Wednesday, April 24, 2024
Home » -வருடாந்தம் பில்லியன் கணக்கான உணவு அழிவடைவது தொடர்கிறது
சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுவது தடைப்பட்டாலும்

-வருடாந்தம் பில்லியன் கணக்கான உணவு அழிவடைவது தொடர்கிறது

by sachintha
October 6, 2023 7:53 am 0 comment

நீதிமன்ற உத்தரவால் குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், வருடந்தோறும் பில்லியன் கணக்கான உணவுப் பொருட்கள் அழிவடைது தொடர்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் எதிர்ப்புகள் இல்லையென்றாலும் சுற்றாடல் தொடர்பான அமைப்புகள் இதனை பலமாக எதிர்த்தன. இதனாலே, நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்ததாக அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் நிரோஷன் பெரேரா எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சீன நிறுவனம் ஒன்று இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது. அங்கு தனியார் துறைக்குச் சொந்தமான மிருகக்காட்சி சாலைகள் ஆயிரக்கணத்தில் உள்ளன. இதற்காகவே குரங்குகளை கொண்டு செல்வதற்கு அவர்கள் தீர்மானித்திருந்தனர். இதில் 2000 குரங்குகளை ஒரு மாதத்திற்குள் கொண்டு செல்வதற்கே உத்தேசித்திருந்தனர். இது தொடர்பில் நாம், பல மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட சகல நிறுவனங்களும் இணைந்ததாக இப்பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதன்போது நாம், சீன தூதுவராலயத்தின் மூலம் அந்த வேண்டுகோளை விடுக்குமாறு சீன அரசாங்க பிரதிநிதிகளுக்கு தெரிவித்தோம்.

அந்த வகையில் எமக்கு உத்தியோகபூர்வமாக அந்த வேண்டுகோள் கிடைத்தது. அதேபோன்று சீனாவில் உள்ள எமது தூதுவருடன் கலந்துரையாடி அந்தளவு மிருகக் காட்சி சாலைகள் அந்நாட்டில் உள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறும் கேட்டுக் கொண்டோம்.

சீனாவில், பாரிய அளவில் மிருகக் காட்சி சாலைகள் உள்ளதாகவும் இதற்காகவே குரங்குகள் பெருமளவு தேவைப்படுவதாகவும் எமக்கு தெரிவித்திருந்தார்.

இச்சந்தர்ப்பத்திலே, வனவிலங்குகள் தொடர்பான அமைப்புக்களின் எதிர்ப்புக்கள் வௌிகிளம்பின. சில அமைப்புக்கள் சீன அரசாங்கம் மற்றும் அந்த நாட்டை விமர்சிக்கும் வகையில் பெரும் பிரசாரங்களை முன்னெடுத்தன. இறைச்சிக்காக குரங்குகளை கொண்டு செல்கின்றார்கள். குரங்குகளின் மூளைக்கு அந்நாட்டில் பெரும் கிராக்கி என்றெல்லாம் வதந்திகள் பரவத் தொடங்கின. சில அரசியல் தரப்பினரும் அதையே செய்தனர்.

மீண்டும் அதற்கான பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போது, சுற்றாடல் தொடர்பான அமைப்புக்கள் நீதிமன்றத்திற்கு சென்றன. அவ்வழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் சார்பில் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், நீதிமன்றத்தின் மூலம் தற்காலிகமாக அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் உண்மையிலேயே குரங்குகளுக்கான பெரும் கேள்வி உள்ளது. மக்கள் மத்தியில் இருந்தும் இதற்கு பெரும் எதிர்ப்புகள் வரவில்லை.

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT