Saturday, April 20, 2024
Home » மனித வாழ்வுக்கு பொறுமையின் தேவை

மனித வாழ்வுக்கு பொறுமையின் தேவை

by sachintha
October 6, 2023 6:27 am 0 comment

மனிதனின் தன்மைகள், பண்புகள், போக்குகள், இயக்கங்கள் குறித்து இஸ்லாம் தெளிவாக எடுத்தியம்பியுள்ளது. குறிப்பாக மனிதன் அவசரக்காரனாவும் பதற்றக்காரனாகவும் மாத்திரமல்லாமல் பலவீனனாகவும் படைக்கப்பட்டிருப்பதாக அல்லாஹ்தஆலா தன் அருள்மறையாம் அல் குர்ஆனில் குறிப்பிட்டிருக்கிறான்.

‘மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான்’ (70:19) என்றும் ‘மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்’ (4:28) என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் ‘ஜின்களையும் மனிதர்களையும் (அவர்கள் என்னை அறிந்து) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை’ (51:56) என்று குறிப்பிட்டுள்ள அல் குர்ஆன், ‘பூமிக்கான அல்லாஹ்வின் பிரதிநிதி மனிதன்’ எனவும் தெரிவித்திருக்கின்றது.

இந்த வசனங்கள் மனிதனுக்கு வழங்கும் செய்தி ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக உள்ளது. அதுவும் ஆழ அகலமான செய்தியாக விளங்குகிறது. அதனால் அச்செய்தியை உரிய ஒழுங்கில் புரிந்து செயற்படுவது மனிதனின் பொறுப்பாகும்.

பூமிக்கான அல்லாஹ்வின் பிரதிநிதி என்பது மாபெரும் அந்தஸ்து, கௌரவம், உயரிய பதவி. இதற்கு ஈடாக உலகில் எதுவும் இல்லை. இந்த உயரிய கௌரவத்தை மனிதனைத் தவிர வேறு எந்தப் படைப்புக்கும் அல்லாஹ் வழங்கவுமில்லை.

இப்பதவி தனிக் கௌரவத்திற்காக வழங்கப்பட்ட ஒன்றுமல்ல. மாறாக அப்பதவிக்கு ஏற்ப செயற்பட்டு அதற்குரிய பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கடமை மனிதனுக்குரியது. அவற்றை நிறைவேற்றுவதும் மிகவும் அவசியமானது. அதன் ஊடாகத் தான் எதிர்வரும் கப்ரு, மஹ்ஷ்ர் மற்றும் இறுதித் தீர்ப்பு நாள் வாழ்வுக்கட்டங்களை விமோசனம் மிக்கதாகவும் சுபீட்சமானதாகவும் அமைத்துக் கொள்ள முடியும்.

அதனால் இவ் உலக வாழ்வின் பெறுமதியையும் சிறப்பையும் உணர்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு முன்பாக உள்ளது. மனிதன் பெற்றுக்கொண்டுள்ள வாழ்வானது பல கட்டங்களைக் கொண்டது. அவற்றில் இவ் உலக வாழ்வு கட்டமும் ஒன்றாகும்.

உலக வாழ்வு கட்டத்தில் மனிதன் பெற்றுக் கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட தெரிவுச் சுதந்திரம் உள்ளிட்ட சிறப்புக்களும் தனித்துவங்களும் இதற்கு முன்னரான ஆழமுல் அர்வாஹ், கருப்பை ஆகிய வாழ்வு கட்டங்களில் கிடைக்கப்பெறவும் இல்லை. எதிர்வரும் கப்ரு, மஹ்ஷர் மைதானம், இறுதித் தீர்ப்புநாள் வாழ்வு கட்டங்களிலும் கிடைக்கப் பெறப்போவதுமில்லை.

அதனால் இவ் உலக வாழ்வுக் கட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை உரிய ஒழுங்கில் நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் எதிர்வரும் வாழ்வுக் கட்டங்களை விமோசனம் கொண்டதாகவும் சுபீட்சம் மிக்கதாகவும் அமையும். அதனை இலக்காகக் கொண்டு வாழ்வொழுங்கை அமைத்திடுவது இன்றியமையாததாகும்.

ஆனால் அவசரக்காரனாவும் பதற்றக்காரனாகவும் மாத்திரல்லாமல் பலவீனனாகவும் விளங்கும் மனிதனால் விமோசனம் மிக்கதும் சுபீட்சமானதுமான வாழ்வை இலக்காகக் கொண்டு பயணிப்பது என்பது இலகுவானதல்ல. அது பாரிய சவால் மிக்க காரியம். உலக வாழ்வுக்கட்டம் சவால்கள் நிறைந்தது. உலக கவர்ச்சிகளும் இன்பங்களும் மாயைகளும் அவனை வழி தவறச் செய்யக்கூடியன. அவனில் இயல்பாகவே காணப்படும் இச்சைகள், ஆசைகள், பலவீனம், அறியாமை, தீய எண்ணம், அவனது வழிதவறும் இயல்பு, சுயநலம், கர்வம், விரைவாகப் பலன்களை எதிர்பார்க்கும் அவசரத்தனம் என்பன அவனை வழிபிறழ துணைபுரியக்கூடியன. அவற்றுக்கு ஷைத்தானின் ஊசலாட்டங்கள், மிகைத்துவிட்ட அசத்தியம், இச்சையின் ஆதிக்கம் என்பன பாரிய பங்களிப்பை நல்கும்.

அதேநேரம் உலக வாழ்வுக்கட்டத்தில் முகம் கொடுக்கும் கஷ்டங்கள், நெருக்கடிகளின் போது உள்ளத்தில் ஏற்படும் வேதனைகள், கவலைகள், கசப்புணர்வுகள், பலவீன உணர்வு, களைப்பு, சோர்வு, நெருக்கடிகள், பாதிப்புக்கள், நிராசைகள், நம்பிக்கை இன்மை என்பனவும் கூட மனிதனை நஷ்டவாளியாக்குவதோடு கைசேதத்தையுமே அவனுக்கு தேடிக்கொடுக்கும்.

என்றாலும் இவ் உலக வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நிலைகுலைந்து விடவோ, வாழ்வை நிராகரித்து விடவோ முடியாது.

மனித வாழ்வே அழுத்தங்களாலும் நெருக்குதல்களாலும் சூழப்பட்டுள்ளது. அந்த நெருக்குதல்களும் அழுத்தங்களும் பெரும்பாலும் மனிதனை வழிதவறச் செய்யலாம். உலகக் கவர்ச்சியின் பக்கம் கவர்ந்திழுக்கக் கூடியவையாகவும் ஆசாபாசங்களில் மதிமயங்கி மனிதன் இலக்கை மறந்து விடக்கூடியனவாகவும் உலக மாயைகளில் மூழ்கி விடக்கூடியனவாகவும் அவை உள்ளன. ஆனால் அவை அற்ப இன்பங்களே. அதனை அல் குர்ஆனே, ‘இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய(அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை’ (3:185) என்று குறிப்பிட்டிருக்கிறது.

இவ்வாறு சவால்கள் நிறைந்துள்ள வாழ்வுக் கட்டத்தில் அவசரக்காரனாகவும், பதற்றக்காரனாகவும் பலவீனனாகவும் விளங்கும் மனிதனால் இலக்கு நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்வது என்பது இலகுவான விடயமல்ல. இருப்பினும் அந்த சவால்களையும் நெருக்குதல்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு இலக்கு நோக்கிய பாதையில் வெற்றிகரமாகப் பயணிக்க வேண்டும். அதுவே அல்லாஹ்வின் விருப்பமாகும். அதற்குத் தேவையான இறைவழிகாட்டல்களை அவன் வழங்கியே இருக்கின்றான். அதுவே அவனிடம் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டலாகவும் உள்ளது. அந்த வழிகாட்டல்களின் அடிப்படையில் பயணிக்கும் போது ஈருலகிலும் நிச்சயம் வெற்றிபெற்றிடலாம்.

அதனால் ஒவ்வொருவரும் தமது இலக்கு நோக்கிய பயணத்தின் நிமித்தம் மன இச்சைகளையும் உலக ஆசைகளையும் இன்பங்களையும் நெறிப்படுத்தி பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு பொறுமை இன்றியமையாததாகும். பொறுமை என்பது மனித வாழ்வுக்கு மிகவும் அவசியமான வழித்துணை சாதனம்.

அதனால்தான் அல் குர்ஆன் மனித வாழ்வுக்கு பொறுமையின் தேவையையும் முக்கியத்துவத்தையும் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த வகையில், ‘மேலும் அவர்கள் இம்மையில் (சிரமங்களைச்) சகித்து கொண்டிருந்ததன் காரணமாக சுவர்க்கத்தையும் (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான் (என்று கூறப்படும்). (76:12) என்றும் ‘ஆகிய இத்தகையவர்களுக்கு அவர்கள் (பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதுடன் அவற்றைச் செய்யும் போது ஏற்பட்ட) சிரமங்களைச் சகித்துக் கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகைகள் (மறுமையில்) கொடுக்கப்படும். ‘ஸலாம்’ (உண்டாவதாக) என்று போற்றி அதில் அவர்கள் வரவேற்கப்படுவார்கள். (25:75) என்றும் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் இவ் உலக வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு இலக்கு நோக்கி பயணிப்பதற்காக மகிழ்ச்சியிலும் இன்பத்திலும் துன்பத்திலும் அல்லாஹ்வின் தொடர்பில் நிலைத்திருப்பதற்கும் அவனுடைய விதியை ஏற்றுக்கொள்வதற்கும் உறுதியான நம்பிக்கையுடனும் திருப்தியுடனும் பணிவுடனும் விவகாரங்கள் அனைத்தையும் அவன் பக்கம் இட்டுச் செல்லவும் பொறுமை மிகவும் அவசியமானது. அதுவே உண்மையானதும் நிரந்தரமானதுமான வெற்றியைத் தேடித்தரக்கூடியதுமாகும்.

அதனால் தான், ‘நம்பிக்கையாளர்களே….. நீங்கள் பொறுமையைக் கடைபிடியுங்கள். எதிரிகளை விட நீங்கள் அதிகம் சகித்துக் கொள்ளுங்கள் (3:200) என்றும் ‘நம்பிக்கையாளர்களே…. (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் (2:153) என்றும் அல்லாஹ்வே குறிப்பிட்டிருக்கின்றான்.

ஆகவே வரையறுக்கப்பட்ட உலக வாழ்க்கையை அர்த்தபூர்வமாகவும் வெற்றிகரமாகவும் அமைத்துக் கொள்வதற்கு அல்லாஹ்வின் கட்டளைகள் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு அமைய பொறுமை, சகிப்பு தன்மையைக் கைகொள்வோம். அதுவே நிரந்தர இன்பத்தையும் விமோசனத்தையும் பெற்றுக்கொள்வதற்கான

வழியாகும்.

மர்லின் மரிக்கார்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT