மாயக்கல்லி மலையில் விகாரை அமைக்க 02 ஏக்கர் காணி; உரிமையாளருக்கு மாற்றுக் காணி | தினகரன்

மாயக்கல்லி மலையில் விகாரை அமைக்க 02 ஏக்கர் காணி; உரிமையாளருக்கு மாற்றுக் காணி

மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைக்க 2 ஏக்கர் காணியை வழங்குவதாகவும் அவ்விடத்திலுள்ள காணிச் சொந்தக்காரர்களுக்கு உடன் மாற்றுக் காணி வழங்குவதாகவும் மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாச கலகொட ,பொதுபலசேன அமைப்பின் செயலாளர் அத்தே ஞானசாரதேரரிடம் உறுதியளித்துள்ளார். பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொட அத்தே ஞானசார தேரர், அம்பாறை பௌத்த பிக்குகளுடன் நேற்று (25) இறக்காமம், மாயக்கல்லி மலையடிவாரத்திற்கு விஜயம் செய்தார்.

பின்னர் மாயக்கல்லிப் பிரதேச விகாரை விடயம் தொடர்பில் நேற்று (25) அம்பாறை கச்சேரியில் அரச அதிபர் துசித்த வணிகசிங்க தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டில் கலந்து கொண்டதேரரிடமே மாகாணக் காணி ஆணையாளர் டீ.டீ. அனுர தர்மதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்

இக்கூட்டத்தில், மாவட்ட உதவிக் காணி ஆணையாளர் டீ.டீ.எஸ். தக்சிலா குணரத்ன, மாவட்ட நில அளவை திணைக்கள அதிகாரிகள் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விகாரை நிர்மாணிப்பதற்கான காணியை வழங்காமை குறித்தும் அரச அதிபரிடம் ஞானசார தேரர் இதன்போது விசனம் தெரிவித்தார்.

இதனையடுத்து மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை நிர்மாணிக்க 2 ஏக்கர் காணியை வழங்குவதாகவும் அக் காணிச் சொந்தக்காரர்களுக்கு உடன் மாற்றுக் காணி வழங்குவதாகவும் மாகாணக் காணி ஆணையாளர் திரு அனுர தர்மதாச குறிப்பிட்டார்.

மேலும் விகாரைக்கான காணிக்கு ஒரு வார காலத்தில் உறுதிப்பத்திரம் வழங்குவதென்றும் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்தே விகாரை நிர்மாணிக்கப்படவிருக்கும் மாயக்கல்லி மலைப்பகுதியை ஞானசார தேரர் பார்வையிட்டார்.

மாயக்கல்லிப் பிரதேசத்தில் அடுத்த மாதம் (17) வரை எவரும் நுழையாதவாறு அம்பாறை மேலதிக மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஞானசார தேரர் :எமது பௌத்த நாட்டில் விகாரை அமைக்க நாம் எவரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை எனவும் தெரிவித்தார். 

அம்பாறை மத்திய குறூப் நிருபர்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...