகழ்த்தினர்.

இதன்பின் ‘கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி; அறிவுத்துறைப் பங்களிப்பும் ஆய்வுப் பணிகளும்’ எனும் தலைப்பில் ஆய்வு நூல் ஒன்றும் இந்நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதல் நூலினை கலாநிதி சுக்ரியின் புதல்வரான ஆஸிப் சுக்ரி பெற்றுக்கொண்டார். அதன்பின், விழாவின் விசேட அதிதியாக கலந்து கொண்ட நளீமிய்யா பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் பிரதியை பெற்றுக் கொண்டார். நிகழ்வில் கௌரவ அதிதியாக ராபிதாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். லாபிர் மதனி கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், உலமாக்கள், கல்விமான்கள், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, எம்.எம். சுஹைர் உட்பட சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள், நளீமிய்யாவின் விரிவுரையாளர்கள், நளீமிய்யாவின் பழைய மாணவர்கள் மற்றும் சமூகத்தின் பல்துறைசார் ஆளுமைகள் உட்பட மர்ஹூம் நளீம் ஹாஜியார் மற்றும் மர்ஹூம் கலாநிதி சுக்ரி ஆகியோரின் குடும்பஸ்தவர்களும் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும்..

 

(அஜ்வாத் பாஸி)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT